கடவுளின் தேசத்து கதாநாயகிகளும், கயாடு லோஹரும், பின்னெ தமிழ் சினிமாவும்!

6 hours ago
ARTICLE AD BOX

Published : 01 Mar 2025 04:05 PM
Last Updated : 01 Mar 2025 04:05 PM

கடவுளின் தேசத்து கதாநாயகிகளும், கயாடு லோஹரும், பின்னெ தமிழ் சினிமாவும்!

<?php // } ?>

கடந்த சில தினங்களாக சமூ கவலைதளங்கள் முழுவதும் 'கயாடு லோகர்' ஃபீவர்தான். அண்மையில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘டிராகன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர்தான் கயாடு லோகர்.

அசாம் மாநிலம் திஸ்பூரை பூர்விகமாக கொண்டவர். வளர்ந்தது படித்தது எல்லாம் மும்பையில்தான். 2000-ல் பிறந்த கயாடு, திரை உலகில் 2021-ல் கன்னட திரைப்படமான 'Mugilpete'-வில் அறிமுகமானார். தொடர்ந்து மலையாளத்தில் 'பத்தொன்பதாம் நூற்றாண்டு', தெலுங்கில் 'அல்லுரி', மராத்தியில் 'I Prem U' உள்ளிட்ட படங்களை முடித்துவிட்டு கோலிவுட்டில் நுழைந்திருக்கிறார். டிராகன் படத்தை தொடர்ந்து, அதர்வா உடன் கயாடு லோகர் நடித்துள்ள 'இதயம் முரளி' திரைப்படம் வெளிவரவுள்ளது.

இதெல்லாம் ஒருபுறமிருக்க 'டிராகன்' வெளியான பிறகு பலருக்கும் கயாடு ஃபீவர் தொற்றிக் கொண்டது. வெண்ணெய், பால்கோவா, ரெட் வெல்வெட் என்றான விவரிப்புகளுடன் கயாடு லோகர் புகைப்படங்களும், ரீல்ஸ்களும் மாறி மாறி பகிரப்படுகின்றன. கயாடுவின் கால் அழகில் சிக்கிக் கொண்ட கண்கள் பலவற்றை இன்னும் மீட்கமுடியவில்லை. வந்தாரை எல்லாம் வாழவைத்தவர்கள் கயாடுவை விட்டுவிடுவார்களா என்ன?

பொதுவாக பிற மாநிலங்களைச் சேர்ந்த ஹீரோயின்கள் வெவ்வேறு மொழிகளில் நடிப்பது வழக்கமான ஒன்றுதான். தற்போது கயாடு கலக்கினாலும், கோலிவுட்டில் ஆதிக்கம் செலுத்தியது கடவுளின் தேசத்தைச் சேர்ந்த கதாநாயகிகள்தான். நாட்டியப் பேரொளி பத்மினி தொடங்கி நயன்தாரா வரை, தமிழ்த் திரை ரசிகர்களின் கனவுக்கன்னிகளாக வலம் வந்த பலரும் மாலிவுட்டை பூர்விகமாக கொண்டவர்கள்தான்.

திருவிதாங்கூர் சகோதரிகள் என்றழைக்கப்பட்ட லலிதா, பத்மினி, ராகினி சகோதரிகள்தான் இதற்கான அச்சாரமாக இருந்தவர்கள். இதில் நாட்டியப் பேரொளி பத்மினி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உடன் இணைந்து நடித்த படங்கள் மாபெரும் வெற்றி பெற்றவை. அதில் 'தில்லானா மோகனாம்பாள்' கல்ட் கிளாசிக். அதேபோல் பத்மினியின் உறவினர் சுகுமாரி, அவரும் எண்ணற்ற தமிழ்ப் படங்களில் நடித்தார்.

அதேபோல் எம்ஜிஆர் - சிவாஜி தொடங்கி அன்றைக்கு இருந்த அத்தனை நாயகர்களுடன் ஜோடியாக நடித்த கே.ஆர்.விஜயாவும் கேரளத்தைப் பூர்விகமாக கொண்டவர்தான். பின்னர் 80-களில் முன்னணி நாயகர்களாக இருந்த பலருக்கு அம்மா கதாப்பாத்திரத்தில் தமிழ் ரசிகர்களின் மனதில் குடிகொண்டிருந்தார். அதேபோல் ரஜினி- கமலின் ஆரம்ப காலத்தில் கதாநாயகியாக வலம் வந்த சுமித்ராவும் அங்கிருந்து வந்தவர்தான். அதுபோல் நடிகை ஸ்ரீவித்யா, கதாநாயகியாக பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும் கூட, இரண்டாவது நாயகி, உறுதுணை பாத்திரங்கள், அம்மா கதாப்பாத்திரங்கள் என தமிழின் ஆகச்சிறந்த திரைப்படங்களில் தனித்துவமான பங்களிப்பைத் தந்து, ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவர்.

