ARTICLE AD BOX
Tamil Nadu Agriculture Budget 2025: 2025-2026ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு வேளாண் நிதிநிலை அறிக்கையை, வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் இன்று (மார்ச் 15) சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதற்கு பிறகு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி, பிற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,"திமுக அரசு ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளாக தாக்கல் செய்த ஒரு வேளாண் பட்ஜெட்டை போன்று, இந்த ஆண்டும் ஒரு பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளனர். விவசாயிகளை திமுக அரசு ஏமாற்றுவதில் வல்லவர்கள் என்பதற்கு இந்த வேளாண் பட்ஜெட் ஒரு சான்றாக அமைந்திருக்கிறது.
TN Agriculture Budget 2025: பட்ஜெட் அவியல், கூட்டு போல் உள்ளது...
தமிழக விவசாயிகளின் நலனை காப்பதற்காக ஆண்டுதோறும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்கிறோம் என்ற பெயரில், வேளாண்துறை சார்ந்த ஊரக வளர்ச்சித்துறை, பட்டு வளர்ச்சி துறை, கால்நடை வளர்ச்சித்துறை, பால்வளத்துறை, கூட்டுறவுத்துறை, மீன்வளத்துறை, தொழில்துறை, நீர்வளத்துறை என பல துறைகளை ஒன்றாக இணைத்து ஒரு அவியல், கூட்டு போல் வேளாண்துறை அமைச்சர் சட்டமன்றத்தில் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.
மேலும் படிக்க | Tamilnadu Agriculture Budget : விவசாயிகளுக்கான இலவச அறிவிப்புகள் என்னென்ன?
பருவமழையின் போது பொழியும் மழை நீரை முழுமையாக சேமிக்கும் வகையில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் குடிமராமத்து திட்டத்தை தொடங்கப்பட்டது. ஆனால் அந்தத் திட்டத்தை மேம்படுத்துவதற்கு எவ்வித நிதியையும் இந்த வேளாண் பட்ஜெட்டில் திமுக அரசு ஒதுக்கவில்லை. இதுபோல் கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட எண்ணற்ற திட்டங்களை திமுக அரசு கைவிட்டு விட்டது.
TN Agriculture Budget 2025: குறைந்து வரும் சாகுபடி பரப்பு!
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் இருந்த பைல் சாகுபடி பரப்பளவை விட தற்போதைய திமுக ஆட்சியில் அனைத்து விதமான பயிர் சாகுபடிகளும் குறைந்துவிட்டது. திமுக ஆட்சியில் ஆண்டுதோறும் சாகுபடி செய்யப்படும் நிலப்பரப்பு குறைந்து வருகிறது. குறைந்து வரும் சாகுபடி பரப்பை உயர்த்த திமுக ஆட்சியில் எந்தவித திட்டத்தையும் இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை. அதிமுக ஆட்சியில் அனைத்து விவசாயிகளுக்கும் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது. தற்போதைய திமுக ஆட்சியில் டெல்டா மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் ஷிப்ட் முறையில் மட்டுமே மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
TN Agriculture Budget 2025: குறைந்தபட்ச ஆதார விலை என்னாச்சு?
சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாக தாக்கல் செய்யப்பட்ட இந்த வேளாண் பட்ஜெட்டில், விவசாயிகள் விளைவிக்கும் விலைப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்கும் அறிவிப்புகளாவது வருமா என்று ஒரு விவசாயியாக ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தனர், ஆனால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
விவசாயிகள் விளைவித்த நெல் மூட்டைகளை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லும்போது அங்கு நெல் மூட்டைகளுக்கு உரிய பாதுகாப்பு இல்லை. ஒவ்வொரு நெல் மூட்டைகளுக்கும் 40 ரூபாய் லஞ்சம் பெறப்படுகிறது" என குற்றஞ்சாட்டினார்.
TN Agriculture Budget 2025: 'வெள்ளை அறிக்கை வேண்டும்'
நேற்று தாக்கல் செய்யப்பட்ட பொது பட்ஜெட் குறித்து விளக்கம் அளித்த எடப்பாடி பழனிசாமி, "தமிழ்நாடு அரசுக்கு ஏற்படும் நிதிச் சுமையை கட்டுப்படுத்துவதற்காக நிதி மேலாண்மை குழு அமைக்கப்பட்டது. அந்த குழு இதுபோன்ற ஆலோசனைகளை ஆளும் திமுக அரசுக்கு வழங்கியது, அந்த குழுவின் அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட்டதா, இது போன்ற திட்டங்களை அந்த குழு அரசுக்கு ஆலோசனைகளாக அளித்தது என்பது குறித்து ஒரு விவரத்தை கூட ஆளும் ஸ்டாலின் அரசு தெரிவிக்கவில்லை. இதுகுறித்து ஒரு வெள்ளை அறிக்கையை ஸ்டாலின் அரசு வெளியிட வேண்டும்.
TN Agriculture Budget 2025: இந்தியா கூட்டணம் என்ன செய்தது?
