வெஸ்ட் இண்டீஸ், இலங்கையைத் தொடர்ந்து சரிவை சந்திக்கும் பாகிஸ்தான்!

18 hours ago
ARTICLE AD BOX

உலகளவில் கிரிக்கெட் விளையாட்டில் பாகிஸ்தான் அணி பல்வேறு சாதனைகளைச் செய்துள்ளது. 1999 இல் ஒருநாள் உலகககோப்பை, 2009 இல் டி20 உலகக்கோப்பை மற்றும் 2017 இல் சாம்பியன்ஸ் டிராபி என 3 ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளது பாகிஸ்தான். சாம்பியன் அணியான பாகிஸ்தானின் இன்றைய நிலைமை சரிவை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது. தொடர் தோல்விகள், முன்னணி வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டம் மற்றும் தேர்வுக் குழுவில் பிரச்சினை என பாகிஸ்தான் அணிக்கு எல்லா பக்கமும் சரிவுகள் தொடங்கி விட்டன. பாகிஸ்தானின் சரிவுக்கு காரணம் என்ன என்பதை அலசுகிறது இந்தப் பதிவு.

ஒரு காலத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை யாராலும் வீழ்த்த முடியாத நிலை இருந்தது. ஆனால் இன்றோ சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு கூட தகுதி பெற முடியாத நிலையில் இருக்கிறது. அதேபோல் இலங்கை அணியும் ஐசிசி கோப்பைகளை வென்று, எதிரணிக்கு சவால் கொடுக்கும் விதமாக ஆடி வந்தது. ஆனால் இன்று சரிவைச் சந்தித்து வருகிறது. இந்த இரு அணிகளிலும் மூத்த வீரர்களின் ஓய்வுக்குப் பிறகு, வெற்றிப் பாதைக்குத் திரும்ப முடியாமல் திணறுகின்றன.

ஜெயசூர்யா பயிற்சியாளரான பிறகு, இலங்கை அணி தற்போது மெல்ல மெல்ல எழுச்சி கண்டு வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் திறமையான வீரர்கள் இருந்தும், தொடர் வெற்றிகளைக் குவிக்கத் தவறுகிறது. தற்போது வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கையைப் போல் பாகிஸ்தானும் தனது கிரிக்கெட் தரத்தை இழந்து விட்டதா என்று கேள்வி விமர்சகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

பாகிஸ்தான் அணியின் பலமே வேகப்பந்து வீச்சுதான். வக்கார் யூனுஸ், வாசிம் அக்ரம் மற்றும் சோயிப் அக்தர் என பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகும். ஆனால் தற்போதைய பந்து வீச்சாளர்களின் வேகமும் குறைவாக உள்ளது; அதோடு ரன்களையும் அதிகமாக விட்டுக் கொடுக்கின்றனர். இதன் விளைவாக சொந்த மண்ணில் கூட அதிக தோல்விகளை சந்தித்து வருகிறது பாகிஸ்தான்.

தேர்வுக்குழவில் பிரச்னையா அல்லது அணி வீரர்களிடத்தில் ஒற்றுமை இல்லையா என பலதரப்பில் இருந்தும் விமர்சனங்கள் எழுகின்றன. மூத்த வீரர்கள் தங்களின் நண்பர்களை மட்டும் அணியில் சேர்த்துக் கொள்வதாகவும் சில குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இருப்பினும் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் உள்ளிட்ட முன்னணி வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டம் தான் இதற்கெல்லாம் காரணம் என பாகிஸ்தான் ரசிகர்கள் ஆதங்கப்படுகின்றனர். அதோடு ஃபீல்டிங்கிலும் சில குறைகள் இருப்பதை நம்மால் களத்தில் காண முடிகிறது.

தொடர் டெஸ்ட் தோல்வி மற்றும் ஐசிசி தொடர்களில் தோல்வி என சமீப காலமாக பாகிஸ்தான் அணி இறங்குமுகமாகவே இருக்கிறது. இதில் இருந்து மீண்டு வர இளம் வீரர்களை தேர்வு செய்தும் பலனில்லை என்றே சொல்லப்படுகிறது. நியூசிலாந்தில் டி20 போட்டியில் விளையாடிய இளம் பாகிஸ்தான் அணி மோசமான பேட்டிங்கை விளையாடி தோற்றுள்ளது. இந்நிலையில் எப்போது தான் பாகிஸ்தான் மீண்டு வரும் என அந்நாட்டு ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

அடுத்த ஆண்டு டி20 உலகக்கோப்பை மற்றும் 2027 இல் ஒருநாள் உலகககோப்பை நடைபெற இருப்பதால், அதற்குள் பாகிஸ்தான் அணி மீண்டு வர வேண்டும். இல்லையேல் லீக் சுற்றைக் கூட தாண்ட முடியாத சூழலில் பாகிஸ்தான் சிக்கிக்கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை.

இதையும் படியுங்கள்:
சச்சின் டெண்டுல்கரை 'சார்' என அழைக்கும் பாகிஸ்தான் வீரர் யார் தெரியுமா?
Pakistan team
Read Entire Article