ARTICLE AD BOX
துபாய்: வங்கதேச அணியின் மூத்த வீரர் முஷ்பிகுர் ரஹீம், ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான அவர், கடைசி சில வாரங்கள் தனக்கு மிகவும் சவாலானதாக இருந்ததாலும், இனி ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற முடிவு எடுத்து இருப்பதாக அறிவித்து இருக்கிறார். 37 வயதான நிலையில் அவர் இந்த ஓய்வு முடிவை எடுத்துள்ளார்.
இது குறித்து முஷ்பிகுர் ரஹீம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "நான் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து இன்று முதல் ஓய்வை அறிவிக்கிறேன். இறைவனுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். சர்வதேச அளவில் எங்களின் சாதனைகள் குறிப்பிட்ட அளவு தான் இருக்கிறது என்றாலும், ஒரு விஷயத்தை மட்டும் நான் உறுதியாக சொல்லிக் கொள்கிறேன். நான் நாட்டுக்காக எப்போதெல்லாம் ஆடினேனோ அப்போதெல்லாம் நூறு சதவீதம் எனது அர்ப்பணிப்புடனும், நேர்மையாகவும் இருந்தேன். கடைசி சில வாரங்கள் எனக்கு மிகவும் சவாலானதாக இருந்தது. இதுதான் எனது முடிவு என்பதை நான் உணர்ந்தேன். எனது நண்பர்கள், குடும்பத்தினர், ரசிகர்கள் ஆகியோருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

முஷ்பிகுர் ரஹீம் வங்கதேச அணிக்காக 274 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7795 ரன்கள் எடுத்திருக்கிறார். இதில் ஒன்பது சதங்களும், 49 அரை சதங்களும் அடங்கும். வங்கதேச அணிக்காக அதிக ஒருநாள் போட்டி ரன்களை குவித்த வீரர்கள் பட்டியலில் முஷ்பிகுர் ரஹீம் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். அவரது பேட்டிங் சராசரி 36.42 ஆகும். அவர் ஒருநாள் போட்டிகளில் 243 கேட்சுகள் மற்றும் 56 ஸ்டம்பிங்குகளையும் செய்திருக்கிறார்.
முஷ்பிகுர் ரஹீம் நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் குரூப் சுற்றில் இரண்டு போட்டிகளில் விளையாடி மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார். இந்திய அணிக்கு எதிராக தான் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார். நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்த மோசமான செயல்பாடுகளை அடுத்து அவர் தற்போது ஓய்வு முடிவை அறிவித்திருக்கிறார்.
IND vs NZ: பந்துவீச்சில் 3 ஆண்டுகளாக விதிக்கப்பட்ட தடையை நீக்குங்கள்.. ஐசிசிக்கு முகமது ஷமி கோரிக்கை
முஷ்பிகுர் ரஹீம் 2006 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார். அதே ஆண்டு அவர் வங்கதேச அணியை அண்டர்-19 உலகக் கோப்பைக்கு வழிநடத்தினார். அவரது முதல் சர்வதேச அரைசதம் அவரது இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அடிக்கப்பட்டது. மறக்க முடியாத இரண்டாவது அரைசதம் இந்திய அணிக்கு எதிராக 2007 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை வெற்றியில் அடிக்கப்பட்டது.
முஷ்பிகுர் ரஹீம் இன்னும் ஆறு டெஸ்ட் போட்டிகளில் விளையாடினால், வங்கதேச அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய முதல் வீரர் என்ற சாதனையை செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.