ARTICLE AD BOX
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவை உருவக்கேலி படுத்தும் விதமாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சமா முஹம்மத் கருத்து வெளியிட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து சமா முஹம்மத் வெளியிட்டுள்ள கருத்தில், "ரோகித் சர்மா ஒரு விளையாட்டு வீரர்களுக்கான உடல் தகுதியில் இல்லை. மிகவும் பருமனாக காட்சியளிக்கிறார்."
"அவர் அதிக எடையை இழக்க வேண்டும். அவரைப் பார்க்கும்போது இந்திய கேப்டன்களில் கவர்ச்சி இல்லாத ஒரு கேப்டனாக விளங்குகிறார்" என்று பதிவிட்டு இருந்தார். இதற்கு ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதனை அடுத்து இதற்கு விளக்கம் அளித்துள்ள சமா முஹம்மத், "தான் ஒரு விளையாட்டு வீரர் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றி பொதுவாக தான் பதிவிட்டேன். நான் யாரையும் உருவ கேலி செய்யவில்லை. ஒரு விளையாட்டு வீரர் எப்போதுமே நல்ல உடல் தகுதியுடன் இருக்க வேண்டும் என்பதை நம்பும் நபர்."
"ஆனால் ரோகித் சர்மா கொஞ்சம் உடல் எடை கூடுதலாக இருக்கிறார். இதை தான் நான் எனது கருத்தாக பதிவிட்டிருந்தேன். என்னுடைய கருத்தை தெரிவிக்க எனக்கு உரிமை இருக்கிறது. நான் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது. இது ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் தனது கருத்தை சொல்லலாம் என்று அவர் கூறியிருந்தார்."
இதற்கு பதிலடி கொடுத்துள்ள ஹர்பஜன்சிங், "ரோகித் சர்மாவின் உடல் தகுதி குறித்து பேசுவது துரதிஷ்டவசமானது. இந்த சர்ச்சை தேவையில்லாதது.ரோகித் சர்மா இந்திய அணியின் மிகச்சிறந்த வீரராகவும் கேப்டனாகவும் விளங்குகிறார். இந்திய அணிக்காக பல்வேறு வெற்றிக்கு முக்கிய பங்காற்று இருக்கிறார்."
"விளையாட்டு வீரர்களும் ஒரு மனிதர்கள் தான். அவர்களுக்கும் உணர்ச்சிகள் எல்லாம் இருக்கிறது என்பதை எப்போது நீங்கள் எல்லாம் புரிந்து கொள்ள போகிறீர்கள். விளையாட்டு குறித்து கொஞ்சமும் அறிவில்லாதவர்கள் எல்லாம் கருத்து சொல்லும் போது அதை கேட்கும் எங்களுக்கு மனம் வருத்தமாக இருக்கிறது. விளையாட்டை மதியுங்கள். விளையாட்டு வீரர்களுக்கும் மரியாதை கொடுங்கள் " என்று ஹரபஜன்சிங் கூறியுள்ளார்.