வெண்ணிற இரவுகளை வென்ற இயற்கை.. காதல் தோற்றால் சொல்லியனுப்பு... இயக்குநருக்கு பாராட்டு!

18 hours ago
ARTICLE AD BOX

வெண்ணிற இரவுகளை வென்ற இயற்கை.. காதல் தோற்றால் சொல்லியனுப்பு... இயக்குநருக்கு பாராட்டு!

Specials
oi-Pandidurai Theethaiah
| Published: Sunday, March 16, 2025, 14:16 [IST]

சென்னை: ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் இழந்த காதலை நினைத்தபடியே மனதுக்குள் வருந்திக்கொள்வது இயல்பே. சிலர் நிறைவேறாத தனது முதற்காதலை நினைத்து ஏங்கிக் கொண்டேதான் இருக்கிறார்கள். திரும்ப ஒருமுறை அந்தப் பெண்ணை அல்லது அந்த ஆணை சந்தித்துவிட முடியாதா என ஏக்கம் கொண்டிருக்கிறார்கள். விழித்த பின்பு கனவுக்குள் திரும்பப் போவது எளிதா என்ன? அதேபோன்று இயற்கை படமும். இப்படத்தை இயக்கிய இயக்குநர் ஜனநாதனின் படைப்புகளில் ஆகச்சிறந்த திரைப்படமாகும். அவரது பிறந்தநாளில் இப்படத்தை கொண்டாடுவதுதான் அவருக்கு நாம் செய்யும் மரியாதையாக இருக்கும்.

இயக்குநர் எஸ் பி ஜெகநாதன் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டில் வெளிவந்த காதல் திரைப்படம் தான் இயற்கை. ஷாம், குட்டி ராதிகா, அருண் விஜய் நடித்திருக்கும் இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் வி ஆர் குமார் தயாரிக்க, இசையமைப்பாளர் வித்யாசாகர் இசையமைத்துள்ளார்.ரஷ்ய எழுத்தாளர் தஸ்தாயெவ்ஸ்கி எழுதிய, வெண்ணிற இரவுகள் என்ற கதையை தழுவி எடுக்கப்பட்ட படம் தான் இயற்கை.

special memories on the film iyarkai directed by Director Jananathan

விசித்திரமான காதல்: காதல் விசித்திரமானது. யாரை, எப்போது தீண்டும் என, எவராலுமே கணிக்க முடியாது. இலக்கியத்தில் காதலின் துயரமே அதிகம் இடம்பெறுகிறது. எதார்த்தத்தில் காதல் என்னவாக இருக்கிறது? காதலை மனித சமூகம் என்னவாக உள்வாங்கியிருக்கிறது என்றால், நினைத்துப் பார்க்கவே முடியாத ரணங்களின் சுவடுகளே விஞ்சுகிறது. இலக்கிய மேற்கோள்களைக் காட்டி பூதாகரப்படுத்தப்பட்ட சினிமாக்களில் காதல் வாழ்ந்தது, வாழ்கிறது, வாழும். இனம், மொழி, சாதி, பருவம், பாலினம், என பாகுபாடற்றது காதல்.

தனித்துவமான படைப்பு: இயற்கை திரைப்படத்தை வெறும் முக்கோணக் காதல் கதை எனக் கடந்து சென்றுவிட முடியாது. அதில் க்யூப தேசத்தையும் பிடல் காஸ்ட்ரோவையும் அறிமுகம் செய்தார். தொழில்முறை கடல் பயணத்தில் வாழ்க்கையை தொலைத்தவர்களின் ஏக்கம், கப்பல்கள் வந்துசெல்லும் துறைமுகத்தை நம்பி வாழும் எளிய மனிதர்கள், அங்கே துளிர்க்கும் காதல், அதன் தூய்மை, அதன் பிரிவு, என அனைத்திலும் உயர்ந்து நிற்கும் கலங்கரை விளக்கம் போல் இயற்கை தனித்துவமான படைப்புதான்.

காத்திருப்பு: கடற்கரை அருகே முட்டிக்கால் அளவிற்கு இருக்கும் தண்ணீரில் பைசா நகர கோபுரம் போல் சாய்ந்து நிற்கும் கலங்கரை விளக்கம், பல காதலர்களின் சிற்பமாய் உறைந்து கிடக்கிறது. கண்டும் காணாத நகரம் போல் இருக்கும் அந்த இடத்தில் உடைந்து சிதிலமடைந்த கலங்கரை விளக்க கண்ணாடி மாடத்தில் ஒரு பெண் ஏக்கம் கலந்த கண்களோடு காதலனுக்காக காத்திருக்கும் கதாநாயகியை இயக்குநர் ஜனநாதன் அறிமுகப்படுத்துவார்.

