வெளிநாட்டு பறவைகளை ஈர்க்கும் மண்டகத்தே பறவைகள் சரணாலயம்!

5 days ago
ARTICLE AD BOX

இன்றைய காலகட்டத்தில் நகரமயமாதலின் விளைவாக எங்கு பார்த்தாலும் வானுயர கட்டிடங்களே காட்சியளிக்கின்றன. வாகனங்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே போவதால், மாசுபாட்டிற்கு பஞ்சமே இல்லை. குடும்பம் மற்றும் வேலை என ஓடிக் கொண்டிருக்கும் மனிதர்களே! இயற்கையை ரசிப்பதற்கும் சற்று நேரம் ஒதுக்குங்கள். அதிலும் பல வகையான பறவைகளின் இனிமையான சப்தத்தை கேட்கத் தவறாதீர்கள்.

பறவைகள் அதிகளவில் கூடும் இடத்தைத் தான் பறவைகள் சரணாலயம் என்கிறோம். இப்பகுதிக்கு அருகில் வாழும் மக்கள் உண்மையில் கொடுத்து வைத்தவர்கள் தான். அவ்வகையில் நாம் இப்போது பாரக்கப் போவது கர்நாடக மாநிலத்தில் உள்ள மண்டகத்தே பறவைகள் சரணாலயத்தைப் பற்றித்தான்.

நகரங்களில் வாகனங்களின் சத்தம், காதைக் கிழித்துக் கொண்டிருக்க, பறவைகள் சரணாலயம் இருக்கும் இடங்களில் நிச்சயமாக இன்னிசை மழைதான். அப்படி ஒரு இன்னிசையைத் தான் தினந்தினம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் மண்டகத்தே கிராம மக்கள். ஏனெனில் இங்கு தான் ஒரு குட்டித் தீவைப் போன்ற அமைப்பில் மண்டகத்தே பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது.

நாட்டில் உள்ள 20 முக்கியத்துவம் வாய்ந்த பறவைகள் சரணாலயங்களில் இதுவும் ஒன்று. கர்நாடகத்தின் சிமோகா நகர்ப் பகுதியில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது மண்டகத்தே பறவைகள் சரணாலயம். சுமார் 1.14 ஏக்கரில் அமைந்துள்ள இந்த சரணாலயத்தைச் சுற்றி காடுகள் நிரம்பியிருக்க, துங்கா நதியும் பாய்கிறது. பறவைகள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் இங்கு நிலவுவதால் தான், இங்கு வெளிநாட்டு பறவைகளும் அடிக்கடி வலசை போகின்றன.

பருவமழைக் காலங்களில் பெருக்கெடுக்கும் துங்கா நதியால், இந்தத் தீவு மூழ்கும் அபாயம் ஏற்படும். இந்நேரத்தில் பறவைகள் தங்கள் கூடுகளை மரக்கிளைகளில் சற்று உயரமாகக் கட்டும். கொக்கு, வெண் கழுத்து நாரை, அகல்வாய் நாரை, இராக் கொக்கு மற்றும் கரும்புள்ளி மீன்கொத்தி உள்ளிட்ட பல பறவையினங்கள் இங்கு வசிக்கின்றன. மேலும் இங்கு கிங்பிஷர், டார்ட்டர்ஸ், நைட் ஹெரான்ஸ் மற்றும் மெய்டன் எக்ரட் போன்ற வெளிநாட்டு பறவைகளும் அவ்வப்போது வருகை தருகின்றன.

கூடு கட்டும் பறவைகளை சுற்றுலா பயணிகள் மிக அருகில் காண்பதற்கு, படகு சவாரி செய்யும் வசதியும் இங்குள்ளது. மேலும், உயரமான இடத்தில் இருந்து பறவைகளைப் பார்ப்பதற்கு கண்காணிப்பு கோபுரமும் கட்டப்பட்டுள்ளது. ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான பருவ காலத்தில் இங்கு 5,000-க்கும் மேற்பட்ட பறவைகள் வருகை புரிகின்றன. இதில் உச்சகட்ட பருவமான ஆகஸ்ட் மாதத்தில் தான் பல பறவையினங்கள் முட்டையிட்டு அடை காக்கின்றன.

இதையும் படியுங்கள்:
மீன்பிடித் திருவிழாவின் முக்கியத்துவம்: ஆண்டுதோறும் பாதுகாக்கப்படும் பாரம்பரியம்!
Mandagadde Birds Sanctuary

மண்டகத்தே பறவைகள் சரணாலயம் சிமோகா மாவட்டத்தில் இருந்து 30கி.மீ. தொலைவிலும், மங்களூரில் இருந்து 140 கி.மீ. தொலைவிலும், பெங்களூரில் இருந்து 345 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. சிமோகாவில் இரயில் நிலையம், விமான நிலையம் மற்றும் பேருந்து நிலையம் ஆகிய மூன்றும் இருக்கிறது. சுற்றுலா பயணிகள் யாரேனும் இங்கு வர நினைத்தால் சிமோகா நகரத்திற்கு வந்து விட்டு, அங்கிருந்து பேருந்து அல்லது டாக்ஸி மூலமாக மண்டகத்தே பறவைகள் சரணாலயத்திற்கு எளிதாக செல்லலாம்.

Read Entire Article