4 ஆண்டுகளாக ஊதியமில்லை! செலவுக்காக இரவில் சாலையோர உணவகத்தில் பணியாற்றும் ஆசிரியர்!

3 hours ago
ARTICLE AD BOX

ஆசிரியப் பணியே அறப்பணி; அதற்கு உன்னை அர்ப்பணி என்பதற்கேற்ப கேரளத்தில் சில ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

கேரளத்தில் ஆசிரியர் ஒருவர் தனது பணி முடிந்ததும் நேராக வீட்டிற்குச் சென்று ஜீன்ஸ், டீ-சர்ட் அணிந்துகொண்டு சாலையோர கடைக்குச் சென்றுவிடுகிறார். மாலை சிற்றுண்டிக்காக அல்ல; பகுதிநேர வேலைக்காக. அங்கு இரவு முழுவதும் நின்றவாறு உணவுகளைப் பரிமாறி அதன் மூலம் கிடைக்கும் வருவாயின் மூலமே வாழ்க்கையை நடத்திக்கொண்டு வருகிறார்.

ஜீன்ஸ், டீ-சர்ட் அணிந்தால், தான் ஆசிரியர் என்பது யாருக்கும் தெரியாது என்பதற்காக அவர் நாள்தோறும் இவ்வாறு உடையணிந்து இந்த இரவுப் பணியைச் செய்துவருகிறார்.

பின்னிரவு வரை சாலையோர உணவகத்தில் வேலை செய்துவிட்டு, மறுநாள் காலை மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியராக பணிக்குச் சென்றுவிடுகிறார்.

கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியரின் நிலைதான் இது.

அவரின் பணி நியமனத்துக்கு அதிகாரப்பூர்வ ஒப்புதல் கிடைக்காததால், கடந்த 4 ஆண்டுகளாக ஊதியமே பெறாமல் அப்பள்ளியில் பணியாற்றிவருகிறார். ஆசிரியராகத் தனது நியமனத்துக்கு அங்கீகாரம் அளிக்கப்படும், ஊதியம் ஒதுக்கப்படும் என்ற நம்பிக்கையில் நாள்தோறும் பள்ளிக்குச் சென்றுகொண்டிருக்கிறார்.

விழாக் காலங்களில் கடைவீதிகளில் உள்ள துணிக் கடையிலும் பணிபுரிவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அந்த சமயங்களில் அவருக்குத் தெரிந்தவர்கள் கண்ணில் பட்டால், ''இது எனது நண்பரின் கடை; அவரை இறக்கிவிடுவதற்காக நான் இங்கு வந்தேன்'' எனப் பொய் கூறி மறைந்துவிடுவார்.

நிதிப்பற்றாக்குறையை சமாளிக்க, சமூகத்தில் இருந்து மறைந்து வாழ வேண்டியுள்ளது என்பதுதான் இதில் மிகவும் மோசமானது என அவர் குறிப்பிடுகிறார்.

பணியிடத்தில் ஆசிரியர்கள் ஒன்றாகச் சேர்ந்து வெளியே செல்லத் திட்டமிட்டால், 'திருமண நிகழ்வுக்குச் செல்ல வேண்டும்; குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்' எனப் பொய் கூறி விலகிவிடுகிறார். இதேபோன்று ஆசிரியர்கள் ஒன்றாக வெளியே சென்று சாப்பிடத் திட்டமிட்டாலும் 'வயிறு சரியில்லை; ஏற்கெனவே சாப்பிட்டுவிட்டேன் எனப் பசியுடன் பொய் கூற வேண்டியுள்ளது; இதைத்தவிர என்னால் வேறு என்ன செய்ய முடியும்' என வருத்தத்துடன் கூறுகிறார்.

’’பள்ளிக்கூடம் செல்ல பேருந்து கட்டணத்துக்கான சில்லறை கூட என்னிடம் இருக்காது; ரிக்‌ஷாவில் செல்ல யாராவது மேலும் இரு நபர்கள் வரமாட்டார்களா? எனக் காத்திருந்து புறப்படுவேன். சில நேரங்களில் நான் நம்பிக்கை இழந்து உடைந்து அழுவேன். அந்த நேரங்களில் எல்லாம் என்னைத் தேற்றி அனுப்புவது என் குடும்பத்தைப் பற்றிய எண்ணம் மட்டும்தான்’’ என்கிறார் ஆசிரியர்.

ஆசிரியருக்கே இந்த நிலை என்றால், ஆசிரியையின் நிலை இதைவிட மோசமாக உள்ளது.

கணவர் இறந்த நிலையில், மூன்று குழந்தைகளுடன் தனியொரு தாயாக உள்ள ஆசிரியை ஊதியமே இல்லாமல் பணிபுரிந்து வருகிறார். பணிநியமனத்துக்கான அங்கீகாரம் கிடக்காததால், ஊதியம் பெறும் ஆசிரியர் பட்டியலில் இவர் இடம்பெறவில்லை.

''குழந்தைகளுக்கு என்றாவது ஒருநாள்தான் உணவு சமைத்துத் தருவேன். மற்ற நாள்களில் அவர்கள் விடுதியிலேயே தங்கள் உணவை முடித்துக்கொள்வார்கள். குழந்தைகள் சிறு வயதாக இருக்கும்போதே அவர்களிடமிருந்து விலகி உள்ளேன். என்னால் வேறு பணியையும் தேடிக்கொள்ளவும் முடியவில்லை. அந்த நாள்களில் வேறு பள்ளிகளும் இல்லை.

என்னுடன் பணிபுரியும் சில ஆசிரியர்கள் இரவுப் பணி செய்து தங்கள் தேவைகளை பூர்த்தி செய்துகொள்கிறார்கள். ஆனால், பெண்ணாக இருப்பதால் அதுவும் எனக்கு சாத்தியமில்லை. இரவுச் சாலைகள் வெறிச்சோடி கிடக்கின்றன. அதில் ஆட்டோ ஓட்டவோ, சாலையோர உணவுக் கடைக்கு பின்பு நிற்கவோ துணிச்சல் இல்லை. தற்போது, என்னுடன் பணியாற்றும் ஆசிரியர்கள் சேர்ந்து ஒவ்வொரு மாதமும் எனக்காக ஒதுக்கும் சிறிய தொகையில் வாழ்க்கையை நடத்திவருகிறேன்'' எனக் கண்ணீருடன் குறிப்பிடுகிறார்.

இதுஒருபுறம் இருக்க, மாநிலம் முழுவதும் ஆரம்பப் பள்ளி முதல் உயர்நிலைப் பள்ளி வரை 16 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக பொதுக் கல்வித் துறை அறிக்கை தெரிவிக்கிறது.

எனினும், உயர்நிலை கல்வி ஆசிரியர்களுக்கான 2,200 பணியிடங்கள் இன்னும் உரிய அங்கீகாரம் வழங்கப்படாமல் உள்ளதாக ஆசிரியர் கூட்டமைப்பு கூறுகிறது.

ஆசிரியர்களின் கடினமான சூழலைப் போக்கும் வகையில் பணியிடங்களுக்கு அங்கீகாரம் கிடைக்குமா? புதிய பணியிடங்கள் நிரப்பப்படுமா?

இதையும் படிக்க | விமானத்தில் தேங்காய் கொண்டு செல்ல முடியாது! ஏன்?

Read Entire Article