ARTICLE AD BOX
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் அரசியல் முடிவுகள் எப்போதுமே வித்தியாசமானது... தனது எண்ணங்களை செயல்படுத்த அவர் தேர்ந்தெடுப்பவர்களும் வித்தியாசமானவர்கள்தான். உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க்கை அமெரிக்க அரசுக்குள் கொண்டு வந்து அதிரடியாக செலவுக்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார் ட்ரம்ப்.
இது தவிர வெளிநாடுகளை தன் வழிக்கு கொண்டு வர ட்ரம்ப் தேர்வு செய்துள்ள நபரின் பெயர் ஸ்டீட் விட்காஃப். இவர் அமெரிக்க வெளியுறவுத்துறையிலோ அல்லது வேறு அரசுத் துறையிலோ வேலை செய்பவர் அல்ல. ட்ரம்ப்பை போலவே விட்காஃபும் ஒரு ரியல் எஸ்டேட் தொழிலதிபர். நீண்ட கால நண்பர். எந்த ஒரு சிக்கலான பிரச்சினைக்கும் எளிதாக தீர்வு காண்பதிலும் முரணாக பேசுபவர்களை தட்டிக்கொடுத்து, தட்டி வைத்து வழிக்கு கொண்டு வருவதிலும் கில்லாடி விட்காஃப்.
எனவேதான் வெளிநாடுகளுடனான பேச்சுவார்த்தைக்கு விட்காஃபை பயன்படுத்தி வருகிறார் ட்ரம்ப். நெடுங்காலமாக பதற்றம் நீடித்து வரும் மத்திய கிழக்கின் சிறப்பு தூதராக விட்காஃபை நியமித்துள்ளார். ஓராண்டுக்கு மேலாக இழுத்துக்கொண்டே வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரை ஒரே வாரத்தில் நிறுத்த விட்காஃபின் ராஜதந்திரம் காரணமாக அமைந்தது. இதைத்தொடர்ந்து உக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பாக அமெரிக்கா, ரஷ்யா இடையே தொடங்கியுள்ள பேச்சுவார்த்தையிலும் விட்காஃப் பிரதான நபராக திகழ்கிறார். ரஷ்யாவின் கறாரான நிலைப்பாட்டை சமாளித்து அமெரிக்காவுக்கு சாதகமான ஒரு முடிவை விட்காஃப் எப்படி கொண்டு வரப்போகிறார் என்பது சர்வதேச விவகார நிபுணர்களின் சுவாரசிய எதிர்பார்ப்பு.