வேளாண்மை பட்ஜெட்டுக்கு நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் வரவேற்பு

14 hours ago
ARTICLE AD BOX


நெல்லை: தமிழ்நாடு அரசின் வேளாண்மை பட்ஜெட்டுக்கு நெல்லை, தென்காசி, தூத்துக்குடி விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு முதல்வராக மு.க.ஸ்டாலின் கடந்த 2021ம் ஆண்டு பொறுப்பேற்ற பிறகு வேளாண்மைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 4 வேளாண்மை பட்ஜெட்டுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், 5வது பட்ஜெட்டை வேளாண்மைத் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். வேளாண்மை பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அம்சங்கள் அறிவிக்கப்பட்டன. 1000 வேளாண்மை பட்டதாரிகள் மற்றும் வேளாண்மை பட்டயதாரர்கள் மூலம் முதல்வரின் உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படும். மக்காச்சோள சாகுபடி பரப்பு, உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்க மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டுத் திட்டம், பசுமை தமிழ்நாட்டை உருவாக்க டெல்டா அல்லாத 29 மாவட்டங்களில் தமிழ்நாடு வேளாண் காடுகள் கொள்கை உருவாக்கப்படும். தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் சீமைக் கருவேல மரங்களை அகற்றி மிளகாய் விளைச்சலை ஊக்குவித்தல் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

மேலும் புதிய மின் மோட்டார் பம்புசெட்டுகள் வாங்கவும், பழைய மின் மோட்டார் பம்புசெட்டுகளை மாற்றவும் 1000 விவசாயிகளுக்கு மானியம், பனை மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பனை சார்ந்த தொழில்களை ஊக்குவிக்கவும் ரூ.1.65 கோடியில் பனை மேம்பாட்டு இயக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. நெல் உற்பத்தித் திறனில் சாதனை அடைந்துள்ள 100 முன்னோடி உழவர்களை ஜப்பான், சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு அழைத்துச் செல்லுதல் உள்ளிட்ட அறிவிப்புகளும் வெளியிடப்பட்டது. இதற்கு நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட விவசாயிகள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். புளியங்குடி விவசாயி கருப்பசாமி கூறுகையில், ‘உழவு தொழிலுக்கு முக்கிய தேவையே நல்ல தரமான விதை தான். வேளாண் பயிர்களின் உற்பத்தி திறனை அதிகரிக்க தரமான சான்று விதைகள் தமிழ்நாடு மாநில விதை மேம்பாட்டு முகமை மூலம் சுமார் 39,500 மெட்ரிக் டன் அளவில் உற்பத்தி செய்ய உள்ளது. இதற்காக சுமார் ரூ.250 கோடி செலவில் விதைப்பண்ணைகள் அமைத்து விதைகள் கொள்முதல் செய்யப்படும்.

அவற்றை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலமாக முதன்முறையாக நெல், சிறு தானியங்கள், பயறு வகைகள், எண்ெணய் வித்து ரகங்களின் தரமான விதைகள், இருப்பு வைத்து வழங்கப்படும் என்ற அறிவிப்பு உண்மையில் விவசாயிகளுக்கு பயன்தரக்கூடியது. மின் இணைப்பு இல்லாத விவசாயிகளுக்கு சூரிய சக்தியால் இயங்கக் கூடிய பம்புசெட்கள் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கபடுவது வரவேற்கத்தக்கது. நமது மாநில மரமான பனை மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க 10 லட்சம் பனை விதைகள், பனை மதிப்பு கூட்டு பொருள் தயாரிக்கும் கூடம் மதிப்பு கூட்டுதல் பயிற்சி அதற்காக நிதி ஒதுக்கீடு செய்ததன் மூலமாக தென்பகுதியில் மக்கள் பயன்பெறுவர்.’தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க நெல்லை மாவட்ட தலைவர் சிங்கம்பட்டி சொரிமுத்து கூறுகையில், ‘முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் விவசாயிகள் நலனுக்காக வேளாண்மைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்து, விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

இந்த நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டில் இயற்கை சீற்றங்களால் பயிர் பாதிப்பிலிருந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் பயிர் காப்பீட்டு திட்டத்திற்கென ரூ.841 கோடி ஒதுக்கியது, வேளாண் விளைபொருட்களுக்கு 100 மதிப்புக் கூட்டும் அலகுகள் அமைக்க ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்தது, 1000 விவசாயிகளுக்கு ரூ.24 கோடி செலவில் முதல்வர் சூரியசக்தி பம்பு செட்டுகள் வழங்கும் திட்டம், விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்குவது, சிறுதானிய உற்பத்திக்கு முன்னுரிமை அளித்துள்ளது, வெளிநாட்டு வேளாண்மை தொழில் நுட்பங்களை நமது தமிழக விவசாயிகள் அறிந்து கொள்ள உதவும் வகையில் முன்னோடி உழவர்களை வெளிநாடு சுற்றுலா அழைத்து செல்லும் திட்டம் ஆகியவை மிகவும் பயனுள்ளதாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.’ கீழப்பாவூர் மாரிமுத்து: ‘எப்போதுமே உழவர்களுக்காக புதிய திட்டங்களை செயல்படுத்துவதில் திமுக அரசு முன்னோடியாக உள்ளது. குறிப்பாக உழவர் சந்தையை முதன் முதலாக அறிமுகப்படுத்தியது திமுக அரசுதான்.

