வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் பொள்ளாச்சி பகுதியில் கொப்பரை உலர வைக்கும் பணி தீவிரம்

23 hours ago
ARTICLE AD BOX

பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் கொப்பரை உலர வைக்கும் பணி தீவிரமாக உள்ளது. தினமும் வெளியிடங்களுக்கு அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுவதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை தாலுகா பகுதிகளில் தென்னை விவசாயம் அதிகளவு உள்ளது. கொப்பரை தேங்காய் உற்பத்தி சுற்றுவட்டார கிராமங்களில் சுமார் 300க்கும் மேற்பட்ட களகங்களில் கொப்பரை உலரவைக்கப்படுகிறது. கொப்பரையை உலரவைத்து, பின் எண்ணெய் மற்றும் பால்பவுடர் உள்ளிட்டவை தயாரிக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரள, ஹைதராபாத் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் அனுப்பிவைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் கோடை வெயிலின் தாக்கம் இருக்கும்போது, கொப்பரை உலரவைக்கும் பணி அதிகளவில் நடைபெறுகிறது.

கடந்த ஆண்டில், ஜூன் மாதத்திலிருந்து சில மாதமாக தொடர்ந்து பெய்த பருவமழையாலும், அதன்பின் பனியாலும் அந்நேரத்தில் கொப்பரை உலர வைக்கும்பணி தடைபட்டது. மேலும், கொப்பரை உற்பத்தி சரிந்து, வெளியிடங்களுக்கு அனுப்புவது மிகவும் குறைவானது. சில மாதத்திற்கு பிறகு கடந்த மாதம் துவக்கத்திலிருந்து வெயிலின் தாக்கம் அதிகமானது. அதிலும், கடந்த ஒரு மாதமாக வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமானது. இரவு நேரத்தில் லேசான பனி இருந்தாலும், கடந்த சில வாரமாக பகல் நேரத்தில் சுட்டெரிக்கும் வெயிலால், பல்வேறு கிராமங்களில் உள்ள களங்களில் கொப்பரை உலர வைக்கும் பணி தீவிரமாக உள்ளது. கடந்த ஆண்டில் பருவமழை இருந்தபோது, கொப்பரை உலர வைக்கும் பணி குறைவால், அந்நேரத்தில் வெளியிடங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் கொப்பரையின் அளவு நாள் ஒன்றுக்கு 200 டன்னுக்கு குறைவான அளவிலே இருந்தது.

ஆனால், தற்போது நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால், பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியிலிருந்து தினமும் டன் கணக்கில் வெளியிடங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிப்பால், பல உலர் களங்களில் பகல் மற்றும் இரவு என தொடர்ந்து உலர வைக்கும் பணி நடக்கிறது. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகமாகும் என்பதால், அந்நாட்களில் கொப்பரை உலர வைத்து, வெளியூர்களுக்கு கூடுதலாக அனுப்பும் பணி இருக்கும் என கொப்பரை உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

The post வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் பொள்ளாச்சி பகுதியில் கொப்பரை உலர வைக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Read Entire Article