ARTICLE AD BOX
மிகப் பெரிய செலவுள்ள ஸ்மார்ட் மீட்டர் திட்டம் மத்திய அரசின் நிர்பந்தம் காரணமாக மாநிலங்களில் அமல்படுத்தப்படுகிறது. இது இந்தியாவில் மின் உற்பத்தியிலும், மின் விநியோகத்திலும் ஈடுபட்டுள்ள அதானி நிறுவனங்கள் பயன் பெறுவதற்காகவா? இனி, மின் கட்டண உயர்வும், விவசாயத்திற்கு இலவச மின்சார ரத்தும் தவிர்க்க முடியாது;
தமிழ்நாட்டு மின் வாரியம் இன்று மிகப் பெரிய கடன் சுமையில் வீழ்வதற்கு காரணமே அதானியிடம் இருந்து நமது மின் வாரியம் மின்சாரம் கொள்முதல் செய்ய நிர்பந்திக்கப்பட்டது தான். அது போதாது, என்று அதானி பலடைய ஸ்மார்ட் மீட்டர் திட்டமும் அதிவேகமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் குக்கிராமங்கள் வரை மின்சாரப் பயன்பாடு அதிகமாக உள்ளது. அந்த வகையில் இங்கு தமிழ்நாட்டில் 3 கோடியே 30 லட்சம் இணைப்புகளுக்கு மின்சாரம் வழங்க, ஆறு லட்சம் கி.மீ தொலைவுக்கு மின் கம்பிகள் அமைக்கப்பட்டு உள்ளன. மூன்று லட்சம் மின் மாற்றிகள்செயல்பாட்டில் உள்ளன. 1,900 துணை மின் நிலையங்கள் உள்ளன. இந்த அரசின் சாதனைகள் அனைத்தும் அதானியின் லாபத்திற்காக 2025 ஆம் ஆண்டுக்குள் ஸ்மார்ட் மீட்டர்களாக மாறப் போகின்றன.
இதனை நுகர்வோர் அமைப்புகள், விவசாய சங்கங்கள், தொழிற்சங்கங்கள் கடுமையாக எதிர்த்த போதும், ‘மின்பயன்பாட்டு விவரங்களை துல்லியமாக அறிவதற்காக, விவசாய மின் இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த முடிவு செய்யப்பட்டு, செயல்படுத்தப்படுவதாக’ அரசாங்கம் தெரிவிக்கிறது.
தமிழகத்தில் விவசாயத்துக்கு தமிழக மின்வாரியம் இலவசமாக மின்விநியோகம் செய்து வருகிறது. தற்போது 23.55 லட்சம் விவசாய மின் இணைப்புகள் உள்ளன. கிராமப் பகுதிகளில் வீடுகள், கடை, விவசாயம் உட்பட அனைத்துப் பிரிவுகளுக்கும் ஒரே வழித் தடத்தில் மின்விநியோகம் செய்யப்படுகிறது. தினமும் விவசாயத்துக்கு 18 மணி நேரமும், மற்ற இணைப்புகளுக்கு 24 மணி நேரமும் மின்விநியோகம் செய்யப்படுகிறது. விவசாயிகள் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தால் இந்த இலவச மின்சார விநியோகம் இனி இருக்காது என அச்சப்படுகின்றனர். ஆனால், ”அப்படி பயப்பட வேண்டாம்” என்று அரசு சொல்லி வருகிறது. ஆனாலும், விவசாயிகளுக்கு நம்பிக்கை வரவில்லை.
”பல கிராமங்களில் விவசாயத்துக்கு மின்விநியோகம் செய்யாத நேரத்திலும் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. அதை தடுக்கவே இந்த முன்னெடுப்பு” என தமிழக அரசு கூறியுள்ளது.
மேலும், இதனால் அந்த வழித் தடங்களில் உள்ள வீடுகளில் குறைந்த மின்னழுத்த பிரச்சினைகள் ஏற்பட்டு மின்சாதனங்கள் பழுதடைகின்றன. எனவே, விவசாயத்துக்கு எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது? என்பதை அறிய, மீட்டர்கள் பொருத்தப்பட உள்ளதாம்!
”மின்பயன்பாட்டு விவரத்தை அறிய மீட்டர் பொருத்தாமல் எந்த ஒரு மின்இணைப்பும் வழங்கக் கூடாது” என மாநில மின்வாரியங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் இருந்து அதானிக்கு சேவை செய்ய மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நெருக்குதல் தருகிறது என்பதை நாம் உணரலாம்.
தமிழகத்தில் கடந்த 2018-ம் ஆண்டில் இருந்து விவசாய மின் இணைப்புக்கு மீட்டர் பொருத்தப்படுகிறது. மின்கட்டணம் இல்லாததால் அந்த மீட்டரில் பதிவாகும் மின்பயன்பாட்டை கணக்கெடுக்காத அலட்சியப் போக்குகள் நிலவுகின்றன. இதனால், மின்பயன்பாடு என்னவென்பதையும் அறிய முடிவதில்லை. ஆக, இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், விவசாய மின்இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜால்ஜாப்பு சொல்லப்படுகிறது.
