ARTICLE AD BOX
குடம்புளி சர்பத்:
குடம்புளி 100 கிராம்
வெல்லம் (அ)
நாட்டுச் சர்க்கரை 500 கிராம்
குடம்புளியை ஒரு கப் தண்ணீர்விட்டு ஆறு மணிநேரம் ஊற விடவும். பின்பு புளியை நன்கு அரைத்து எடுக்கவும். வாணலியில் வெல்லத்தை பொடித்து போட்டு கரைந்ததும் கல்மண் போக வடிகட்டி கொதிக்கவிடவும். அதில் அரைத்து வைத்துள்ள புளி கரைசலை விட்டு நன்கு கொதிக்க விடவும். 20 நிமிடங்கள் நன்கு கொதித்து வற்றிய பின் இறக்கவும். சூடு ஆறியதும் ஒரு பாத்திரத்தில் போட்டு மூடி ஃபிரிட்ஜில் வைக்கவும்.
தேவைப்படும் சமயம் ஒரு கப் நீரில் 2 ஸ்பூன் என்னும் அளவில் கலந்து குடிக்கலாம். விருப்பப்பட்டால் தேன் ஒரு ஸ்பூன் கலந்து குடிக்க ஜீரண சக்தி அதிகரிக்கும். உடல் எடையை குறைக்கும். தசைகளை உறுதியாக்கும், வாதம் மற்றும் பல்வேறு உடல் உபாதைகளுக்கும் சிறந்தது.
இஞ்சி மின்ட் சர்பத்:
இஞ்சி ஒரு துண்டு
சீரகம் 1/2 ஸ்பூன்
மிளகு 1/2 ஸ்பூன்
எலுமிச்சம் பழம் 1
கறுப்பு உப்பு 1/2 ஸ்பூன்
சர்க்கரை 1//4 கப்
சோடா 4 கப்
புதினா இலைகள் சிறிது
இஞ்சி, மிளகு, சீரகம் மூன்றையும் மிக்ஸியில் சிறிது நீர் விட்டு அரைத்து வடிகட்டிக் கொள்ளவும். எலுமிச்சம் பழத்தை சாறு எடுக்கவும். ஒரு பாத்திரத்தில் அரைத்து வடிகட்டிய ஜூஸ், எலுமிச்சம் பழ சாறு, கருப்பு உப்பு, சர்க்கரை ஆகியவற்றுடன் சோடாவை கலந்து ஃப்ரிட்ஜில் வைத்து குளிர வைக்கவும். பருகும் சமயம் டம்ளர்களில் விட்டு மேலாக பொடியாக நறுக்கிய புதினா இலைகளைத் தூவி பருக வெயிலுக்கு இதமாகவும் ருசியாகவும் இருக்கும்.
கட்டா மிட்டா ஆம் கா பன்னா:
மாங்காய் 3
சீரகத் தூள் 2 ஸ்பூன்
மிளகுத்தூள் 2 ஸ்பூன்
பொடித்த சர்க்கரை 1 கப்
கறுப்பு உப்பு 1/2 ஸ்பூன்
பொடி உப்பு சிறிது
தண்ணீர் 6 கப்
மாங்காயை கழுவி 6 கப்பு தண்ணீர் விட்டு குக்கரில் இரண்டு விசில் விடவும். வெந்ததும் தோல், கொட்டை ஆகியவற்றை எடுத்துவிட்டு நன்கு மசிக்கவும். மாங்காய் வேக வைத்த தண்ணீரில் உப்பு மிளகு பொடி வறுத்துப் பொடித்த சீரகப்பொடி, சர்க்கரை, கருப்பு உப்பு, மாங்காய் கூழ் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். பிரிட்ஜில் வைத்து தேவைப்படும் சமயத்தில் விருப்பப்பட்டால் மேலும் சிறிது நீர் சேர்த்து பருக தொண்டைக்கு இதமாக இருக்கும். ருசியும் அபாரமாக இருக்கும்.