24 தலித் மக்கள் கொல்லப்பட்ட வழக்கு: 44 ஆண்டுகளுக்குப் பின் 3 பேருக்கு மரண தண்டனை விதிப்பு!

12 hours ago
ARTICLE AD BOX

உ.பி.யில் தலித் சமூகத்தைச் சேர்ந்த 24 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 44 ஆண்டுகளுக்குப் பின் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் தெஹுலி கிராமத்தில் 1981 ஆம் ஆண்டு நவம்பர் 18 அன்று, மாலை 4.30 மணியளவில் காக்கி உடையணிந்த 17 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் ஊருக்குள் புகுந்தனர். இவர்கள் அங்கிருந்த தலித் சமூக மக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினர்.

இதில், 6 மாதங்கள் மற்றும் 2 வயதுடைய இரு குழந்தைகள் உள்பட 24 தலித் சமூகத்தினர் கொல்லப்பட்டனர்.

நவம்பர் 19, 1981 அன்று உள்ளூரைச் சேர்ந்த லயிக் சிங் என்பவரால் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக கொலை, கொள்ளை போன்ற வழக்குகளின் கீழ் குற்றவாளிகள் 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதையும் படிக்க | பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் லாலுவை குறிவைக்கும் பாஜக: பிரபுநாத் யாதவ்

இதில் 14 பேர் வழக்கு விசாரணை நடைபெற்ற காலத்திலேயே உயிரிழந்தனர். அப்போதே ஒருவர் தலைமறைவானதாக அறிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் விரிவான விசாரணையைத் தொடர்ந்து, கொள்ளைக் கும்பலின் தலைவர்கள் சந்தோஷ் மற்றும் ராதே உள்ளிட்ட கொள்ளையர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், 44 ஆண்டுகளுக்குப் பின்னர் உ.பி. மைன்புரி சிறப்பு நீதிமன்றம் குற்றவாளிகள் 3 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

குற்றவாளிகள் கப்தான் சிங் (60), ராம்பால் (60), ராம் சேவக் (70) ஆகியோருக்கு மரண தண்டனையுடன் தலா ரூ. 50,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. சிறப்பு நீதிபதி இந்திரா சிங் இதற்கான உத்தரவைப் பிறபித்தார்.

தலித் சமூகத்தினர் கொல்லப்பட்ட இந்தச் சம்பவம் நடைபெற்ற காலகட்டத்தில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்தார். அதே நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவரான அடல் பிஹாரி வாஜ்பாய், பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் தெரிவிக்க தெஹுலியிலிருந்து ஃபிரோசாபாத்தில் உள்ள சாதுபூர் வரை பாத யாத்திரை மேற்கொண்டார்

Read Entire Article