ARTICLE AD BOX
ராமேசுவரம்,
இந்தியாவுக்கும்-இலங்கைக்கும் இடையே உள்ள கச்சத்தீவில் அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை அரசால் கச்சத்தீவில் புதிதாக அந்தோணியார் ஆலயம் கட்டப்பட்டு அதில் திருவிழாவும் நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டுக்கான கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது. நாளை மாலை 5 மணி அளவில் ஆலயம் முன்புள்ள கொடிமரத்தில் நெடுந்தீவு பங்குத்தந்தை பத்திநாதன் மற்றும் ராமேசுவரம் வேர்க்கோடு பங்குத்தந்தை அசோக் வினோ ஆகியோர் அந்தோணியாரின் திரு உருவம் பதித்த கொடியை ஏற்றுகின்றனர். தொடர்ந்து ஆலயத்தைச் சுற்றி சிலுவை பாதை திருப்பலி நடைபெறும். இரவு 8 மணி அளவில் அந்தோணியாரின் சொரூபம் வைக்கப்பட்ட மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரை இலங்கை கடற்படை மற்றும் இருநாட்டு பக்தர்களும் சேர்ந்து தோளில் சுமந்து, ஆலயத்தை சுற்றிவரும் தேர் பவனி நடக்கிறது.
நாளை மறுநாள் காலை 7 மணி அளவில் திருவிழா திருப்பலி நடக்கிறது.கச்சத்தீவு ஆலய திருவிழாவுக்கு ராமேசுவரத்தில் இருந்து 78 விசைப்படகுகளும், 23 நாட்டுப்படகுகளும் ெசல்ல அனுமதிக்கப்பட்டு இருக்கிறது. மொத்தம் 3,424 பேர் பதிவு செய்துள்ளனர். நாளை காலை 6 மணியில் இருந்து போலீசாரின் சோதனைக்கு பின்னர் ஒவ்வொரு படகாக வரிசை எண் அடிப்படையில் கச்சத்தீவுக்கு புறப்பட்டு செல்கின்றன.
திருவிழாவை முன்னிட்டு நேற்று முதல் 5 நாட்கள் ராமேசுவரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல விதிக்கப்பட்ட தடை காரணமாக ராமேசுவரம் துறைமுக பகுதியில் நேற்று 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டன.