ARTICLE AD BOX
கோவை மாநகராட்சியின் 84-வது வார்டில் சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு தார் சாலை போடப்பட்டதால் மாமன்ற உறுப்பினருக்கு பொதுமக்கள் சார்பில் விருந்து வைக்கப்பட்டது.
தமிழகத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. அதன் பின்னர், மாமன்ற உறுப்பினர்கள் சார்பாக பொதுமக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கோவை மாநகராட்சிக்குட்பட்ட 84-வது வார்டின் கரும்புகடை பாத்திமா நகர் பகுதியில் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை வசதி இன்றி பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர்.
இப்பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், குறிப்பிட்ட பகுதியில் சாலை வசதி இல்லாததால் மழைக் காலங்களில் தண்ணீர் தேங்கி நின்று நோய் தொற்று பரவும் அபாயம் இருந்தது. இந்த சூழலில், மாமன்ற உறுப்பினர் அலீமா ராஜாஉசேனின் தொடர் முயற்சியால் அப்பகுதியில் சாலை வசதி மற்றும் வடிகால் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.
இதனால் மகிழ்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் மாமன்ற உறுப்பினருக்கு விருந்து வைத்து பாராட்டு விழா நடத்தினர். இச்சம்பவம் சுற்றுவட்டார பகுதியினரை வியப்படையச் செய்துள்ளது.
செய்தி - பி.ரஹ்மான்