தற்போதைய பட்ஜெட்டில் உழவர் சந்தை காய்கறிகளை ஆன்லைன் வர்த்தக மூலம் வீடு வரை கொண்டு செல்லும் புதிய செயலியை (ஆன்லைன் வர்த்தகம்) அறிமுகப்படுத்தி அதற்கு நிதி ஒதுக்கிய முதல்வருக்கு நன்றி. இதனால் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும். பனை மரங்களின் எண்ணிக்கை அதிகரிக்க பனை தொழில்களை ஊக்குவிக்கும் பொருட்டு ரூ.1.65 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது மிகவும் பாராட்டுக்குரியது.’
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநில துணை தலைவர் ஜாகீர் உசேன்: ‘இயந்திரமயமாக்கல் மானியத்தை அதிகபடுத்தியதை வரவேற்கிறோம். மக்காச்சோள பயிர்களை பாதுகாக்க மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டு திட்டம் ரூ.40 கோடி 27 லட்சம் ஒதுக்கியது வரவேற்கத்தக்தது. சிறுதானிய பயிர்களான கம்பு, கேழ்வரகிற்கு நிதி ஒதுக்கியது வரவேற்கத்தக்கது. ரூ.160 கோடியில் நெல் சாகுபடி பரப்பினை அதிகரித்து உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைய சிறப்பு திட்டத்தை செயல்படுத்தியது வரவேற்கத்தக்கது.

மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டிய குறிப்பாக தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் யானைகள், பன்றிகள், காட்டு விலங்குகள் போன்றவற்றால் ஏற்படும் பயிர் சேதங்களை தடுக்கவும் உயிர் சேதத்தை தடுக்கவும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்காதது ஏமாற்றமளிக்கிறது. மற்றபடி பொதுவாக விவசாயிகளுக்கு ஒரு படி ஏற்றத்தை அளிக்கும் பட்ஜெட்டாக உள்ளது. கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன்: வேளாண் பட்ஜெட்டில் நிலத்தடி நீரை உறிஞ்சும் சீமைக் கருவேல மரங்களை சுமார் 2500 எக்டேர் பரப்பளவில் அகற்ற நடவடிக்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு ஏக்கரில் சீமைக் கருவேல மரங்கள் அகற்ற ரூ.12 ஆயிரம் செலவாகிறது, எக்டேர் என கணக்கிட்டால் ரூ.30 ஆயிரம் வரை ஆகிறது. எனவே அத்தொகையை உயர்த்தி அறிவிக்க வேண்டும். கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் விடுபட்டுப்போன 2335 ஊராட்சிகளுக்கு ரூ.269 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறு தானிய உற்பத்தி இயக்கத்திற்கு ரூ.52 கோடி ஒதுக்கீடு என கூறப்பட்டுள்ளது.

சிறுதானியங்களில் பிரதானமான நாட்டுக் கம்பு வகை அழிந்து வருகிறது. அதனை பாதுகாக்க நடவடிக்கை வேண்டும். நாட்டுக்கோழிப்பண்ணை அமைக்கும் திட்டத்தில் கோழிக்குஞ்சுடன் கூண்டு சேர்த்து வழங்க வேண்டும். உழவர் பாதுகாப்பு திட்டம் சிறுகுறு விவசாயி மற்றும் விவசாய கூலிகள் நலனுக்காக செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் 18 வயது முதல் 65 வரை உள்ள இருபாலரும் உறுப்பினராக இருக்கலாம். குடும்ப தலைவர் விபத்து மற்றும் பேரிடரால் இறந்தால் இதற்கு முன் உதவித்தொ கை ரூ.1 லட்சமாக இருந்தது. தற்போதுஅதை 2 லட்சமாக உயர்த்தி அறிவித்திருப்பது வரவேற்புக்குரியது. இவைதவிர இயற்கை மரணம் ஏற்பட்டால் ரூ.20 ஆயிரம் உதவித்தொகை தற்போது ரூ.30 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இவைதவிர ஈமக்கிரியைக்கு ரூ.2500 என்பதை தற்போது ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது வரவேற்புக்குரியது.

