ARTICLE AD BOX
ஆண்களே! 30 வயதிற்கு மேல் இந்த அறிகுறிகள் தெரிஞ்சா.. அது மாரடைப்பின் எச்சரிக்கை அறிகுறிகள்
Heart Attack Symptoms In Tamil: உலகளவில் பெரும்பாலானோரின் இறப்புக்கு மாரடைப்பு ஒரு முக்கியமான காரணமாகும். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20.5 மில்லியணுக்கும் அதிகமானோர் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற இதய நோயால் இறப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.
முக்கியமாக இந்த இதய பிரச்சனைகளானது இளம் வயதினர் முதல் வயதானவர் வரை என பாரபட்சம் பாராமல் அனைத்து வயதினரையும் தாக்குகிறது. ஆனால் பெரும்பாலும் 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் தான், அதுவும் ஆண்கள் தான் இந்த ஆபத்தான மாரடைப்பால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இப்படி மாரடைப்பு வருவதற்கு முக்கிய காரணமாக இருப்பது உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறையும், மோசமான உணவுப் பழக்கங்களும் தான். இப்போது 30 வயதை எட்டிய ஆண்களுக்கு மாரடைப்பு ஏற்படப்போகிறது என்றால் எந்த மாதிரியான அறிகுறிகள் தெரியும் என்பதைக் காண்போம்.
நெஞ்சு வலி
மாரடைப்பு என்றாலே முதலில் வெளிப்படும் அறிகுறி நெஞ்சு வலி தான். எப்போது ஒருவரது இதயம் செயல்பட சிரமப்படுகிறதோ, அப்போது நமது உடல் வெளிப்படுத்தும் முதன்மையான மற்றும் முக்கியமான அறிகுறி தான் மார்பு வலி. இந்த மார்பு வலி தாங்க முடியாத அளவில் இருந்தால், அதுவும் யாரோ ஒருவர் ஊசியைக் கொண்டு மோசமாக குத்துவது போன்று இருந்தால், அது மாரடைப்பின் அறிகுறியாகும்.
சுவாசிப்பதில் சிரமம்
மாரடைப்பின் அடுத்த மற்றும் மற்றொரு முக்கியமான அறிகுறி சுவாசிப்பதில் சிரமத்தை சந்திப்பது. ஒருவரது இதயம் சரியாக செயல்படாத போது அந்நபரால் சரியாக சுவாசிக்க முடியாமல், மூச்சுவிடுவதில் சிரமத்தை சந்திக்க நேரிடும். முக்கியமாக சாதாரணமாக கூட சுவாசிக்க முடியாது.
வேகமான இதயத்துடிப்பு
மாரடைப்பின் மற்றொரு எச்சரிக்கை அறிகுறி தான் இதயத்துடிப்பு வேகமாக இருப்பது அல்லது வழக்கத்திற்கு மாறாக படபடப்பாக இருப்பது. இதயம் செயல்பட கஷ்டப்படும் போது, இப்படியான படபடப்பு ஏற்படும். பொதுவாக டென்சன் ஆகும் போது ஒருவருக்கு படபடப்பு ஏற்படலாம். ஆனால் காரணமின்றி படபடப்பு ஏற்பட்டால், உடலில் குறிப்பாக இதயத்தில் ஏதோ தீவிர பிரச்சனை உள்ளது என்று அர்த்தம்.
மேல் உடல் வலி
மாரடைப்பின் முக்கியமான அறிகுறி நெஞ்சு வலியாக இருந்தாலும், ஆண்களுக்கு உடலின் மேல் பகுதிகளிலும் வலி ஏற்படக்கூடும். அதுவும் இந்த வலியானது இடது கை, தோள்பட்டை, முதுகு, கழுத்து, தாடை அல்லது வயிறு போன்ற பகுதிகளில் ஏற்படலாம். இந்த இடங்களில் ஏற்படும் வலி லேசாக தொடங்கி பின் மெதுவாக தீவிரமாகும். எனவே சற்று கவனமாக இருங்கள்.
அதிகமாக வியர்ப்பது
மாரடைப்பு ஒருவருக்கு வரப்போகிறது என்றால் வெளிப்படும் மற்றொரு முக்கியமான அறிகுறி அதிகமாக வியர்ப்பது. இதயத்தில் உள்ள இரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படும் போது இம்மாதிரியான நிகழ்வு ஏற்படுகிறது. எனவே காரணமில்லாமல் திடீரென்று அதிகமாக வியர்த்தால், உடனே கவனித்து மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து பாருங்கள்.
மிகுந்த உடல் சோர்வு
உடல் சோர்வை பலரும் சாதாரணமாக நினைக்கலாம். ஆனால் இந்த உடல் சோர்வு பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளின் முக்கியமான அறிகுறியாகும். குறிப்பாக இதயம் பலவீனமாக இருந்தாலோ, மாரடைப்பு ஏற்படப்போகிறது என்றாலோ, இந்த உடல் சோர்வை அதிகம் சந்திக்க நேரிடும். அதுவும் இப்படியான உடல் சோர்வின் போது அன்றாட பணிகளைக் கூட செய்ய முடியாது.
நெஞ்செரிச்சல் அல்லது அஜீரணம்
நெஞ்செரிச்சல் அல்லது அஜீரண கோளாறை பலரும் செரிமான பிரச்சனைகளாக நினைத்து, புறக்கணிப்பார்கள். ஆனால் இது வரவிருக்கும் மாரடைப்பின் எச்சரிக்கை அறிகுறி என்று நிபுணர்கள் கூறுகின்றனர். சில ஆண்கள் மாரடைப்பின் போது அஜீரணம் அல்லது நெஞ்செரிச்சல் போன்ற அறிகுறிகளை அனுபவிக்கலாம். எனவே இப்படியான பிரச்சனையை சந்தித்தால் அதை புறக்கணிக்காதீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)