ARTICLE AD BOX
பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. லீக் சுற்றுகள் முடிவில் இந்தியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியிருக்கின்றன. நாளை துபாயில் நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் குரூப் A-ல் முதலிடம் பிடித்த இந்தியாவும், குரூப் B-ல் இரண்டாமிடம் பிடித்த ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன.

இந்திய அணி 2011 ஒருநாள் உலகக் கோப்பை காலிறுதிக்குப் பிறகு ஆஸ்திரேலியாவிடம், 2015 ஒருநாள் உலகக் கோப்பை அரையிறுதி, 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, 2023 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டி என ஐ.சி.சி நாக் அவுட் சுற்றுகளில் தோல்வி மட்டுமே அடைந்திருக்கிறது. அதனால், இம்முறை சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை இந்தியா நாக் அவுட் செய்யுமா என்ற எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது. இந்த நிலையில், ஆஸ்திரேலியாவை வீழ்த்துவதற்கு முதலில் சமீப காலங்களில் இந்தியாவுக்கு பெரும் தலைவலியாக இருக்கும் டிராவிஸ் ஹெட் மீதான அச்சத்தை மனதிலிருந்து நீக்குங்கள் என இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் அறிவுரை வழங்கியிருக்கிறார்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஊடகத்திடம் பேசிய ஹர்பஜன் சிங், ``முதலில், டிராவிஸ் ஹெட் மீதான பயத்தை உங்கள் மனதில் இருந்து அகற்றிவிட்டு, அவரை அவுட்டாக்க முயற்சி செய்யுங்கள். ஷமி சார், போதும் டிராவிஸ் ஹெட்டை இனி ரன் அடிக்க விடாதீர்கள். இரண்டாவது, அந்த அணியில் மேக்ஸ்வெல், ஜோஷ் இங்கிலிஸ் போன்ற ஹிட்டர்கள் இருக்கின்றனர். அவர்கள் பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசுகிறார்கள். எனவே, வேகப்பந்து வீச்சில் அவர்களை ரன் அடிக்க விடாதீர்கள். மூன்றாவது, இதுவொரு நாக் அவுட் கேம். நீங்கள் அதிகம் முயற்சி செய்யத் தேவையில்லை. இதுவரை நீங்கள் விளையாடியதைப் போலவே விளையாடுங்கள்." என்று கூறினார்.
மேலும், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, ``2024 டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றிருக்கிறது. அதோடு, 2023 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா விளையாடியிருக்கிறது. எனவே, ஒயிட் பால் கிரிக்கெட்டில் (ஒருநாள் மற்றும் டி20) இந்திய அணி வலுவான அணியாக இருக்கிறது. எதிரணி எதுவாக இருந்தாலும் கவலையில்லை. அதை வீழ்த்தும் திறன் இந்திய அணியிடம் இருக்கிறது" என்று பாசிட்டிவாகக் கூறினார்.
Rishabh Pant: உலகில் எந்த கிரிக்கெட்டரும் பெறாத விருது; நாமினேட் ஆன பன்ட்... காத்திருக்கும் வரலாறு!