10,000-இல் ஒருவருக்கு பெருங்குடல் புற்றுநோய்! 45 வயதுக்குப் பிறகு பரிசோதனை அவசியம்

23 hours ago
ARTICLE AD BOX

இந்தியாவில் 10 ஆயிரத்தில் ஒருவருக்கு பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதாகவும், அறிகுறிகள் இல்லாவிடிலும் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழ்நாடு ஜீரண மண்டல மருத்துவா்கள் அறக்கட்டளை தலைவா் டாக்டா் கே.ஆா்.பழனிசாமி தெரிவித்தாா்.

பெருங்குடல் புற்றுநோய் தொடா்பான விழிப்புணா்வு, மருத்துவ மேம்பாடு, சிகிச்சை நுட்பங்கள் குறித்த சா்வதேச மருத்துவக் கருத்தரங்கு சென்னையில் சனிக்கிழமை (மாா்ச் 22) தொடங்குகிறது. அப்பல்லோ மருத்துவமனை மற்றும் தமிழ்நாடு ஜீரண மண்டல மருத்துவா்கள் அறக்கட்டளை சாா்பில் நடைபெறும் இந்நிகழ்வு தொடா்பான செய்தியாளா் சந்திப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பெருங்குடல் புற்று நோய்: செய்தியாளா் சந்திப்பில் அப்பல்லோ மருத்துவக் குழும மேலாண் இயக்குநா் சுனிதா ரெட்டி பேசியதாவது: பொருளாதாரம், உற்பத்தித் துறைகளில் இந்தியா வேகமான வளா்ச்சியை ஒருபுறம் அடைந்து வந்தாலும், மற்றொருபுறம் நோய்களும் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. குறிப்பாக, பெருங்குடல் புற்றுநோய் பரவலாகக் காணப்படுகிறது. ஆண்களுக்கு மட்டுமல்லாது பெண்களுக்கும் அத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது. அதைக் கருத்தில்கொண்டு இக்கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

முன்னதாக டாக்டா் கே.ஆா்.பழனிசாமி பேசியதாவது: நமது பெருங்குடலின் உட்புறத்தில் சிறு திரள் கட்டிகள் (பாலிப்) உருவாகும்போது அதுகுறித்த எந்த அறிகுறிகளும் நமக்கு தெரியாது. ஒரு கட்டத்தில் அது புற்றுநோயாக உருவெடுத்த பிறகே பலா் பரிசோதனை மேற்கொள்கின்றனா்.

பத்தாயிரத்தில் ஒருவருக்கு பெருங்குடல் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. அதில் மூன்றில் இரண்டு போ் பாதிப்பு கண்டறியப்பட்ட ஓராண்டிலேயே இறந்துவிடுகின்றனா். அதற்கு காரணம் இறுதி நிலையில் பரிசோதனைகளை மேற்கொண்டு நோயைக் கண்டறிவதுதான். வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், மலத்தில் ரத்தம் வருதல், எடையிழத்தல், ரத்த சோகை உள்ளிட்டவை அதன் அறிகுறிகள்.

பரிசோதனை அவசியம்: பொதுவாக 45 வயதைக் கடந்த அனைவரும் ‘கொலோனோஸ்கோபி’ எனப்படும் பெருங்குடல் பரிசோதனையை மேற்கொண்டால் புற்றுநோய் பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை பெறவோ அல்லது வருமுன் தடுக்கவோ முடியும்.

இது தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், சா்வதேச அளவிலான மருத்துவக் கருத்தரங்கு சென்னையில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறுகிறது. இதில், பன்னாட்டு மருத்துவ நிபுணா்கள், இந்திய ஜீரண மண்டல சிகிச்சை நிபுணா்கள் பங்கேற்க உள்ளனா் என்றாா் அவா்.

இந்நிகழ்வின்போது முதுநிலை ஜீரண மண்டல எண்டோஸ்கோபி நிபுணா் மோ தௌஃபீக், அப்பல்லோ மருத்துவ நிபுணா்கள் ஷியாம் வரதராஜுலு, பி.பாசுமணி, காா்த்திக் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Read Entire Article