ARTICLE AD BOX
கொல்கத்தா : இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வியை தழுவியது. இந்த போட்டிக்கு முன்பு பேட்டிங்கில் நாங்கள் அதிரடியாக விளையாடுவோம் என கேப்டன் ஜாஸ் பட்லர் கூறியிருந்த நிலையில் அந்த அணி முதல் டி20 போட்டியில் 132 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்த நிலையில் தோல்வி குறித்து இங்கிலாந்து அணி கேப்டன் ஜாஸ் பட்லர் கூறிய கருத்தை தற்போது பார்க்கலாம். ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது. ஆனால் ஆரம்ப கட்டத்தில் பந்து கொஞ்சம் ஸ்விங் ஆனது. இதை நான் எதிர்பார்க்கவே இல்லை.
அது மட்டும் இல்லாமல் எங்களுடைய பேட்ஸ்மேன்கள் ஆரம்பகட்டத்தில் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து விட்டார்கள். ஆரம்ப கட்டத்தில் மட்டும்தான் ஆடுகளம் அப்படி இருந்தது. போகப் போக பேட்டிங்கிற்கு சாதகமாக மாறியது. இது நிச்சயம் ரன் குவிப்புக்கு சாதகமான மைதானம் தான். எங்கள் அணியில் நல்ல வீரர்கள் இருக்கிறார்கள்.
நாங்கள் எங்களுடைய அதிரடி ஆட்டத்தின் மூலம் இந்தியாவை நெருக்கடிக்கு ஆளாக நினைத்தோம். ஆனால் இன்று எங்களால் அதை செய்ய முடியவில்லை. இன்று இந்தியா அபாரமாக பந்து வீசி விக்கெட்டுகளை எடுத்தது. இந்த போட்டி தற்போது முடிந்து விட்டது. அடுத்த போட்டியில் நன்றாக விளையாட வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.
ஜோப்ரா ஆர்ச்சர் இன்று சிறப்பாக பந்து வீசினார். அவர் எங்கள் அணியின் சூப்பர் ஸ்டார். அவர் மட்டும்தான் இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் பந்து வீசினார். ஜோப்ரா இன்னும் கூடுதல் விக்கெட்டுகளை இன்று எடுத்து இருந்தால், நன்றாக இருந்திருக்கும். இதேபோன்று மார்க் வுட்டும் நன்றாக பந்து வீசினார்.
இருவரும் இணைந்து நன்றாக செயல்பட்டார்கள். நாங்கள் இன்று ஆக்ரோஷமான கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என்று நினைத்தோம். எங்களை அனைவரும் கவனிக்க வேண்டும் என நினைத்தோம். ஏனென்றால் எங்களை விட கடும் ஆக்ரோஷமாக விளையாடும் அணியை நாங்கள் இந்த தொடரில் எதிர்கொள்கிறோம். எனவே இந்த போட்டிகள் அனைத்தும் ரசிகர்களுக்கு விறுவிறுப்பாக இருக்கும். தற்போது பல்வேறு மைதானங்களில் இந்த தொடரில் நாங்கள் விளையாடுகிறோம்.
ஒவ்வொரு மைதானத்தின் தன்மையும் நாங்கள் கணித்து அதற்கு ஏற்ப எங்களுடைய ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். எனினும் இந்த சூழல் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நான் மெக்குல்லத்தின் மிகப்பெரிய ரசிகர். அவர் டிரெஸ்ஸிங் ரூமில் பயிற்சியாளராக இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது என ஜாஸ் பட்லர் கூறியுள்ளார்.