28ம் தேதி கொட்டப்போகும் மழை.. 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

3 hours ago
ARTICLE AD BOX

28ம் தேதி கொட்டப்போகும் மழை.. 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

Weather
oi-Halley Karthik
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், 28ம் தேதி 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இது குறித்து விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில், "கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 37.0° செல்சியஸ் பதிவாகியுள்ளது. மற்றபடி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் ஏதுமில்லை. ஓரிரு இடங்களில் சற்று உயர்ந்து உள்ளது. குறிப்பாக இயல்பிலிருந்து 2° செல்சியஸ் அதிகமாகவும், ஏனைய இடங்களில் பொதுவாக இயல்பை ஒட்டியும் நிலவியது.

rain tamil nadu

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:

பிப்.24 மற்றும் 25ம் தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.

பிப்.26ம் தேதி கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள்தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

பிப்.27ல் கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

28ம் தேதி தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக,

தஞ்சாவூர்
திருவாரூர்
நாகப்பட்டினம்
மயிலாடுதுறை
புதுக்கோட்டை
ராமநாதபுரம்
தூத்துக்குடி
திருநெல்வேலி
கன்னியாகுமரி

ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மார்ச்.1ம் தேதி தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மார்ச்.2ல் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த 5 தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:

24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதலை பொறுத்த அளவில், இன்று தொடங்கி முதல் பிப்.26 வரை அடுத்த மூன்று தினங்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. 27 மற்றும் 28ம் தேதிகளில் அதற்கடுத்த இரண்டு தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறையக்கூடும்.

இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாட்டை பொறுத்த அளவில், 24 முதல் 26 வரை தமிழகத்தில் அடுத்த மூன்று தினங்களில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2 -3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகளில் 24 முதல் 27 வரை: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 28ம் தேதி எச்சரிக்கை ஏதுமில்லை.

வங்கக்கடல் பகுதிகள்:

இன்று தெற்கு அந்தமான் கடல்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல்பகுதிகள் மற்றும் அந்தமான் கடல்பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

25 மற்றும் 26ம் தேதி தெற்கு அந்தமான் கடல்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல்பகுதிகள் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

27ம் தேதி தெற்கு அந்தமான் கடல்பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடலின் மேற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 28ம் தேதி எச்சரிக்கை ஏதுமில்லை.

அரபிக்கடல் பகுதிகளில் 24 முதல் 28 வரை எச்சரிக்கை ஏதுமில்லை.

எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

More From
Prev
Next
English summary
As Tamil Nadu has been experiencing intense heat over the past few days, the Chennai Meteorological Department has warned that heavy rain will occur in 9 districts on the 28th.
Read Entire Article