ARTICLE AD BOX
வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில். மினிமலிஸ்ட் லைஃப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இதனை தமிழில் 'சிறுநுகர் வாழ்வு' எனக் கொள்ளலாம். அன்றாட வாழ்க்கைக்கு எது அத்தியாவசிய தேவையோ அதை மட்டும் பயன்படுத்துவது. மினிமலிஸம் என்பது அதிகபட்ச எளிமை அல்லது சிக்கனம் எனக்கொள்ளலாம். இருப்பதைக் கொண்டு வாழ்வது. நாம் வாங்கும் பொருட்களை 100% முழுவதுமாக பயன்படுத்துவது. அவசியமற்ற ஆடம்பர பொருட்களை விலக்கி அழகாக வாழ்வதே மினிமலிஸம். இருக்கும் பொருட்களை செம்மையாக பயன்படுத்துவதே மினிமலிஸம்.
பணக்காரர்கள் ஆவதற்கு இரண்டு வழிகள் உண்டு. ஒன்று நிறைய சம்பாதிப்பது. மற்றொன்று நம்முடைய தேவையற்ற விருப்பங்களை குறைத்துக் கொள்வது. பிறந்தது முதலே நாம் அடுத்த கட்டத்திற்கு நகர்வது குறித்தே போதிக்கப்பட்டுள்ளோம். நமக்கு தேவைகள் அதிகமாகிவிட்டன. இருப்பதை வைத்து வாழ்க்கையை வாழப் பழகவில்லை. உண்மையில் ஒரு பொருளை வாங்குவதில் மகிழ்ச்சி இல்லை அதை எந்த அளவுக்கு பயன்படுத்துகிறோம் என்பதில்தான் உள்ளது என்பதை நாம் அனைவரும் மறந்துவிடுகிறோம்.
நாம் எல்லோரும் மகிழ்ச்சியாக வாழத்தான் ஆசைப்படுகிறோம். ஆனால் அது எப்படி என்பது தெரியாமல்தான் இப்படி ஆடம்பரமாக செலவு செய்வதும், வாழ்க்கை நடத்துவதுமாக இருக்கிறோம். முதலில் நம்மால் எளிமையாகவும், அதே சமயம் மகிழ்ச்சியாகவும் வாழ முடியும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்க நிலையும், எதிர்பாராத இயற்கை பேரிடர் ஏற்படும் அசாதாரணமான சூழ்நிலைகளிலும் சிறுநுகர் வாழ்வால் தைரியமாக எதிர்க்கொள்ள முடியும்.
தேவையில்லாத பொருட்களை வாங்கி வீட்டை நிறைப்பது கூடாது. மிகக் குறைந்த பொருட்களை கொண்டு வாழ்வதுதான் மினிமலிஸ்ட் வாழ்க்கை. ஆசையை குறைத்துக் கொள்ளுதல் மூலம் ஆபத்துக்கள் குறையும் என்பதுபோல் நம்முடைய விருப்பத்தை குறைத்துக்கொண்டால் தேவையற்ற விளைவுகள் குறையும்.
அது போல்தான் டிஜிட்டல் மினிமலிஸம் என்பதும். டிஜிட்டல் மினிமலிஸம் என்பது டிஜிட்டல் விஷயங்களை புறம் தள்ளுவது அல்ல. அவற்றை சரியான நோக்கத்தோடு பயன்படுத்துவதுதான். நாம் பயன்படுத்தும் ஒரு இணையதளமோ, ஆப்போ நம்முடைய வாழ்க்கையை உயர்த்த உதவுமா என்பதை அலசி ஆராய்வதே டிஜிட்டல் மினிமலிஸம்.
மினிமலிசம் என்கிற பெயரெல்லாம் இல்லாத காலத்திலேயே நம்முடைய முன்னோர்கள் அப்படித்தான் சிக்கனமாக வாழ்ந்தார்கள். வீட்டில் தேவையில்லாமல் ஒரு பல்பு எறிந்தாலோ, ஃபேன் ஓடிக் கொண்டிருந்தாலோ கூட ஓடிச்சென்று அணைக்கும் பெரியவர்களை இப்போதும் நம் வீடுகளில் காணமுடியும். இதுதான் நம் வீட்டு மினிமலிஸம்.
இதுபோல் சின்னச் சின்ன சேமிப்புகளின் மூலம் நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்தார்கள். உலகில் மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் என்று அறியப்படுகிற பலரும் கூட மினிமலிஸ்டுகள் தான். சிக்கனமாக, தேவைக்கு அதிகமாக செலவு செய்யாமல் பட்ஜெட் போட்டு வாழ்வதும், வருங்காலத்திற்கு திட்டமிடுவதும் திருப்தியான வாழ்வு வாழ உதவும். இப்படித்தான் நம் பெற்றோர்களும், முன்னோர்களும் வாழ்ந்தார்கள். அதனால்தான் அவர்களால் சிறப்பாக வாழ முடிந்தது.
மினிமலிஸ வாழ்க்கை வாழ்வதால் சுற்றுப்புற சீர்கேடு குறையும். இயற்கை வளங்கள் பாதுகாக்கப்படும். பணவிரயம் போய் சேமிப்பு அதிகரிக்கும். இதனால் பொருளாதாரம் மேம்படும். சில நேரங்களில் நேரத்தை மிச்சம் பிடிக்க அதிக அளவு பணத்தை செலவு செய்கிறோம். ஆனால் மிச்சம் பிடித்த நேரத்தை ஆக்கபூர்வமாகவா செலவு செய்கிறோமா? யோசித்துப் பாருங்கள்.