ARTICLE AD BOX
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான சையத் அபித் அலி, இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளில் இந்தியாவின் மறக்க முடியாத டெஸ்ட் வெற்றிகளில் ஆல்ரவுண்டராக முக்கிய பங்கு வகித்திருந்தார். அவரது காலத்தில் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவரான அபித் அலி, 1967 மற்றும் 1975க்கு இடையில் 29 டெஸ்ட் மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். குறிப்பாக, 1971இல் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இங்கிலாந்தில் இந்தியாவின் வரலாற்று வெற்றிகளில் அவர் முக்கிய பங்கு வகித்தார்.
1941 செப்டம்பர் 9ஆம் தேதி ஹைதராபாத்தில் பிறந்த அபித் அலி, 1967-68 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தனது முதல் டெஸ்ட் சுற்றுப்பயணத்தில் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தினார். அடிலெய்டில் நடந்த தனது முதல் டெஸ்டில், முதல் இன்னிங்ஸில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன் இரண்டு இன்னிங்ஸிலும் தலா 33 ரன்கள் எடுத்தார். இருப்பினும் இந்தியா 146 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
தொடர்ந்து சிட்னியில் நடந்த ஒரு மறக்க முடியாத போட்டியிலும் அவர் சிறந்த பங்களிப்பைத் தந்தார். 1975ஆம் ஆண்டு நடைபெற்ற தொடக்க ஆண்கள் ஒருநாள் உலகக் கோப்பையில் அவர் ஐந்து ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றார். மான்செஸ்டரில் நியூசிலாந்திற்கு எதிரான ஒரு சிறப்பான ஆட்டத்தில், அவர் 98 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி, தனது ஆல்ரவுண்ட் திறமையை வெளிப்படுத்தினார். அவர் இன்னும் நவீன யுகத்தில் விளையாடியிருந்தால், வெள்ளை பந்து கிரிக்கெட்டில் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக இருந்திருப்பார் என அவர் காலத்தைய ஜாம்பவான்கள் தெரிவித்தனர்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, அவர் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். அங்கு இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதிலும் வழிகாட்டுவதிலும் பங்களித்தார். இந்த நிலையில், அவர் தன்னுடைய 83 வயதில் காலமானார். அவருடைய மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், "மிகவும் வருத்தமான செய்தி. அவர் ஒரு சிங்க இதயம் கொண்ட கிரிக்கெட் வீரர். அணிக்குத் தேவையான அனைத்தையும் செய்தார். மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்யும் ஆல்ரவுண்டராக இருந்தபோதிலும், தேவைப்படும்போது பேட்டிங்கைத் தொடங்கினார். லெக் சைடு கார்டனில் சில நம்ப முடியாத கேட்சுகளை எடுத்தார். எங்கள் அற்புதமான சுழற்பந்து வீச்சாளர் குழுவிற்கு இன்னும் கூர்மையான பலத்தை அளித்தார். அவரது குடும்பத்தினருக்கு மனமார்ந்த இரங்கல்கள்" என அவர் தெரிவித்துள்ளார்.
சையத் அபித் அலி, 29 டெஸ்ட் போட்டிகளில் 1,018 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் 47 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 212 முதல் தர போட்டிகளில் விளையாடி 13 சதங்கள் உட்பட 8,732 ரன்கள் குவித்துள்ளார். மேலும் 397 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இதில், 14 முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.