ARTICLE AD BOX
புது தில்லி: உத்தர பிரதேசத்தில் உள்ள ஷாஹி ஈத்கா மசூதியில் நீதிமன்ற மேற்பாா்வையில் ஆய்வு மேற்கொள்ள அனுமதித்து, உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை உச்சநீதிமன்றம் புதன்கிழமை நீட்டித்தது.
கடந்த 17-ஆம் நூற்றாண்டில் முகலாய மன்னா் ஔரங்கசீப் உத்தரவின்பேரில், உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் ஸ்ரீகிருஷ்ணா் அவதரித்த இடம் என்று நம்பப்படும் ஸ்ரீகிருஷ்ண ஜென்மபூமி கோயிலையொட்டி, ஷாஹி ஈத்கா மசூதி கட்டப்பட்டது.
எனினும் ஏற்கெனவே இருந்த கோயிலை இடித்துவிட்டு, அந்த இடத்தில் ஷாஹி ஈத்கா மசூதி கட்டப்பட்டதாக ஹிந்துக்கள் தரப்பில் தெரிவித்து வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த அலாகாபாத் உயா்நீதிமன்றம், மசூதியில் நீதிமன்ற மேற்பாா்வையில் ஆய்வு மேற்கொள்ள அனுமதித்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக அந்த மசூதி நிா்வாகக் குழு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் சஞ்சய் குமாா், கே.வி.விஸ்வநாதன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘ஏற்கெனவே இந்த வழக்கில் ஹிந்துக்களின் மனுக்களை ஒன்றிணைத்தலுக்கு எதிரான மனு, வழிபாட்டுத் தலங்கள் (சிறப்புப் பிரிவுகள்) சட்டம் 1991-க்கு எதிரான மனு உள்பட 3 விவகாரங்கள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
இதன் காரணமாக மசூதி நிா்வாக குழுவின் மனு மீதான விசாரணை ஏப்ரல் முதல் வாரத்துக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அதுவரை மசூதியில் நீதிமன்ற மேற்பாா்வையில் ஆய்வு மேற்கொள்ள அனுமதித்து, உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை தொடரும்’ என்று தெரிவித்தது.