ரஜினி - கமல் உச்ச நட்சத்திரங்களாக உயர்ந்திருந்த நேரத்தில் நாயகிகளாக உச்சம் தொட்டவர்கள் அம்பிகா - ராதா சகோதரிகள். இளமை ததும்பும் கவர்ச்சியான பாத்திரங்கள் என்றாலும், உருக்கமான குடும்ப பாங்கான பாத்திரங்கள் ஆனாலும் சரி, இருவரும் போட்டிப் போட்டிக் கொண்டு நடித்தனர். அந்த 7 நாட்கள், காக்கி சட்டை, படிக்காதவன், மாவீரன் என அம்பிகா ஒருபக்கம் என்றால், அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம், டிக் டிக் டிக், முதல் மரியாதை என ராதா ஒருபக்கம். தமிழ் ரசிகர்களின் மனங்கவர்ந்த நடிகைகளாக உலா வந்தனர்.

இதனிடையே கேரளத்தைச் சேர்ந்த மற்றொரு சகோதரிகளான ஊர்வசியும் கல்பனாவும் கூட தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர்கள தான். ஊர்வசி நடித்த முந்தனை முடிச்சு, மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும் உள்ளிட்ட படங்கள் எல்லாம் தமிழ் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட். அதேபோல் அவரது சகோதரி நடித்த சின்ன வீடு, சதிலீலாவதி உள்ளிட்ட பல படங்கள் ரசிகர்களால் இன்றளவும் கொண்டாடப்படும் திரைப்படங்களாக இருந்து வருகின்றன.

அதுபோல் நடிகை ரேவதியும் கேரளத்து வரவுதான். மண்வாசனை மூலம் தமிழுக்கு வந்தவர் தேவர் மகன், கிழக்கு வாசல், மௌன ராகம், பகல்நிலவு, புன்னகை மன்னன், வைதேகி காத்திருந்தாள் என அவரது வெற்றி படங்களின் பட்டியல் நீளும். மிகச் சிறந்த நடிப்பைத் தந்து பல ஆண்டுகள் தமிழ் ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டவர். அவரைப் போலவே நடிகை ஷோபா பசி, அழியாத கோலங்கள், முள்ளும் மலரும் என யதார்த்தமான அழகாலும் நடிப்பாலும் தமிழ் ரசிகர்களை வெகுவாக ஈர்த்திருந்த அவரும் கேரள தேசத்துக்காரர்தான்.

திருவிதாங்கூர் சகோதரிகளின் உறவினரான நடிகை ஷோபானாவும் அங்கிருந்து வந்தவர்தான். மிகச் சிறந்த நாட்டிய கலைஞரான இவரது நடிப்பில் வந்த இது நம்ம ஆளு, தளபதி, பொன்மனச் செல்வன் என பல படங்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவையே. இதன் நீட்சி அஜித் - விஜய் காலத்தில் அசின், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் என தொடர்ந்தது. நயன்தாரா பிரபல மலையாள இயக்குநர் சத்யன் அந்திகாடின் 'மனசினகரே' படத்தின் மூலம் அங்கு அறிமுகமாகி இருந்தாலும், அவரை லேடி சூப்பர் ஸ்டாராக்கி இந்த மண்ணின் மருமகளாக்கி மகுடம் சூட்டியது தமிழ் நிலமும் தமிழ் ரசிகர்களும்தான்.

இதே காலக்கட்டத்தில் மலையாளத்தில் இருந்து வந்த பத்மப்ரியா, நவ்யா நாயர், நித்யா மேனன், கீர்த்தி சுரேஷ், பார்வதி என பலரையும் தமிழ் ரசிகர்கள் கொண்டாடவே செய்தனர். இவர்கள் மட்டுமின்றி மலையாளத்தில் இருந்து வந்த மஞ்சிமா மோகன், மஹிமா நம்பியார், அனு சித்தாரா, ரெஜிஷா விஜயன், லிஜோமோள் ஜோஸ், நிமிஷா சஜயன், மாளவிகா மோகனன், மஞ்சு வாரியர், சுவாசிகா என வெவ்வேறு காலங்கட்டங்களில், தங்களுடைய அழகாலும் தனித்துவமான நடிப்பாலும் தமிழ் ரசிகர்கள் மனதில் தடம் பதித்து ஆதிக்கம் செலுத்தியவர்கள் கடவுளின் தேசத்து கதாநாயகிகள்தான்.

இவர்கள் அனைவருமே வெறும் தோற்றங்களுக்காக மட்டுமின்றி, வாய்ப்பு கிடைக்கும்போது தங்களது தேர்ந்த நடிப்புத் திறனை வெளிக்காட்டி ரசிகர்கள் மனதில் நிலைத்திருப்பவர்கள். அந்த வரிசையில் கயாடு லோகர் தனது முதல் படத்திலேயே 2கே கிட்ஸ் ரசிகர் பட்டாளங்களை ஈர்த்ததுடன், அதில் தனது முத்திரையைப் பதிக்கும் வகையிலான நடிப்புத் திறனை பதிவு செய்திருப்பதும் அவர் மீதான நம்பிக்கையைக் கூட்டியிருக்கிறது.

FOLLOW US

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

Read Entire Article