ARTICLE AD BOX
தானே,
வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகை நாடு முழுவதும் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட சிறுவர்கள் 4 பேர் ஆற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக சாம்டோலியில் உள்ள போடார் குரு வளாகத்தில் வசிக்கும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் 4 பேர் நேற்று ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் நேற்று மதியம் பத்லாப்பூர் பகுதியில் உள்ள உல்ஹாஸ் ஆற்றுக்கு குளிக்கச் சென்றனர்.
அவர்கள் குளித்துக் கொண்டிருந்தபோது, ஆற்றின் நீர்மட்டம் திடீரென உயர்ந்துள்ளது. இதை அறியாமல் குளித்துக் கொண்டிருந்த சிறுவர்கள் திடீரென நீரில் அடித்துச் செல்லப்பட்டு மூழ்கி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் ஆர்யன் மேதர் (15 வயது), ஓம் சிங் தோமர் (15 வயது), சித்தார்த் சிங் (16 வயது), மற்றும் ஆர்யன் சிங் (16 வயது) என தெரிய வந்துள்ளது.
அவர்களது உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக பத்லாப்பூர் கிராமப்புற மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.