ARTICLE AD BOX
ஸ்ரீவைகுண்டம்: ஸ்ரீவைகுண்டம் அருகே கடந்த 10ம் தேதி பிளஸ்1 மாணவர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தில் 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவத்தில் எஸ்சி எஸ்டி ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. மேலும் மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்பி, வரும் ஏப்.2ம் தேதிக்குள் பதிலளிக்கவும் உத்தரவிட்டு உள்ளது. இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அரசு உதவி பெறும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று சமூக நல்லிணக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
அப்போது மாவட்ட கலெக்டர் இளம்பகவத் முன்னிலையில் பள்ளியில் சாதிய உணர்வுகளை தூண்டக்கூடிய வகையில் வாசகங்கள் எழுதப்பட்டிருந்த அனைத்து இடங்களையும் முழுமையாக அழித்து தூய்மைப்படுத்தும் பணி நடந்தது. இதையடுத்து கலெக்டர் கூறுகையில், ; ‘சமத்துவமற்ற மனநிலையை கல்விக்கூடங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் மாணவர்கள் மனதில் விதைக்கக்கூடாது. சாதிய உணர்வுகளை விதைக்கூடிய நபர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை கடுமையாக இருக்கும் என்பதை மாணவர்களிடம் எடுத்து கூறியுள்ளோம்.
இதுதொடர்பான தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகளை அனைத்து அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளிலும் நடத்த திட்டமிட்டு உள்ளோம்’ என்றார். பின்னர் மாணவர்களிடையே நிலவும் சமத்துவமற்ற மனநிலையை மாற்ற சமூகநீதி உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கணேச மூர்த்தி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
The post ஸ்ரீவைகுண்டம் பள்ளியில் சாதி அடையாளங்கள் அழிப்பு: கலெக்டர் எச்சரிக்கை appeared first on Dinakaran.