'இந்தியா கூட்டணி, இந்தியா கூட்டணி' என மூச்சுக்கு 300 முறை சொல்லும், இந்தியா கூட்டணி அமைத்த பிறகு தமிழ்நாட்டுக்கு என்ன பலனை பெற்றுத் தந்தார்?, பலன் கிடைக்கும் வகையில் என்ன நடவடிக்கைகளை ஸ்டாலின் எடுத்தார்?. திமுகவுக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்த மக்களுக்கு நல்ல திட்டங்களை செய்ததாக இதுவரை எவ்வித வரலாறும் கிடையாது.
ஒட்டுமொத்தமாக விவசாயிகளை ஏமாற்றுவதற்காகவே திமுக அரசு வேளாண் பட்ஜெட் என்ற ஒரு நாடகத்தை அரங்கேற்றி உள்ளது. இது விவசாயிகளை ஏமாற்றுவதற்கான ஒரு கண் துடைப்பு நாடகமே. இது மக்களை ஏமாற்றும் ஒரு தந்திர மாடல் தான் திமுகவின் இந்த வேளாண் பட்ஜெட்" என கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
மேலும் படிக்க | தமிழக அரசு வழங்கும் ரூ. 2000 உதவித்தொகை! யாருக்கெல்லாம் கிடைக்கும்?
TN Agriculture Budget 2025: அண்ணாமலை கடும் விமர்சனம்
இதேபோல், தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வேளாண் பட்ஜெட்டை விமர்சித்து அவரது அதிகாரப்பூர்வ X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,"வேளாண் பட்ஜெட் என்ற பெயரில் பொய்யும் புரட்டுமாக ஒன்றை தாக்கல் செய்திருக்கிறது திமுக அரசு. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். திமுகவின் பட்ஜெட் மொத்தமுமே பொய்களும் புரட்டுகளுமாகத்தான் இருக்கிறது. இந்தப் பொய்களைப் பொது இடங்களில் ஒளிபரப்பினால், மக்கள் வந்து பார்ப்பார்கள் என்று யார் இவர்களிடத்தில் கூறினார்கள் என்று தெரியவில்லை. இரண்டு நாட்களாக, மக்கள் வரிப்பணத்தை வீணடித்ததுதான் மிச்சம்.
TN Agriculture Budget 2025: 4 லட்சம் ஏக்கர்கள் குறைவு
கடந்த ஆண்டு வெளியிட்ட வேளாண் பட்ஜெட்டில், 2022 - 2023 ஆம் ஆண்டில், தமிழகத்தில் மொத்த சாகுபடிப் பரப்பு, 155 லட்சம் ஏக்கர் என்று கூறியிருந்தார்கள். இந்த ஆண்டு பட்ஜெட்டில், அது, 151 லட்சம் ஏக்கராக உள்ளது என்று கூறியிருக்கிறார்கள். சாகுபடிப் பரப்பு, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 4 லட்சம் ஏக்கர் குறைந்திருக்கிறது என்பது தான் உண்மை. ஆனால், அதை மறைக்க, நான்கு ஆண்டுகளுக்கு முன்புள்ள 2019 – 2020 சாகுபடிப் பரப்பை விட இந்த ஆண்டு உயர்ந்திருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். ஏன்? தமிழக மக்களை எத்தனை முட்டாள்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறது திமுக?.
TN Agriculture Budget 2025: பயிர்கடன்கள் - 'பொய் சொல்லும் அமைச்சர்கள்'
பயிர்க்கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படவில்லை என்று கடந்த பிப்ரவரி மாதம் நாங்கள் கூறியபோது, கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் வந்து அம்புலிமாமா கதைகளைக் கூறிச் சென்றார். இன்றைய வேளாண் பட்ஜெட்டில், பயிர்க்கடன் ரூ.1,774 கோடி இன்னும் தள்ளுபடி செய்யப்படவில்லை என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. வெறும் பொய்யிலும் புரட்டிலும் காலம் தள்ளிக் கொண்டிருக்கிறது திமுக அரசு. திமுக அமைச்சர்களுக்கு, இப்படிக் கூசாமல் பொய் சொல்ல வெட்கமாகவே இருக்காதா?
நெல்லுக்கு ரூ.2,500, கரும்புக்கு ரூ.4,000 குறைந்தபட்ச ஆதார விலை என்ற வாக்குறுதி எல்லாம் வெறும் பேச்சளவிலேயே போய்விட்டது. விவசாயிகளைத் தொடர்ந்து வஞ்சித்து வருவதையே வேலையாக வைத்திருக்கும் திமுக அரசின் இந்த வேளாண் பட்ஜெட், வெறும் காகிதக் குவியலே தவிர வேறொன்றுமில்லை" என விமர்சித்துள்ளார்.
மேலும் படிக்க | 2026 தேர்தலை இந்த 2 விஷயம் தான் தீர்மானிக்க போகிறது - தமிழிசை சௌந்தரராஜன்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