ARTICLE AD BOX
துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதியில் எந்தெந்த அணிகள் விளையாடுகின்றன என்பது முடிவாகி இருக்கிறது. இதுவரை நடந்த இரண்டு குரூப் பிரிவுகளின் முதல் சுற்று போட்டிகள் முடிவுக்கு வந்துள்ளன. அதில் குரூப் பி பிரிவில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா முதல் இரண்டு இடங்களை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறி இருந்தன.
குரூப் ஏ பிரிவில் கடைசி போட்டியாக இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. அதில் இந்தியா வெற்றி பெற்றதை அடுத்து, குரூப் ஏ பிரிவில் இந்தியா முதல் இடத்தையும், நியூசிலாந்து இரண்டாவது இடத்தையும் பிடித்து அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தன.

தற்போது முதல் அரையிறுதி போட்டி மார்ச் 4 அன்று துபாயில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாட உள்ளன. இந்தப் போட்டி இந்திய நேரப்படி 2.30 மணிக்கு துவங்க உள்ளது.
மார்ச் 5 அன்று பாகிஸ்தானில் உள்ள லாகூரில் இரண்டாவது அரையிறுதி போட்டி நடைபெற உள்ளது. அதில் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன. இந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெறும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். மார்ச் 9 அன்று 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி போட்டி நடைபெற உள்ளது.
IND vs NZ: "ஆட்டநாயகன்".. இரவு வந்த மெசேஜ்.. விருதை வென்ற பின் ரகசியத்தை உடைத்த வருண் சக்கரவர்த்தி
அரையிறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை சந்திப்பது நல்லதா, தென்னாப்பிரிக்காவை சந்திப்பது நல்லதா என்ற விவாதம் சில நாட்களாக நடந்து வந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், தற்போது இந்திய அணி குரூப் ஏ பிரிவில் அனைத்து போட்டிகளிலும் வென்று முதல் இடத்தை பிடித்து இருப்பதால் ஆஸ்திரேலியாவை சந்திப்பது உறுதியாகி இருக்கிறது.
ஆஸ்திரேலிய அணியில் முன்னணி வேகப்பந்துவீச்சாளர்கள் பலரும் காயம் அடைந்து இருக்கின்றனர். அந்த அணியின் பேட்டிங்கும் நிலையானதாக இல்லை என்ற ஒரு பார்வை உள்ளது. எனினும், அவர்கள் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராகவும், இங்கிலாந்து அணிக்கு எதிராகவும் பேட்டிங் செய்த விதம் அச்சுறுத்தும் வகையில் இருந்தது.
எனவே, இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கவனமுடன் விளையாட வேண்டும். ஒருவேளை அரையிறுதியில் இந்தியாவும், தென்னாப்பிரிக்காவும் வெற்றி பெற்றால், அந்த இரு அணிகளும் இறுதிப் போட்டியில் மோதும். 2024 டி20 உலகக் கோப்பையிலும் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இறுதிப் போட்டியில் மோதி இருந்தது குறிப்பிடத்தக்கது.