ARTICLE AD BOX
பெங்களூர் : இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரர் சுப்மன் கில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ரஞ்சி போட்டியில் திரும்பி நான்கு ரன்களில் ஆட்டம் இழந்து ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்திருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட கில் உள்ளூர் போட்டிகளில் அபாரமாக விளையாடினாலும் வெளிநாடுகளில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் தடுமாறி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
2021 ஆம் ஆண்டுக்கு பிறகு கில் ஒரு முறை கூட வெளிநாட்டு மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் சதம் அடிக்கவில்லை என்று புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில் பார்டர் கவாஸ்கர் தொடரிலும் கில் பெரிய அளவில் சாதிக்கவில்லை. இதனால் சில போட்டிகள் அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார். இதன் காரணமாக தன்னுடைய திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் கில், ரஞ்சிப் போட்டிக்கு திரும்பினார்.
கர்நாடகாவும் பஞ்சாப் அணியும் பெங்களூருவில் ரஞ்சி லீக் ஆட்டத்தில் இன்று மோதியது. இதில் டாஸ் வென்ற கர்நாடகா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து கில் தொடக்க வீரராக களம் இறங்கினார். 8 பந்துகளை எதிர்கொண்டத்தில் ஒரு பவுண்டரி மட்டும் எடுத்து நான்கு ரன்களில் அபிலாஷ் செட்டி பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.
இதைப் போன்று மற்ற வீரர்களும் ரன்களை சேர்க்க தடுமாறினர். பிரபு சிம்ரன் சிங் 6 ரன்களிலும் அன்மோல் ப்ரீத் சிங் 16 ரன்களிலும் வெளியேறினர். இதன் பிறகு களமிறங்கிய மற்ற வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.
கீழ் வரிசையில் மார்கண்டே அதிகபட்சமாக 12 ரன்கள் சேர்க்க பஞ்சாப் அணி 29 ஓவர் முடிவில் 55 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
பந்துவீச்சுகள் கௌஷிக் நான்கு விக்கெட்டுகளையும்அபிலாஷெட்டி மூன்று விக்கெட்டுகளையும் பிரசித் கிருஷ்ணா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் போன்ற ஸ்டார் வீரர்களும் இன்று சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்த நிலையில் கில்லும் ரசிகர்களை ஏமாற்றி இருக்கிறார்.