அப்போது, நாடு விட்டு, கண்டம் விட்டு கடல் வழி பயணத்தில் உயிருடன் இருப்பது சந்தேகம் தான் என்ற வாழ்க்கையில் சிக்கிக் கொண்ட ஒருவன் நீண்ட காலத்திற்கு பிறகு சொந்த மண்ணிற்கு வந்த மகிழ்ச்சியில் மண்டியிட்டு தாய் மண்ணை முத்தமிடும் கதாநாயகன் தமிழ் சினிமாவிற்கு புதிதுதான். இதுவரை கண்டிராத புதுமொழியை ஜனநாதன் காட்சிப்படுத்தியிருப்பார். காதல் படங்கள் என்றாலே க்ளைமாக்சில் நாயகனும், நாயகியும் சேர்ந்துவிட வேண்டும் என்பது சினிமாவில் எழுதப்படாத விதியாக மாறிவிட்டது. இயற்கை படம் பார்வையாளர்களிடம் இத்தைனை ஆண்டுகள் கழித்தும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதற்கு காரணம் மருதுவும் நான்சியும் சேர்வதற்கான அத்தனை காரணங்களும் இருந்தும் பிரிந்து செல்வது தான் இயற்கை.

special memories on the film iyarkai directed by Director Jananathan

காதல் வந்தால் சொல்லியனுப்பு: மருது நான்சியை திருமணம் செய்திருந்தால் இது ஒர வெற்றிப்படம் தான். ரசிகர்களுக்கு பிடித்த காதல் கொண்டாட்டமாகத்தான் இருந்திருக்கும். ஆனால், நான்சி மருதுவை திருமணம் செய்ய சம்மதித்த பிறகும் அவள் முகுந்தன் மீது வைத்திருந்த காதலுக்காக மருது தனது காதலை விட்டுகொடுத்து செல்வது எதார்த்தமாக அமைந்தது. வெண்ணிற இரவுகளை படமாக்குவது என்பது அவ்வளவு எளிதல்ல என பல இயக்குநர்கள் பேசி சிலாகித்துள்ளனர். குறிப்பாக இயற்கை படத்தை பார்த்து இயக்குநர் ஜனநாதனை பாராட்டதவர்கள் எவரும் இல்லை.

சுட்ட மண்ணிலே மீனாக மனம் வெட்டவெளியிலே வாடுதடி... கண்ணீர் கலந்து கண்ணீர் கலந்து
கடல் நீர் மட்டம் கூடுதடி.. உயிரைத் தவிர சொந்தம் இல்லையே, காதலிக்கும் முன்பு இந்த உலகமே எந்தன் சொந்தமானதே... அநாதையான மருதுவிற்கு பொருந்தும் பாடல் மட்டும் அல்ல, காதலை தேடி அலையும் ஒவ்வொரு இதயமும் ஏங்கி தவிக்கும் வார்த்தைகளாக இருக்கிறது. நான்சியின் காதலை குறை கூறுவது தவறு. நான்சி முகுந்தன் சொன்ன ஒரு வார்த்தைக்காக மட்டும் அல்ல அவள் உண்மையாகவே அவனை நேசிக்க தொடங்கிவிட்டாள். அவனுக்காக காத்திருக்கவும் செய்தாள். முகுந்தனும் நான்சியை தேடி வரும் போது காதலோடு தான் வருகிறான். உனக்காக நான்சி காத்திருக்கிறாள் என்று அவனது நண்பன் கூறும் போது அவனது மனம் குளிர்கிறது.

மருதுவும் காதலில் பொய்யும் இல்லை ஏமாற்றமும் இல்லை, கடல் வழியாகவே வந்து கடலிலே தனது பயணத்தை மீண்டும் தொடர்கிறார். நான்சி மருதுவோ, முகுந்தனோ ஒருவரை ஒருவர் ஏமாற்றாமல் தனது காதலுக்காக உண்மையாக வாழ்ந்துள்ளனர். இந்த கலங்கரை விளக்கம் எத்தனையோ காதல்களை பார்த்திருக்கிறது. சிரித்திருக்கும் ,ரசித்திருக்கும் கண்ணீர் விட்டு கதற முடியாத சிலை போலவே கலங்கரை விளக்கம் வெளிச்சம் தருகிறது. அதுபோலே பலரது நினைவுகளையும் சுமந்து கொண்டு தாங்கி நிற்கிறது இயற்கை. இப்படம் தேசிய விருது பெற்றும் மக்களின் இதயங்களை இன்றும் மகிழ்விக்கும் படமாகவே இருக்கிறது. இயக்குநர் ஜனநாதன் மறைந்தாலும் மறக்க முடியாத பேரன்பை கொடுத்து சென்றிருக்கிறார்.

More From FilmiBeat

கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: iyarkai sp jananathan love
English summary
special memories on the 'iyarkai' directed by Director Jananathan: இயக்குநர் ஜனநாதனை நினைவு கூறும் இயற்கை படம் குறித்த பார்வை
Read Entire Article