ARTICLE AD BOX
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமைச்செயலகத்தில் நேற்று முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
பொருளாதாரவியலாளர்கள் ரகுராம் ராஜன், எஸ்தர் டஃப்லோ, ழான் திரேஸ், அரவிந்த் சுப்பிரமணியன், எஸ்.நாராயண் ஆகியோருடன் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
அதில் பேசிய முதலமைச்சர் குறிப்பிட்ட முக்கிய அம்சங்கள்:
”பல்வேறு சமூகநலத் திட்டங்களை நிறைவேற்றி வரும் அதே வேளையில், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் வேகப்படுத்தி, 2030-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாடு ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை அடைய வேண்டும் என்று முனைப்போடு செயல்பட்டு வருகிறோம். கடந்த நான்கு ஆண்டுகளில் சுமார் 40 இலட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றிருக்கிறார்கள்.
பல ஆண்டு காலமாக, தமிழ்நாட்டில் சிறந்து விளங்கும் மோட்டார் வாகன உற்பத்தி, ஜவுளி உற்பத்தி, தோல்பொருட்கள் உற்பத்தி போன்ற துறைகள் மட்டுமல்லாமல், தோல் அல்லாத காலணி உற்பத்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறைப் பொருட்கள் உற்பத்தி, உலகளாவிய திறன் மையங்கள் ஆகியவற்றை புதிய வளர்ச்சித் துறைகளாக முன்னிறுத்தி, இந்தத் துறைகளிலும், இந்திய அளவில் அதிக முதலீடுகளை ஈர்த்திருக்கிறோம். இப்படிப்பட்ட தொழில் வளர்ச்சிக்கான பல்வேறு கட்டமைப்புத் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம்.
நான் முன்பே சொன்னது போன்று, நலத்திட்டங்களையும் கட்டமைப்பு மேம்படுத்துதலையும் ஒரே நேரத்தில் செய்வதற்குத் தேவையான ஆதாரங்களை நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம்.
அண்மையில், தமிழ்நாடு போன்ற வளர்ச்சியடைந்த மாநிலங்களின் நிதிப்பகிர்வு குறித்த நமது நியாயமான கோரிக்கைகளை முன்னிறுத்தி, ஒன்றிய அரசின் 16-ஆவது நிதிக் குழுவிடம் கோரிக்கை மனுவை அளித்தோம். ஒரு முற்போக்கான அணுகுமுறையை இந்த நிதி ஆணையம் கடைபிடிக்கும் என்று எதிர்நோக்கியுள்ளோம்.
மாநில அரசுகளின் நிதி நிலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஓய்வூதியத் திட்டத்தில், ஒன்றிய அரசு கொண்டு வந்திருக்கும் மாற்றங்களையும் ஆய்வு செய்துக்கொண்டு இருக்கிறோம்.” என்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.