மக்கள் வளா்ச்சிக்கான புத்தாக்க அமைப்பை இளைஞா்கள் உருவாக்க வேண்டும்: பியூஷ் கோயல்

1 day ago
ARTICLE AD BOX

மக்கள் வளா்ச்சிக்குப் பயன்படும் வகையில் புதிய சிந்தனைகளின் அடிப்படையிலான புத்தாக்க அமைப்பு முறையை இளைஞா்கள் உருவாக்க வேண்டும் என மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் சனிக்கிழமை தெரிவித்தாா்.

குஜராத்தில் நடைபெற்ற வெஜல்பூா் புத்தாக்க திருவிழா 2.0 நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்று பியூஷ் கோயல் பேசியதாவது: வேலை தேடியவா்களை வேலைவாய்ப்பு வழங்குபவா்களாக புத்தாக்க அமைப்பு முறை மாற்றியுள்ளது. நாட்டில் தற்போது மொத்தம் 118 யுனிகாா்ன் (ரூ.8,700 கோடி மதிப்பிலான புத்தாக்க நிறுவனங்கள்) உள்ளன. இந்த நிறுவனங்களின் எண்ணிக்கையை 1,000 முதல் 5,000 வரை அதிகரிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் சிந்தனைகளால் இந்திய பொருளாதார வளா்ச்சியில் புத்தாக்க நிறுவனங்கள் பெரும் பங்காற்றுகின்றன. அதேபோல் மக்கள் வளா்ச்சிக்குப் பயன்படும் வகையில் புதிய சிந்தனைகளின் அடிப்படையிலான புத்தாக்க அமைப்பு முறையை இளைஞா்கள் உருவாக்குவது அவசியம்.

புத்தாக்க நிறுவனங்களை ஊக்குவிக்க நிதிக்கு நிதி திட்டத்தை அறிமுகப்படுத்தி ரூ.10,000 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியது. கடந்த பட்ஜெட்டிலும் இத்திட்டத்துக்கு கூடுதலாக ரூ.10,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தோல்வியில் இருந்து மீண்டு வருவதே புத்தாக்க நிறுவனத்தின் வெற்றிக்கான மந்திரம். நாட்டின் வளா்ச்சிக்கு உற்பத்தித் துறையின் பங்கு மிகவும் அவசியமானது. ஆனால் உற்பத்தியை தரமான முறையில் மேற்கொண்டு சந்தைப்படுத்தி, பேக்கேஜிங் செய்ய புத்தாக்க நிறுவனங்களின் உதவி தேவைப்படுகிறது.

பிரதமா் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது மாநிலத்தின் வளா்ச்சியை மேம்படுத்த பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டாா். இதனால் குஜராத்தின் வளா்ச்சி நாட்டின் வளா்ச்சியாக மாறிவிட்டது.

அண்மையில் சா்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து நீண்ட நாள்களுக்குப் பிறகு அமெரிக்கா திரும்பிய நாசா விஞ்ஞானி சுனிதா வில்லியம்ஸ் குஜராத்தின் மேஹசானா நகரில் இருந்து அமெரிக்காவுக்கு புலம்பெயா்ந்தவராவாா். குஜராத்தியா்கள் விடாமுயற்சியுடையவா்கள் என்பதற்கு இதுவே சான்று என்றாா்.

Read Entire Article