ARTICLE AD BOX
திருச்சி: திருச்சி வயலூரில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 17 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று (19ம்தேதி) கும்பாபிஷே விழா நடைபெற்றது. காலை 9.15 மணிக்கு சகல விமானங்கள், ராஜகோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை முழங்கியபடி, கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றினர். இதில் கலந்து கொண்ட ஏராளமான பக்தர்கள், பக்தி பரவசத்துடன் வெற்றிவேல் முருகனுக்கு ‘அரோகரா’ என்று கோஷம் எழுப்பினர். பின்னர் அனைத்து பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின்கீழ் பயிற்சி பெற்ற பிரபு, ஜெயபால் என்ற அர்ச்சகர்கள், இந்த குடமுழுக்கு விழாவில் பங்கேற்று குடமுழுக்கு செய்தனர். இது குறித்து பிரபு கூறுகையில், ‘‘ என்னுடைய கைகளால் குடமுழுக்கு செய்தது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. இதைவிட என் வாழ்வில் வேறு என்ன இருக்கிறது. இதைவிட என்வாழ்வில் பெரிய பாக்கியம் எதுவும் இல்லை. இந்த வாய்ப்பை அன்று ஏற்படுத்தி தந்த முத்தமிழ் அறிஞருக்கும், அதனை இன்றுவரை செயல்படுத்தும் தமிழக முதல்வருக்கும், அமைச்சர் சேகர்பாபுவிற்கும் நன்றியை தெரிவித்துகொள்கிறேன்,’’என்றார்.
The post 17 ஆண்டுகளுக்கு பிறகு வயலூர் முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம் appeared first on Dinakaran.