ARTICLE AD BOX
21 ஆண்டுகளில் 19,900% லாபம்.. ஜிஇ வெர்னோவா டி&டி இந்தியா பங்கு உங்கிட்ட இருக்கா?..
பொறுத்தார் பூமி ஆள்வார் என்ற பழமொழியை கேட்டு இருப்போம். அதே கொஞ்சம் மாற்றி, பொறுத்தார் கோடீஸ்வரர் ஆவார் என்று பங்குச் சந்தை முதலீட்டாளர்களிடம் நாம் சொல்லலாம். பொதுவாக பங்குச் சந்தையில் நீண்ட கால நோக்கில் முதலீடு செய்தால் மட்டுமே நமக்கு அபரிதமான வருமானம் கிடைக்கும். இதற்கு உதாரணமாக ஜிஇ வெர்னோவா டி&டி இந்தியா லிமிடெட் நிறுவன பங்கினை சொல்லலாம். கடந்த 21 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கு முதலீ்ட்டாளர்களுக்கு 19,900 சதவீதம் மல்டிபேக்கர் ஆதாயத்தை கொடுத்துள்ளது.
சர்வதேச எரிசக்தி நிறுவனமான ஜிஇ வெர்னோவாவின் துணை நிறுவனம் ஜிஇ வெர்னோவா டி&டி இந்தியா லிமிடெட். இந்நிறுவனம் மின்பரிமாற்றம் மற்றும் விநியோக உள்கட்டமைப்பில் நிபுணத்துவம் பெற்றது. பொறியியல், உற்பத்தி, திட்டமேலாண்மை மற்றும் தயாரிப்புகள் மற்றம் மின் பரிமாற்றத்திற்கான தீர்வுகளை வழங்கி வருகிறது. ஜிஇ வெர்னோவா டி&டி இந்தியா லிமிடெட் நிறுவனம் தொடர்ந்து லாபம் சம்பாதித்து வருகிறது. மேலும், நீண்ட கால அடிப்படையில் இந்நிறுவன பங்கும் முதலீட்டாளர்களுக்கு நல்ல வருமானத்தை கொடுத்து வருகிறது.

ஜிஇ வெர்னோவா டி&டி இந்தியா லிமிடெட் நிறுவனம் 2024 டிசம்பர் காலாண்டில் நிகர லாபமாக ரூ.142.7 கோடி ஈட்டியுள்ளது. இது 2023 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 189 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.49.3 கோடி மட்டுமே நிகர லாபமாக ஈட்டியிருந்தது. கடந்த டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் 27.8 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.1,073.70 கோடியாக உயர்ந்துள்ளது. 2023 டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.840 கோடி ஈட்டியிருந்தது.
கடந்த 21 ஆண்டுகளில் ஜிஇ வெர்னோவா டி&டி இந்தியா லிமிடெட் பங்கு முதலீட்டாளர்களுக்கு 19,900 சதவீதம் மல்டிபேக்கர் வருமானத்தை கொடுத்துள்ளது. 21 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.7 என்ற அளவில் இருந்த இந்நிறுவன பங்கின் விலை தற்போது ரூ.1,400 என்ற அளவில் உயர்ந்துள்ளது.21 ஆண்டுகளுக்கு முன் ஒருவர் இந்நிறுவன பங்கில் ரூ.1 லட்சம் முதலீடு செய்து இருந்தால் அது இன்று ரூ.2 கோடியாக உயர்ந்திருக்கும். கடந்த 5 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கின் விலை 1,000 சதவீதத்துக்கு மேல் உயர்ந்துள்ளது. கடந்த ஓராண்டில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களின் பணத்தை 43.60 சதவீதம் பெருக்கியுள்ளது. நேற்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் இப்பங்கின் விலை ரூ.1,385.30ஆக இருந்தது.
Story written by: Subramanian