ARTICLE AD BOX
விவசாயத்தின் பிரதான தானியம் நெல். இந்திய அளவில், நெல் பயிரிடும் விவசாயிகளின் எண்ணிக்கைதான் மிகவும் அதிகம். விவசாயிகள் பலரும் அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் தான் நெல்லை விற்பனை செய்கின்றனர். அவ்வகையில் அறுவடை செய்த நெல்லை விவசாயிகள் எத்தனை வழிகளில் விற்பனை செய்ய முடியும் என்பதை இந்தப் பதிவில் காண்போம்.
நெல் விற்பனையில் ஈரப்பதமும், குறைந்தபட்ச ஆதார விலையும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தற்போதைய நிலவரப்படி நெல்லின் ஈரப்பதம் 17%-க்கு குறைவாக இருக்க வேண்டியது அவசியம். இதற்கு அதிகமாக இருந்தால் அந்த நெல்லை அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய முடியாது. இருப்பினும் பருவம் தவறிப் பெய்யும் மழையால், அறுவடை செய்யப்பட்ட நெல் மணிகள், மழையில் நனையும் அபாயமும் உள்ளது. இதனால், பல ஆண்டுகளாக நெல்லின் ஈரப்பத அளவை உயர்த்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
குறைந்தபட்ச ஆதார விலையைப் பொறுத்தவரை, ஒவ்வொரு ரகத்திற்கும் விலைப் பட்டியலில் மாற்றம் இருக்கும். உதாரணத்திற்கு பொது ரகத்திற்கு தமிழக அரசின் ஊக்கத்தொகை உள்பட ஒரு குவிண்டாலுக்கு ரூ.2405 வழங்கப்படுகிறது. சன்ன ரக நெல்லிற்கு ஊக்கத்தொகை உள்பட ரூ.2450 வழங்கப்படுகிறது. இந்த விலையையும் உயர்த்தி வழங்குமாறு விவசாயிகள் தரப்பில் அவ்வப்போது வேண்டுகோள் விடப்படுகிறது. இந்நிலையில் நெல் விற்பனையில் விவசாயிகளுக்கு பெரிதாக இலாபம் என்று ஒன்றுமே இல்லை. கடன் வாங்கி செலவு செய்ததை அடைக்கவே பாதி பணம் காலியாகி விடும்.
நெல் விற்பனை முறைகள்:
1. கமிஷன் வியாபாரிகளிடம் விற்பது: அறுவடை செய்யப்பட நெல்லை களத்துமேட்டில் வெயிலில் உலர வைக்கும் போதே, கமிஷன் வியாபாரிகள் விலைக்கு கேட்பார்கள். இது ஒரு முறையற்ற வழிமுறை என்பது விவசாயிகள் பலரும் அறிந்ததே. ஏனெனில், குறைவான விலை மற்றும் எடை இழப்பு என பல குளறுபடிகள் இதில் நடக்கின்றன. ஆகையால், விவசாயிகள் இந்த முறையை மட்டும் எப்போதும் தேர்ந்தெடுக்கவே கூடாது.
2. அரசு நெல் கொள்முதல் நிலையங்கள்: நெல் கொள்முதல் நிலையங்களில், நெல்லை விற்பனை செய்ய சில விதிமுறைகள் உள்ளன. முதலில் விவசாயிகள் https://tncsc-edpc.tn.gov.in/ என்ற இணையதளத்தில் முறையாக பதிவு செய்ய வேண்டும். மேலும் நிலத்தின் சிட்டா அடங்கல், பட்டா நகல், வங்கிக் கணக்கு விவரங்கள், ஆதார் எண் மற்றும் மொபைல் எண் உள்ளிட்ட தகவல்களை அளிக்க வேண்டும். பிறகு நெல்லை கொள்முதல் செய்யும் நிலையத்தின் பெயர், முகவரி, தேதி மற்றும் நேரம் உள்பட அனைத்துத் தகவல்களும் விவசாயிகளுக்கு ஒரு குறுஞ்செய்தியாக வரும். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் விவசாயிகள் நெல் மூட்டைகளை கொண்டு சென்று விற்பனை செய்யலாம். இதன் மூலம் கால விரயமும், காத்திருப்பு நேரமும் தவிர்க்கப்படும்.
3. நெல் இருப்பு வைத்துக் கொண்டு விற்பனை: அறுவடை செய்த உடனே நெல்லை விற்காமல், நெல் மூட்டைகளை பத்திரமாக பாதுகாத்து, விலை உயரும் போது விற்பனை செய்யலாம். நெல் மூட்டைகளை பாதுகாப்பாக பராமரிக்க, அரசு குடோன்களை நாடலாம். இங்கு 1 மெட்ரிக் டன் விளைபொருள்களைப் பாதுகாக்க ஒரு நாளைக்கு ஒரு ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படுகிறது.
விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை முழுவதுமாக விற்பனை செய்து விடாமல், குறைந்தபட்சம் 2 நெல் மூட்டைகளை தாமாகவே சந்தையில் விற்பனை செய்ய முன்வர வேண்டும். இதன்மூலம் சந்தைத் தேவைகளை விவசாயிகளால் உணர்ந்து கொள்ள முடியும். பிறகு அதற்கேற்ப அடுத்தடுத்த அறுவடைக் காலங்களில் செயல்பட்டால் நிச்சயமாக அதிக இலாபத்தைப் பெற முடியும்.