ARTICLE AD BOX
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களுக்கு என்றுமே நல்ல வரவேற்பு இருக்கும். நாகேஷ், கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக், சூரி மற்றும் யோகி பாபு உள்பட பல காமெடி நடிகர்கள் திரையில் தங்கள் திறமையை நிரூபித்துள்ளனர். சில படங்கள் காமெடி நடிகர்கள் உதவியாலே வெற்றியும் பெற்றுள்ளன. படங்களில் மற்ற நடிகர்களைக் காட்டிலும் கதாநாயகர்களுக்கு தனி வரவேற்பும், கைதட்டலும் கிடைக்கும். ஆனால், ஒருசில காமெடி நடிகர்கள் ஹீரோவுக்கு இணையாக கைதட்டல் வாங்குவார்கள். அப்படிப்பட்ட ஒருவரைத் தான் சீயான் விக்ரம் சமீபத்தில் நினைவு கூர்ந்துள்ளார்.
திரைப்படங்களில் காமெடி நடிகர்களின் கலாட்டா தான் ரசிகர்களை சிரிக்க வைக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டுதான், அனைத்துப் படங்களிலும் காமெடி காட்சிகள் வைக்கப்படுகின்றன. சில படங்கள் முழு காமெடித் திரைப்படங்களாகவும் வெளிவருகின்றன. காமெடி நடிகர்கள் சிலர் ஹீரோவாகவும் சில படங்களில் நடித்துள்ளனர். ரசிகர்கள் மத்தியில் ஹீரோ அளவிற்கு கைதட்டல் வாங்கும் காமெடியன்கள் குறைவு தான் என்றாலும், இதில் குறிப்பிடத்தக்கவர் சின்னக் கலைவாணர் விவேக். நடிகராக மட்டுமின்றி, பல மரக்கன்றுகளை நட்டு சமூக ஆர்வலராகவும் செயல்பட்டவர் விவேக்.
பரத நாட்டியத்தை முறைப்படி கற்றுக் கொண்ட விவேக், தனது சகோதரியுடன் பல மேடைகளில் நாட்டியம் ஆடியிருக்கிறார். இதுதவிர வயலின், தபேலா மற்றும் ஆர்மோனியம் போன்ற இசைக்கருவிகளையும் வாசிக்கக் கூடிய வல்லமை இவருக்கு உண்டு. 1987 ஆம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த ‘மனதில் உறுதி வேண்டும்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார் விவேக்.
மற்ற காமெடி நடிகர்களைக் காட்டிலும், விவேக்கின் காமெடி காட்சிகள் சற்று வித்தியாசமாக இருக்கும். காமெடியில் கூட கருத்துகளை எடுத்துக் கூற முடியும் என திரைத்துறைக்கு காட்டியவர் விவேக். இதனால் தான் இவர் இன்றும் ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கிறார். சின்ன கலைவாணர் என்றும் போற்றப்படுகிறார். சில கதாநாயகர்கள் கூட இவரது ரசிகர்கள் தான். அதில் மிகவும் முக்கியமானவர் சீயான் விக்ரம். இவரது வெற்றிப்படங்கள் பலவற்றில் விவேக் காமெடி நடிகராக நடித்துள்ளார்.
விவேக் குறித்து சமீபத்தில் மனம் திறந்த விக்ரம், “கோலிவுட்டில் எனக்கு மிகவும் பிடித்த காமெடி நடிகர் விவேக் தான். வாங்கிய சம்பளத்திற்காக மட்டும் படத்தில் நடிக்காமல், ரசிகர்களுக்கு ஏதேனும் கருத்துகளைச் சொல்லும் விதமாக இவர் காமெடி செய்வது தான் விவேக்கின் தனிச்சிறப்பு. ஒரு காமெடி நடிகராக இருந்து, ஹீரோவுக்கு சமமாக கைதட்டல் வாங்கியிருக்கிறார் விவேக். நான் நடித்து ஹிட் ஆன பல படங்களில் விவேக் என்னுடன் நடித்திருக்கிறார்” என கூறினார்.
விக்ரம் மற்றும் விவேக் இருவருமே நண்பர்கள். விவேக் காமெடி நடிகராக வலம் வந்த நேரத்தில், ஒரு வெற்றிப் படத்திற்காக ஏங்கிக் கொண்டிருந்தார் விக்ரம். அதன்பின் சேது படம் இவருக்கு கைகொடுக்கவே சிறந்த நடிகராக உருவெடுத்தார். விக்ரம் நடித்த தூள், மஜா, காதல் சடுகுடு, சாமி மற்றும் அந்நியன் போன்ற படங்களில் விவேக் காமெடியனாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.