இயற்கை விவசாயத்திற்கு அச்சாரம்
சேரன்மகாதேவி சகுந்தலா தேவி கூறுகையில், ‘விவசாய குடும்பத்தை சேர்ந்த நான் சேரன்மகாதேவி வட்டாரத்தில் மகளிர் சுயஉதவிக் குழுவில் உறுப்பினராக உள்ளேன். வேளாண்மைத்துறையால் எங்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சி மூலம் நாங்கள் வேளாண் இடுபொருட்கள் தயாரித்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறோம். இதன் மூலம் எங்களுக்கு வருமானம் கிடைப்பதோடு மானியமும் வழங்கப்பட்டு வருகிறது. வேளாண் இடுபொருட்கள் குறித்து விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படாமல் இருந்த காலம் மாறி தற்போது விவசாயிகள் ரசாயன உரங்களை தவிர்த்து மெல்ல மெல்ல இயற்கை விவசாயத்திற்கு மாறுவதற்கு இந்த அரசாங்கம் அச்சாரமிட்டுள்ளது. மேலும் மகளிருக்காக இந்த அரசு கொண்டு வந்த திட்டங்களான, மகளிர் இலவச பேருந்து, புதுமைப் பெண் திட்டம், மகளிர் உரிமைத் தொகை போன்ற திட்டங்களால் எங்களை போன்ற பெண்களின் வாழ்வில் வெளிச்சம் ஏற்பட்டுள்ளது, என்றார்.

‘‘பழங்குடியினர் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும்’’
விவசாயிகள் சங்க மாநில முன்னாள் துணை தலைவர் திருக்குறுங்குடி பெரும்படையார் கூறுகையில், ‘வேளாண் உற்பத்தியில் ஈடுபடும் பழங்குடியின, பட்டியலினத்தவர்களுக்கு வழங்கப்படும் மானியம் 40 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதால் பழங்குடியின, பட்டியலின மக்கள் பெரிதும் பயனடைவார்கள். இது அவர்களது வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்படுத்தும். மேலும் வாழ்க்கை தரமும் உயர வாய்ப்பு உள்ளது. மலைவாழ் உழவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் மலைவாழ் உழவர் முன்னேற்றத் திட்டத்திற்கு ரூ.22 கோடியே 80 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. விவசாயிகளை அவர்களது கிராமங்களிலேயே சந்தித்து தொழில்நுட்ப ஆலோசனை வழங்க உழவனை தேடி வேளாண் துறை என்ற திட்டம் செயல்படுத்த உள்ளதால் விவசாயிகளுக்கும், வேளாண் துறையினருக்கும் நேரடி தொடர்பு கிடைப்பதுடன் அதன் மூலம் எளிதாக வேளாண் வளர்ச்சி திட்டங்கள் விவசாயிகளை நேரடியாக சென்றடையும். சிறுதானிய பயிர்களின் பரப்பு, உற்பத்தி திறனை அதிகரிக்க தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. அதிக உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் பரிசு அவர்களை ஊக்கப்படுத்துவதுடன், அதிக விளைச்சலுக்கும் வழிவகுக்கும். இதுபோல வரும் நிதியாண்டில் களக்காடு வாழைத்தார்களுக்கு புவிசார் குறியீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

மலர் சாகுபடி மானியம் அறிவிப்புக்கு நன்றி
விவசாயி கண்ணன் கூறுகையில், ‘உழவர்களுக்காக தனி பட்ஜெட் தாக்கல் செய்து இந்தியாவிற்கே முன்னுதாரணமாக திகழும் திமுக அரசுக்கு நன்றி. உழவர் சந்தை, இலவச மின்சாரம், விவசாய கடன் ரத்து என பல்வேறு திட்டங்களை தந்த திமுக அரசு, தற்போது மலர் சாகுபடிக்கு மானியம் வழங்க ரூ.8 கோடியே 51 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது. தென்காசி மாவட்டத்தின் வடகிழக்கு பகுதி வறட்சியான பகுதி. இந்த பகுதி மக்கள் பெரும்பாலும் பிச்சி பூ, மல்லிகைப்பூ, அரளி பூ மற்றும் பீடி சுற்றியே வாழ்க்கையை நகர்த்துகின்றனர். மலர் சாகுபடி செய்யும் விவசாயிகள் வாழ்வாதாரம் உயரும் வகையில் மலர் சாகுபடி செய்ய மானியம் வழங்கப்படும் என அறிவித்த தமிழக அரசுக்கு விவசாயிகள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தென்காசி மாவட்ட மக்களின் 50 ஆண்டு கால கோரிக்கையான வாசனை திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

The post வேளாண்மை பட்ஜெட்டுக்கு நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் வரவேற்பு appeared first on Dinakaran.

Read Entire Article