ARTICLE AD BOX
நம் வீட்டில் இருக்கும் மங்கலகரமான பொருட்களில் கண்ணாடியும் ஒன்று என்று சொல்லப்படுகிறது. கண்ணாடியை தாம்பூலத் தட்டு, சீர்வரிசையில் வைக்கும் பழக்கம் உண்டு. மேலும், கண்ணாடி மகாலக்ஷ்மியின் அம்சம் என்று சொல்லப்படுகிறது. இத்தகைய அதிர்ஷ்டம் பொருந்திய கண்ணாடியை வீட்டில் எங்கே வைக்க வேண்டும்? எங்கே வைக்கக் கூடாது என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
கண்ணாடியை வீட்டின் பூஜையறையில் வைக்கும்போது குலதெய்வத்தின் ஆசி கிடைக்கும். கண்ணாடி பிரதிபலிக்கும் தன்மையைக் கொண்டது. இதை பணம், நகை இருக்கும் இடத்தில் வைக்கும்போது செல்வத்தை அதிகரிக்கும். மேலும், தொழில் செய்யும் இடத்தில் கல்லாப்பெட்டியில் கண்ணாடியை சின்னதாக வைக்கலாம். இதனால் செல்வம் அதிகரிப்பது மட்டுமில்லாமல், தொழில் விருத்தியடையும் என்று சொல்லப்படுகிறது.
வீட்டில் கண்ணாடி வைக்கும்போது அதை குனிந்து பார்ப்பதுப்போல இறக்கமாக வைக்காமல், நிமிர்ந்து பார்ப்பது போல வைக்க வேண்டும். அப்போதுதான் வாழ்க்கையில் மென்மேலும் உயரத்தை அடைய முடியும் என்று சொல்கிறார்கள்.
கண்ணாடியை வடக்கு திசையை நோக்கி வைக்க வேண்டும். ஏனெனில், வடக்கு திசையில்தான் செல்வத்திற்கான அதிபதியான மகாலக்ஷ்மி, குபேரர் இருக்கும் இடமாகக் கருதப்படுகிறது. எனவே, வீட்டில் செல்வம், செல்வாக்கு அதிகரிக்கும். கிழக்குப் பக்கம் சூரிய பகவான் இருக்கும் இடம். அந்த பக்கம் பார்க்க கண்ணாடியை வைக்கும்போது வீட்டின் சக்தி, ஆரோக்கியம் அதிகரிக்கும்.
கண்ணாடியை வீட்டின் நுழைவாயிலில் வைக்கும்போது வீட்டிற்குள் வரும் கண் திருஷ்டியை அது எடுத்துக்கொள்ளும் என்று சொல்லப்படுகிறது. படுக்கையறையில் கண்ணாடி வைக்கும்போது அதில் நம் பிம்பம் தெரிந்தால், அது நெகட்டிவ்வான விஷயமாகக் கருதப்படுகிறது.
முகம் பார்க்கக்கூடிய கண்ணாடி உடைந்தால் அதன் பொருள் என்னவென்றால், நம் வீட்டில் இருக்கும் கண் திருஷ்டி அகற்றப்பட்டு விட்டது என்று அர்த்தம். சிலர் வீட்டின் முன் கண்ணாடி மாட்டுவார்கள். அதற்கான காரணம் அந்த வீட்டிற்கு வரும் கெட்ட விஷயங்களை கண்ணாடி எடுத்துக்கொள்ளும் என்று பொருள்.
செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை பூஜையறையில் இருக்கும் கண்ணாடி உடைந்தால், அந்த வீட்டிற்கு ஏதோ ஒரு விஷயம் தவறாக நடக்கப்போகிறது என்று அர்த்தம். அதை முன்கூட்டியே எச்சரிக்கக்கூடிய அறிகுறியாகத்தான் கண்ணாடி உடைந்ததாகக் கருதப்படுகிறது.
நம் வீட்டில் உடைந்த கண்ணாடியோ அல்லது கண்ணாடி பொருட்களோ இருக்கக் கூடாது. அது எதிர்மறையான விஷயத்தை உருவாக்கி, நல்ல விஷயங்களை தடுக்கும் என்று சொல்லப்படுகிறது. எனவே, நம் வீட்டில் கண்ணாடியை பயன்படுத்தும்போது இந்த விஷயங்களை கவனத்தில் கொள்வது நல்லது.