ARTICLE AD BOX
1,100-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் ஜியோஸ்டார்.. அழுது புலம்பும் ஊழியர்கள்!
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் வியாகாம்18 மற்றும் வால்ட் டிஸ்னி கோ-வின் இந்திய யூனிட் இணைந்து "ஜியோஸ்டார்" என்ற நிறுவனத்தை உருவாக்கியுள்ளன. இந்த 2 நிறுவனங்களும் இணைந்த பிறகு ஜியோஸ்டார் தேவையற்ற ரோல்களை நீக்கும் முயற்சியாக 1,100-க்கும் மேற்பட்ட ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் தொடங்கியுள்ளது. ஒரு மாதத்திற்கு முன்பு தொடங்கிய இந்த பணிநீக்கங்கள் ஜூன் மாதம் வரை தொடரும் என்று தகவல் தெரிந்த வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
ஜியோஸ்டாரின் பணிநீக்கம் குறித்து வெளியான அறிக்கையின்படி விநியோகம், நிதி, வணிகம் மற்றும் சட்டக் குழுக்களில் உள்ள பதவிகளே முக்கியமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ஆரம்ப நிலை ஊழியர்கள் முதல் மூத்த மேலாளர்கள், இயக்குநர்கள் மற்றும் உதவி துணைத் தலைவர்கள் வரை அனைத்து மட்டங்களிலும் உள்ள ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சாம்பியன்ஸ் டிராபி, உமன் பிரீமியர் லீக் (WPL), மற்றும் இந்தியன் பிரீமியர் லீக் (IPL) ஆகியவை தொடர்ச்சியாக திட்டமிடப்பட்டுள்ளதால், விளையாட்டு பிரிவை சேர்ந்த ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படவில்லை. இருப்பினும் கலர்ஸ் கன்னடம், கலர் பங்களா போன்ற சேனல்களில் பணிபுரிந்தவர்களையும் இந்த பணி நீக்கம் பாதித்துள்ளது. இனிவரும் நாட்களிலும் இது தொடரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் செயல்படும் டிஸ்னி ஸ்டார் வலுவான இருப்பை கொண்டுள்ளது. குறிப்பாக மேலே கூறப்பட்ட மொழிகளெல்லாம் ஒளிபரப்பப்படும் சேனல்களில் டிஸ்னி ஸ்டார் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதோடு அதிக பார்வையாளர்களையும் கொண்டுள்ளது.
இந்நிலையில் வியாகாம்18 நிறுவனத்தின் பிராந்திய சேனல்களும் இதே சந்தையில் செயல்படும்போது 2 நிறுவனங்களுக்கும் இடையே போட்டியும், செலவும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே ஜியோஸ்டார் நிறுவனம் வியாகாம்18-இன் சில சேனல்களை மூடுவது மற்றும் இணைப்பது குறித்து நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது.
ஏற்கனவே டிஸ்னி ஸ்டார் வலுவாக உள்ள சந்தைகளில் வியாகாம்18-இன் சேனல்களை குறைத்து செலவுகளை கட்டுப்படுத்தவும் ஜியோஸ்டார் திட்டமிட்டு வருகிறது. ஜியோஸ்டார் நிறுவனம் விளையாட்டு பிரிவில் புதிய சேனல்களை தொடங்கவும் திட்டமிட்டுள்ளது. விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கு அதிக பார்வையாளர்கள் இருப்பதால் இந்த துறையில் விரிவாக்கம் செய்வது வருமானத்தை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறது.
ஏன் இந்த பணிநீக்கம்?: ரிலையன்ஸ் மற்றும் டிஸ்னி-இன் இணைப்பு இந்தியாவில் மிகப்பெரிய ஊடக நிறுவனத்தை உருவாக்கி இருக்கிறது. இந்நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு 70,352 கோடியாகும். இந்த ஆட்குறைப்பு முக்கியமாக செயல்பாடுகளை ஒழுங்கமைக்கும் ஒரு பகுதியாக எடுக்கப்பட்டுள்ளது.