1,200 வேளாண் மின் இணைப்புகளுக்கு சோதனை அடிப்படையில் ஸ்மார்ட் மின் இணைப்புகளை ஈரோடு, சேலம் மாவட்டங்களில் பொறுத்தப்பட உள்ளதானது விவசாயிகளிடையே ஒரு கொதி நிலையை உருவாக்கி உள்ளது. இதனால் இலவச மின்சாரம் நிறுத்தப்படும் என்ற அச்சத்தை விவசாயிகள் வெளிப்படுத்தி உள்ளனர்.
தமிழ்நாட்டில் ஒரு பைசா மின்கட்டண உயர்வை எதிர்த்து விவசாயிகள் 1970 களில் வீரம் செறிந்த போராட்டங்களை நடத்தினர். நாராயணசாமி நாயுடு தலைமையிலான போராட்டங்கள் அரசாங்கத்தை அதிர வைத்தன. இது போன்ற பல போராட்டங்களில் 60 விவசாயிகள் உயிர் தியாகம் செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்தே விவசாயத்திற்கு இலவச மின்சாரம் கிடைத்தது. அதை அதானி என்ற பேராசைக்கார கார்ப்பரேட் காலி பண்ணத் துடிக்கிறார்!
தமிழகம் முழுமையும் மூன்று கட்டங்களாக சுமார் 24,000 கோடிகள் செலவில் இந்த ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி அதிவேகம் பெற்றுள்ளது. இவ்வளவு பண விரயம் தேவையற்றது. ஏற்கனவே உள்ள மின்மீட்டர் ரூ1,500 தான். ஆனால், புதிய ஸ்மார்ட் மீட்டர் ரூ10,000 என்றாகிறது. ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படுவதால், இனி மின்சார அளவீடு செய்வதற்கு மின் ஊழியர்கள் யாரும் வீடுகளுக்கு வர வேண்டிய அவசியமில்லாமல் போவதால் அவர்களின் வேலை பறிபோகும். இதனால் பல்லாயிரம் எளிய ஊழியர்கள் தங்கள் வேலையை இழக்க நேரிடும்.
இனி, குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் மின்சாரம் கட்டாவிட்டால் மின் இணைப்பை நேரில் வராமலே இருந்த இடத்தில் இருந்தபடியே அதிகாரிகள் துண்டித்துவிடமுடியும். அதே சமயம் ”தற்போது இரு மாதத்திற்கு ஒரு முறை மின்கட்டணம் என்பது இனி மாதாமாதம் வசூலிக்கப்படும்” என மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
இந்த ஸ்மார்ட் மீட்டரில் உள்ள மற்றுமொரு ஆபத்து என்னவென்றால், ‘பீக் அவர்ஸ்’ எனப்படும் குறிப்பிட்ட நேரங்களில் அதிரடியாய் மின் கட்டணத்தை உயர்த்துவார்கள்! இந்த குறிப்பிட்ட நேரத்தில் மின்பயன்பாட்டை யாராலும் தவிர்க்கவும் முடியாது. ஆகவே, இதன் மூலம் முற்றிலும் நேர்மையற்ற – நடைமுறையில் இல்லாத- ஒரு பெரும் வசூல் கொள்ளையை மின்வாரியம் அதானிக்காக திட்டமிடுகிறது. அதானியிடம் அதிக பணம் கொடுத்து மின்சாரத்தை தமிழக மின் வாரியம் கொள்முதல் செய்வதை ஈடுகட்டவே நுகர்வோரிடம் இந்த அதிரடி கொள்ளையை தமிழக மின்வாரியம் அமல்படுத்த உள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட் மீட்டர் பராமரிப்புக்காக தனியார் நிறுவனங்களுக்கு மிகப் பெரிய பராமரிப்பு தொகை ஒன்றை மின் வாரியம் செலுத்த கட்டாயப்படுத்தபடுவதால், நமது மின் வாரியம் மீண்டும் கடன் சுமையால் திணறவே வாய்ப்பு அதிகம் என சொல்லபடுகிறது.
அதே சமயம் தற்போது ஏற்படும் பல்வேறு மின் விபத்துக்கள், அதனால் ஏற்படும் உயிர் இழப்புகள், பெரும் சேதங்கள் ஆகியவை ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதன் மூலம் தவிர்க்கப்படும் என்ற கண்ணோட்டமும் வைக்கபடுகிறது. பாதுகாப்பான மின் நுகர்வுக்கு இது உத்திரவாதம் அளிப்பதால் மின்சாரத் தாக்குதலால் ஆண்டுதோறும் சுமார் 10,000 நபர்கள் சாவதற்கு முற்றுபுள்ளி வைக்கப்படும் எனச் சொல்லப்படுகிறது. மின் திருட்டு, மின் இழப்புகள் ஆகியவையும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதால் தடுக்கப்படுமாம். ஆகவே இது காலத்தின் கட்டாயம் என்ற கருத்தும் வைக்கப்படுகிறது.
நல்லது, இந்த நவீன தொழில் நுட்ப அம்சங்களால் மக்களுக்கு பல நன்மைகள் ஏற்படுகிறது என்றாலும், அது குறிப்பிட்ட கார்ப்பரேட் நிறுவன லாப கண்ணோட்டத்தில் இருந்து விடுபட்டால் மட்டுமே முழுமையான நன்மை பயக்கும்.
சாவித்திரி கண்ணன்