ARTICLE AD BOX
டாக்கா,
வங்கதேசத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரி மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். நாடு முழுவதும் வன்முறை வெடித்ததில், 1400 க்கும் மேற்பட்டோர் பலியாகினர். நாட்டில் வன்முறை பரவி கட்டுக்கடங்காமல் போனதால் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்தார். நாட்டை விட்டு தப்பிய அவர் இந்தியாவில் தஞ்சமடைந்தார். ஹசீனா ஆட்சி கவிழ்ந்ததைத் தொடர்ந்து, பொருளாதார நிபுணரும் நோபல் பரிசு வென்றவருமான முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முகமது யூனுஸ் அளித்த பேட்டியில்,''ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறும் முன் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து அவரிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. அவர் மட்டுமல்ல, அவருடன் தொடர்புடைய நபர்கள், அவரது குடும்ப உறுப்பினர்கள், அவரது கூட்டாளிகள் உள்ளிட்டோர் விசாரணை செய்யப்படுவார்கள்.
வங்கதேசத்தில் உள்ள சர்வதேச குற்ற தீர்ப்பாயம் ஹசீனாவுக்கு எதிராக 2 முறை கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. அவரை நாடு கடத்த கோரி இந்தியாவிற்கு 2 முறை கடிதங்கள் அனுப்பி உள்ளோம். ஆனால் இது வரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ பதிலும் கிடைக்கவில்லை. வங்கதேச நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவில்லையென்றாலும் அவர் வழக்கை சந்திக்க நேரிடும்'' என்றார்.