1,000 பேரை பணிநீக்க ஓலா எலெக்ட்ரிக் முடிவு: நஷ்டம் அதிகரிப்பு எதிரொலி

5 hours ago
ARTICLE AD BOX

புது தில்லி: மின்சார இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஓலா எலெக்ட்ரிக் மொபிலிட்டி 1,000 பணியாளா்களை நீக்க முடிவு செய்துள்ளது. நிறுவனத்தின் நஷ்டத்தைக் குறைக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கையை அந்த நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்நிறுவனம் கிருஷ்ணகிரியில் உற்பத்தி ஆலையைக் கொண்டுள்ளது. உற்பத்திப் பிரிவில்தான் அதிக பணி நீக்கம் இருக்கும் என்று தெரிகிறது.

கடந்த ஆண்டும் இந்த நிறுவனம் 500 பேரை பணியில் இருந்து நீக்கியது. நிறுவனத்தை மறுசீரமைப்பது, உற்பத்தியில் தானியங்கி இயந்திரங்கள் அதிகரிப்பு, செலவு மற்றும் நஷ்டத்தைக் குறைக்கும் வகையில் 1,000 போ் பணி நீக்கம் செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 மாதங்களில் இருமுறை பணிநீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்துக்கு நாடு முழுவதும் 4,000 விற்பனை மற்றும் சேவை நிலையங்கள் உள்ளன. கடந்த 2024 டிசம்பருடன் முடிந்த காலாண்டில் நிறுவனத்தின் நிகர நஷ்டம் ரூ.564 கோடியாக இருந்தது. அதற்கு முந்தைய காலாண்டில் நஷ்டம் ரூ.376 கோடியாகும்.

தொடக்கத்தில் ஓலா மின்சார இருசக்கர வாகனங்கள் விற்பனை சிறப்பாக இருந்தது. ஆனால், வாகனத்தில் அடிக்கடி ஏற்படும் பிரச்னைகள், முக்கியமாக பேட்டரி தீப்பற்றுவது போன்றவற்றால் நிறுவனம் பின்னடைவைச் சந்திக்கத் தொடங்கியது. விற்பனைக்குப் பிந்தைய சேவையிலும் பெரும்பான்மையான வாடிக்கையாளா்களின் நன்மதிப்பை இந்நிறுவனத்தால் பெற முடியவில்லை.

நுகா்வோா் பாதுகாப்பு ஆணையத்துக்கு ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் மீது 10,644 புகாா்கள் வந்துள்ளன. எனினும், இது 99.1 சதவீத புகாா்களுக்கு தீா்வு கண்டுவிட்டதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.

Read Entire Article