ARTICLE AD BOX
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்திலும், 4-வது போட்டியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. 3-வது டி20 போட்டியில் மட்டும் இங்கிலாந்து அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதனை தொடர்ந்து இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடந்தது.
இந்நிலையில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணியில் சஞ்சு சாம்சனும், அபிஷேக் ஷர்மாவும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். சாம்சன் 16 ரன்னில் அவுட் ஆன நிலையில் அடுத்து களம் இறங்கிய திலக் வர்மாவின் ஒத்துழைப்புடன் அபிஷேக் ஷர்மா, அதிரடியில் வெளுத்து கட்டினார்.
இங்கிலாந்து பந்தை பந்தாடிய இந்திய அணியின் ஸ்கோர் மின்னல் வேகத்தில் எகிறியது. 17 பந்துகளில் அபிஷேக் ஷர்மா அரைசதத்தை கடந்தார். வேகப்பந்து வீச்சு மட்டுமின்றி சுழற்பந்து வீச்சையும் அபிஷேக் விட்டுவைக்கவில்லை. அடில் ரஷித், லிவிங்ஸ்டன் ஓவர்களிலும் பந்து எல்லைக்கோட்டை தாண்டி ஓடின. 6.3 ஓவர்களில் இந்தியாவின் ஸ்கோர் 100-ஐ தொட்டது. மைதானத்தின் நாலாபுறமும் பந்துகளை தெறிக்க விட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்தார் அபிஷேக் ஷர்மா. இதற்கிடையே திலக் வர்மா 24 ரன்னிலும், அதன் பின்னர் களம் இறங்கிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் 2 ரன்னிலும ஆவுட் ஆகினர்.
18-வது ஓவரில் அவுட் ஆன அபிஷேக் ஷர்மா 135 ரன்களை எடுத்து சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்த இந்தியர் என்ற பெருமையோடு பெவிலியன் திரும்பினார். 20 ஓவர் முடிவில் இந்தியா அணி 9 விக்கெட்டு இழப்புக்கு 247 ரன்கள் குவித்தது. அதனை தொடர்ந்து 248 ரன் இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி ஆடத்தொடங்கியது.
பில் சால்ட் ஒரு பக்கம் அதிரடி காட்ட இந்திய வீரர்களின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் இன்னொரு பக்கம் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. 10.3 ஓவர்களை மட்டுமே தாக்குப்பிடிக்க முடிந்த இங்கிலாந்து அணி 97 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்தியா 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிக்கனியை ருசித்தது.
இந்திய தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட்டும், வருண் சக்ரவர்த்தி, ஷிவம் துபே, அபிஷேக் ஷர்மா தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர். அபிஷேக் ஷர்மா ஆட்டநாயகன் விருதையும், சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி தொடர்நாயகன் விருதையும் பெற்றனர்.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை இந்தியா 4-1 என்ற கணக்கில் வசப்படுத்தியது.