12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவதை பூரண கும்பமேளா என்பார்கள். 12 பூரண கும்பமேளாக்கள் நிறைவடைந்த பிறகு 144 ஆண்டுகளுக்கு பிறகு நடப்பதை மகா கும்பமேளா என்கிறார்கள். இது தற்போது உத்திர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடந்து வருகிறது. இங்கு கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று புண்ணிய நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினால் பாவங்கள் நீங்கி, முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதனால் துறவிகள், சன்னியாசிகள், அகோரிகள், சாதுக்கள் என பலரும் பிரயாக்ராஜில் குவிந்து வருகின்றனர். மகா கும்பமேளா ஜனவரி 13ம் தேதி துவங்கி, பிப்ரவரி 26ம் தேதி வரை நடைபெற உள்ளது.
பொதுமக்களும் அதிக அளவில் மகா கும்பமேளாவில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் சிறப்பு ரயில்களை இந்திய ரயில்வே நிர்வாகம் இயக்கி வருகிறது. இதனை பயன்படுத்தி பலரும் பிரயாக்ராஜிற்கு புறப்பட தயாராகி வருகிறார்கள். சில முக்கியமான பொருட்களை தங்களுடன் கண்டிப்பாக எடுத்துச் செல்ல வேண்டும். இதனால் தேவையற்ற பதற்றங்களை தவிர்க்க முடியும். நீங்களும் மகா கும்பமேளாவில் கலந்து கொள்ள செல்கிறீர்கள் என்றால் பிரயாக்ராஜ் புறப்பட தயாராவதற்கு முன் உங்களின் சூட்கேசில் இந்த பொருட்கள் அனைத்தும் உள்ளதா என்பதை ஒருமுறை சரி பார்த்துக் கொள்ளுங்கள்.
மகாகும்ப மேளா செல்பவர்கள் எடுத்துச் செல்ல வேண்டியவை :
1. அடையாள சான்றுகள்
செல்லுபடியாகும் அடையாள சான்றுகளில் ஏதாவது இரண்டையாவது அவசியம் உங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டும். உங்களின் புகைப்படத்துடன் இருக்கும் ஆதார் அட்டை அல்லது பாஸ்போர்ட் போன்ற அடையாள சான்றை எடுத்துச் செல்ல வேண்டும். உங்களின் பாதுகாப்பு மட்டுமின்றி, ஏதாவது அவசர தேவை அல்லது சில முக்கிய இடங்களில் உங்களின் அடையாள சான்றை காட்ட வேண்டிய தேவை ஏற்படலாம்.
2. வாட்டர் பாட்டில்
உங்கள் பயணத்தின் போது எப்போதும் உங்களுடன் தண்ணீர் பாட்டிலை வைத்திருங்கள். கூட்டம் அதிகமாக இருக்கும், அதிக தூரம் நடக்க வேண்டி இருக்கும் என்பதால் உடலில் நீர்ச்சத்து குறைந்து விடாமல் பாதுகாக்க அடிக்கடி தண்ணீர் குடித்துக் கொண்டே இருக்க வேண்டும். இதற்கு குடிநீர் பாட்டிலை எப்போதும் உங்களுடனேயே வைத்திருங்கள். குடிநீர் வசதி அனைத்து இடங்களிலும் செய்யப்பட்டிருக்கும் என்றாலும் பாட்டில்களை உடன் எடுத்துச் செல்வது நல்லது.
3. தேவையான உடைகள்
நீண்ட நேரம் திறந்தவெளியில் வெயிலில் இருக்க வேண்டி இருக்கும் என்பதால் உங்களை குளுமையாகவும், காற்றோட்டமாகவும் வைத்திருக்கும் வகையிலான ஆடைகளை கண்டிப்பாக உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள். அதோடு அங்கு தட்பவெப்பநிலை எப்படி இருக்கும், எப்படி மாறும் என கணிக்க முடியாது. அதனால் அனைத்து காலநிலைக்கும் தயாராக இருக்கும் வகையிலான ஆடைகளை எடுத்துச் செல்வது சிறப்பு.
4. சார்ஜர்கள்
உங்கள் மொபைலில் பல மணி நேரம் சார்ஜ் போட முடியாமல் போகலாம். அதனால் உங்களின் மொபைல் போனில் சார்ஜ் போடுவதற்கு ஏற்ற வகையிலான பவர்பேங்க் போன்ற எளிதில் எடுத்துச் செல்லும் சார்ஜர்களை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள். இதனால் அவசரத்திற்கு நீங்கள் மற்றவர்களை தொடர்பு கொள்ள எளிதாக இருக்கும்.
5. ஸ்மார்ட்வாட்ச்
உங்களின் இதயத் துடிப்பு, ஆக்சிஜன் அளவு, சர்க்கரை அளவு, ரத்த அழுத்த அளவு போன்ற ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருப்பதற்கு ஏற்ற வகையிலும், நீங்கள் எவ்வளவு தூரம் நடந்துள்ளீர்கள் என்பதை கணக்கிடவும் எளிதாக இருக்கும் வகையில் ஸ்மார்ட்வாட்ச்களை எடுத்துச் செல்வது நல்லது.
6. முதலுதவி பை
முதலுதவி பொருட்கள் அடங்கிய பையை எப்போதும் உங்கள் உடனேயே எடத்துச் செல்வது நல்லது. ஒருவேளை ஏதாவது சிறு காயம் ஏற்பட்டால் மருந்து போடுவதற்கோ அல்லது வலி ஏற்பட்டால் வலி நிவாரணி தைலங்களை தடவிக் கொள்வதற்கும் வசதியாக இருக்கும். முதலுதவி பையில் எப்போதும் பேண்டேஜ், வலி நிவாரணி, தேவையான மருந்துகள், மருந்து சீட்டு ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும்.
7. சுகாதார பொருட்கள்
சுகாதாரத்தை காப்பதற்கான பேஸ்ட், பிரஷ், கை கழுவுவதற்கான சானிடைசர்கள், வைப்ஸ், டிஷ்யூ பேப்பர்கள் ஆகியவற்றை உங்களுடைய சுத்தத்தை காப்பதற்காக உடன் வைத்திருக்க வேண்டும்.
8. கிராஸ் பேக்
விலை மதிப்புமிக்க முக்கிய பொருட்கள், பணம், மொபைல் போன் போன்ற பொருட்களை பாதுகாப்பாகவும், எளிதில் தூக்கி செல்வதற்கும் ஏற்ற வகையிலும் தோளில் குறுக்காக போட்டுக் கொள்ளும் வகையிலான கிராஸ் பேக்களை பயன்படுத்துவது நல்லது. இது அதிக சுமை இல்லாமலும், கவலை இல்லாமலும், பாதுகாப்பாகவும் முக்கிய பொருட்களை உங்களுடனேயே வைத்திருக்க உதவும்.
9. வாட்டர்புரூஃப் காலணிகள்
உங்களின் பாதங்கள் ஈரப்பதத்துடன் இல்லாமல் உலர்வாக வைத்திருக்க தண்ணீரை உறிஞ்சாத வகையிலான வாட்டர்புரூஃப் செருப்புகளை அணிந்து கொள்வது வசதியாக இருக்கும். இது ஈரமான இடங்களில் நடந்து செல்லும் போது உங்களின் கால்கள் வழுக்காமலும் பாதுகாக்கும். கூட்டமான இடங்களில் நடந்து செல்லும் போது இது அதிகம் கடினமானதாக இருக்காது.
இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet