ARTICLE AD BOX
மும்பை: சமீபத்தில் விராட் கோலி அளித்த பேட்டி ஒன்றில் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகப்பெரிய ஏமாற்றம் அளித்த கிரிக்கெட் தொடர் பற்றி மனம் திறந்து பேசி இருக்கிறார். மேலும், தனது சமீபத்திய ஃபார்ம் குறித்தும் வெளிப்படையாக பேசி இருக்கிறார்.
இது பற்றிய விராட் கோலி பேசியது: "என்னைக் கேட்டால், நான் மிக மோசமாக ஏமாற்றமடைந்தது எந்தத் தொடர் என்றால் சமீபத்தில் ஆடிய ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்தான். அது மிகவும் சமீபத்தில் நடந்தது என்பதால் எனது மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நீண்டகாலமாகவே 2014ஆம் ஆண்டு நடந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடர் என்னை காயப்படுத்திக் கொண்டே இருந்தது."

"அடுத்த நான்காண்டுகள் கழித்து ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ஆடும் சூழ்நிலை எனக்கு இல்லை. அது பற்றி என்னால் இப்போது எதுவும் சொல்ல முடியவில்லை. எனவே, வாழ்க்கையில் என்ன நடந்ததோ அதை ஏற்றுக் கொண்டு அமைதியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். 2014 ஆம் ஆண்டில் நடந்த மோசமான இங்கிலாந்து ஆட்டத்திற்கு என்னால் 2018 ஆம் ஆண்டு பதிலடி கொடுக்க முடிந்தது."
"ஆனால், இப்போது (ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு) அது போல என்னால் செய்ய முடியாது. அப்படி செய்தால் அது மற்றொரு தவறாக அமையும். வாழ்க்கையில் இது போன்ற உத்தரவாதங்கள் எதுவும் இல்லை. நீங்கள் நீண்ட காலமாக நன்றாக விளையாடிக் கொண்டிருந்தால் மக்கள் உங்கள் செயல்பாடுகளுக்கு பழகி விடுவார்கள். அதனால் சில சமயம் உங்களை விட அவர்கள் மிகவும் கவலைப்படுவார்கள். இது நிச்சயம் மாற்றப்பட வேண்டிய விஷயம்"
"நீங்கள் வெளியில் இருந்து சக்தியையும், ஏமாற்றத்தையும் உங்களுக்குள் எடுத்துக் கொள்ள ஆரம்பித்தீர்கள் என்றால் உங்களை நீங்களே அதிக சுமைக்கு ஆளாக்கிக் கொள்வீர்கள். அப்படி செய்தீர்கள் என்றால். "இந்தத் தொடரில் இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் தான் இருக்கிறது. நாம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்" என நினைப்போம். விரைவாக ரன் சேர்க்க வேண்டும் என்ற பதற்றத்துக்கு ஆளாவோம்."
“கிரிக்கெட் தொடருக்கு என் மனைவியை அழைத்து செல்லக் கூடாதா?” விராட் கோலி குமுறல்.. என்ன சொன்னார்?
"நிச்சயமாக அதை நான் ஆஸ்திரேலியாவிலும் அனுபவித்தேன். நான் முதல் டெஸ்ட் போட்டியில் நன்றாக ஆடினேன். நான் அப்போது நிச்சயமாக இது மற்றொரு மிகப் பெரிய தொடராக இருக்கும் என்று நல்ல விதமாக நினைத்தேன். ஆனால், அது அப்படி நடக்கவில்லை. என்னை பொறுத்தவரை சரி, இது இப்படி நடந்து விட்டது என்று நமக்கு நாமே உண்மையாக இருக்க வேண்டும். அப்போது நாம் அடுத்து என்ன செய்ய வேண்டும், நமது சக்தி எந்த அளவுக்கு இருக்க வேண்டும் என்பதைப் பற்றி சிந்தித்தேன்" என்றார் விராட் கோலி.