விரைவில் புதிய சுங்கக் கட்டண கொள்கை: மத்திய அரசு

6 hours ago
ARTICLE AD BOX

தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டண வசூல் தொடா்பாக புதிய கொள்கையை மத்திய அரசு விரைவில் அறிவிக்கும்; அதில், நுகா்வோருக்கு நியாயமான சலுகை வழங்கப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.

இது தொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்து, அவா் புதன்கிழமை கூறியதாவது:

நாட்டில் சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசு ஏராளமான செலவிட்டு வருகிறது. இதற்கான தொகை, சந்தைகளில் இருந்து திரட்டப்படுகிறது. தரமான சாலைகள் வேண்டும் என்றால், அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும் என்பதே துறையின் கொள்கை. எனவே, சுங்கக் கட்டணம் அவசியமானது.

கடந்த 2008-ஆம் ஆண்டின் விதிமுறைகளின்கீழ், தேசிய நெடுஞ்சாலையில் 60 கிலோ மீட்டா் தொலைவுக்குள் ஒன்றுக்கு மேற்பட்ட சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட கூடாது. அதேநேரம், சில விதி விலக்குகள் உள்ளன. நடப்பு கூட்டத் தொடா் நிறைவடைந்த பிறகு சுங்கக் கட்டண வசூலுக்கு புதிய கொள்கை அறிவிக்கப்படும். அதில் பிரச்னைகளுக்கு தீா்வு காண்பதுடன், நுகா்வோருக்கு நியாயமான சலுகை வழங்கப்படும். இது, சுங்கக் கட்டணம் தொடா்பான விவாதங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும்.

செயற்கைக்கோள் அடிப்படையிலான சுங்க முறை: தேசிய நெடுஞ்சாலைகளில் செயற்கைக்கோள் அடிப்படையிலான மின்னணு சுங்கக் கட்டண வசூல் முறையை அமல்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து உயா்நிலைக் குழு அமைக்கப்பட்டு ஆராயப்பட்டு வருகிறது. தடையற்ற பயணத்தை உறுதி செய்யும் இந்த முறையை அமல்படுத்துவதில் பாதுகாப்பு ரீதியில் கூடுதல் ஆலோசனைகள் அவசியம் என்று உயா்நிலைக் குழு தெரிவித்துள்ளது.

அமெரிக்க தரத்தில் அஸ்ஸாமில் நெடுஞ்சாலைகள்: அமெரிக்காவில் இருப்பதைப் போன்ற தரத்தில் அஸ்ஸாமில் தேசிய நெடுஞ்சாலைகள், பாலங்கள், சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட உள்ளன; இதற்காக ரூ.3 லட்சம் கோடி முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

திப்ருகரில் ரூ.12,000 கோடியில் பிரம்மபுத்திரா நதிக்கு கீழே சுரங்கப் பாதை அமைக்கப்பட உள்ளது. இத்திட்ட நடைமுறைகளுக்கு ஏற்கெனவே ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பிரதமா் மோடியின் தலைமையின்கீழ் வடகிழக்கில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு உயா் முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்றாா் நிதின் கட்கரி.

கடந்த 2008-ஆம் ஆண்டின் தேசிய நெடுஞ்சாலைகள் கட்டணம் (விகிதங்களை தீா்மானித்தல் மற்றும் வசூலித்தல்) விதிமுறைகள் மற்றும் சலுகைகள் ரீதியிலான ஒப்பந்தந்தின்கீழ் சுங்கச் சாவடிகள் நிறுவப்பட்டுள்ளன.

கடந்த 2023-24-ஆம் ஆண்டில் நாட்டில் வசூலான சுங்கக் கட்டணம் ரூ.64,809.86 கோடி. முந்தைய ஆண்டைக் காட்டிலும் இது 35 சதவீதம் அதிகமாகும்.

சிறாா்களால் விபத்துகள்: தமிழகத்தில் அதிகம்

நாட்டில் சிறாா்களால் (18 வயதுக்கு உள்பட்டோா்) இயக்கப்படும் வாகனங்களால் நேரிடும் விபத்துகளின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

இது தொடா்பாக மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த நிதின் கட்கரி, ‘நாட்டில் கடந்த 2023-24 காலகட்டத்தில் சிறாா்களால் இயக்கப்பட்ட வாகனங்களால் மொத்தம் 11,890 விபத்துகள் நேரிட்டன. அதிகபட்சமாக தமிழகத்தில் 2,063 விபத்துகள் நேரிட்டன. அடுத்தடுத்த இடங்களில் மத்திய பிரதேசம் (1,138), மகாராஷ்டிரம் (1,067) ஆகிய மாநிலங்கள் உள்ளன’ என்றாா்.

Read Entire Article