ARTICLE AD BOX

Director Myskin: சித்திரம் பேசுதடி திரைப்படம் மூலம் கோலிவுட்டில், இயக்குனராக களமிறங்கியவர் மிஷ்கின். நிறைய நாவல்களை படிப்பவர். ஜப்பான் மொழி படங்களில் அதிக ஆர்வம் கொண்டவர். ஜப்பான் மொழியில் வித்தியாசமான கதைகளை இயக்கி பெரும் புகழ் பெற்ற அகிரா குரோசாவை தனது குருவாக ஏற்றுக்கொண்டவர். அதனால்தான் மிஷ்கின் படங்களில் குரோசாவின் பாதிப்பு சில காட்சிகளில் இருக்கும்.
தமிழ் சினிமாவில் ஒரு வித்தியாசமான கதை சொல்லியாக இருப்பவர் மிஷ்கின். பல இயக்குனர்களுக்கும் இவரை பிடிக்கும். தான் எடுக்கும் படங்களில் பல பரிசோதனை முயற்சிகளை செய்வார். காமெடி நடிகர் பாண்டியராஜனை அஞ்சாதே படத்தில் வில்லனாக நடிக்க வைத்தார். மிஷ்கினால் மட்டுமே அப்படி யோசிக்க முடியும்.

சேரனை வைத்து யுத்தம் செய் படத்தை எடுத்தார். அந்த படத்தில் இயக்குனர் அமீரை ஒரு பாடலுக்கு நடனமாட வைத்தார். இதையெல்லாம் யாருமே செய்து பார்த்தது இல்லை. தனது படங்களில் பல புதுமுக நடிகர், நடிகைகளை அறிமுகம் செய்துள்ளார். பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ என முக்கிய படங்களை இயக்கியுள்ளார்.
நல்ல இயக்குனராக இருக்கும் இவர் சினிமா விழாக்களில் பேசும்போது கெட்டவார்த்தைகளை பயன்படுத்திவிடுவார். அதோடு, சர்ச்சையான கருத்துக்களையும் சொல்லி பலரிடமும் திட்டு வாங்குவார். வெற்றிமாறன், அமீர் என எல்லோரும் இருந்த மேடையில் இளையராஜாவை ‘அவன் இவன்’ என சொல்லி சர்ச்சையில் சிக்கினார். அதன்பின் மன்னிப்பும் கேட்டார். திரையுலகில் மட்டுமல்ல. ரசிகர்கள் பலருக்குமே மிஷ்கின் மீது தவறான இமேஜை கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதீத அன்பு மற்றும் உரிமையில்தான் அவர் அப்படி பேசுகிறார். அதை எல்லோரும் சரியாக புரிந்துகொள்வார்கள் என எதிர்பார்க்க முடியாது.

இதனால் மனம் வெறுத்துப்போய் சீக்கிரம் சினிமாவிலிருந்து விலகிவிடுவேன் எனவும் சொன்னார். ஒருபக்கம், நடிப்பிலும் கலக்கி வருகிறார். அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான டிராகன் படத்தில் மிஷ்கினின் நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஒரு பேட்டியில் மிஷ்கின் பற்றி பேசியுள்ள சமுத்திரக்கனி ‘வெற்றிமாறன் இயக்கிய விசாரணை படத்தை ரிலீஸுக்கு முன்னாடி மிஷ்கின் பார்த்தான். அந்த படம் அவனுக்கு பிடித்துப்போனதால் உடனே இயக்குனர் ஷங்கர், மணிரத்னம் என பலரையும் அழைத்து வந்து ஒரு ஹாலை பிடித்து அவர்களை படம் பார்க்க வைத்து ‘இந்த படத்தை பற்றி நீங்கள் அதிகம் பேச வேண்டும். மிகவும் நல்ல படம்’ என கோரிக்கை வைத்தான். அவன் கையில் பணமே இல்லை. 25 லட்சம் ரூபாய் கடன் வாங்கி விசாரணை படத்தை ரசிகரக்ளிடம் கொண்டு சேர்த்தேன். இந்த மனசு யாருக்கு வரும்?’ என நெகிழ்ந்து பேசியிருக்கிறார்.