ARTICLE AD BOX
யாருடைய பின்புலமும் இல்லாமல், தனது திறமையான நடிப்பால் கோலிவுட்டில் நிலைத்து நின்ற ஒரு சில நடிகர்களில் முக்கிய இடத்தில் இருப்பவர் தல அஜித்குமார். இவரது ரசிகர்கள் இவரை அல்டிமேட் ஸ்டார் என்றும் AK என்றும், ‘தல’ என்றும் செல்லமாக அழைக்கிறார்கள். அதுமட்டுமின்றி இவர் எது செய்தாலும் அதை இவரது ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி விடுவார்கள்.
இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமாரின் புதிய படமான விடாமுயற்சி கடந்த 6-ம்தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அடுத்ததாக ஏப்ரல் 10-ம்தேதி ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வெளியாக உள்ளது.
அஜித்குமார் தான் ஒப்பந்தம் செய்த படங்களில் படப்பிடிப்புகளை எல்லாம் முடித்து விட்டு தற்போது கார் ரேஸ் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அதுமட்டுமின்றி கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட உள்ளதால் அக்டோபர் மாதம் வரை படங்களில் நடக்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.
நடிகர் அஜித்குமார் நடிப்பு தவிர பைக் மற்றும் கார் ரேஸில் அதிக ஆர்வம் கொண்டவர். கடந்த சில வருடங்களாக நடிகர் அஜித்குமார் கார் ரேஸில் அதிக ஆர்வம் காட்டி வருவது மட்டுமல்லாமல் பல போட்டிகளிலும் கலந்து கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் துபாயில் நடந்த 24 எச் சீரிஸ் கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமாரின் 'அஜித்குமார் ரேஸிங் அணி' 992 பிரிவில் மூன்றாவது இடத்தை பிடித்து உலக அரங்கில் தன் அணியை மட்டுமல்ல இந்தியாவுக்கும் பெருமையை தேடித்தந்தார்.
துபாய் கார் பந்தயத்தில் கலந்து கொள்வதற்காக ரூ.4 கோடி மதிப்புள்ள போர்ச் ஜிடி3 ஆர்.எஸ் என்ற சொகுசு காரை வாங்கியது மட்டுமின்றி 'அஜித் குமார் ரேசிங் கிளப்' என்ற கம்பெனியையும் தொடங்கினார்.
தற்போது மீண்டும் கார் பந்தயத்தில் தீவிரம் காட்டிவரும் நடிகர் அஜித்குமார் ஸ்பெயின் நாட்டில் நடந்து வரும் கார் பந்தயத்தில் கலந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் ஸ்பெயின் நாட்டின் வெலன்சியா நகரில் நடந்த கார் பந்தயத்தில் அஜித்குமார் பங்கேற்று அவருடைய காரில் சீறிப் பாய்ந்து வேகமாக முன்னேறிக்கொண்டிருந்தார். அப்போது அஜித்குமார் தனக்கு முன்னால் சென்ற மற்றொரு காரை முந்துவதற்கு முயன்றபோது அவரது கார் கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்துக்குள்ளாகி 3 முறை ‘பல்டி' அடித்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக அஜித்குமாருக்கு எந்த காயமும் இன்றி உயிர் தப்பினார். அவர் நலமுடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு மாதத்தில் 2வது முறையாக அஜித்குமாரின் கார் விபத்துக்குள்ளாகி உள்ளது. மேலும் இந்த ரேஸில் அவர் 14-வது இடத்தை பிடித்திருக்கிறார். அஜித்குமாரின் கார் விபத்துக்குள்ளான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் அஜித்குமார் கார் விபத்தில் சிக்கிக்கொண்டது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படி கார் விபத்து நடப்பது ஒன்று, இரண்டு முறை அல்ல, பலமுறை என்பதால் ரசிகர்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.