ARTICLE AD BOX
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே சூலக்கரை மகாத்மா காந்தி நகரைச் சேர்ந்தவர் அமர்நாத் (வயது 38). சிவகாசி தலைமை அஞ்சலகத்தில் அஞ்சல் உதவியாளராகப் பணியாற்றி வந்தார். இவர், கடந்த ஓராண்டுக்கு முன்பு அருப்புக்கோட்டை தலைமை அஞ்சலகத்துக்கு அயற்பணியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அப்போது, கணிணி தொழில்நுட்பத்தை முறைகேடாக பயன்படுத்தி அஞ்சலக பணம் ரூ.5 கோடியை இவரின் தனிநபர் வங்கி சேமிப்பு கணக்கிற்கு வரவு வைத்து முறைகேடு செய்துள்ளார். இது குறித்த புகாரின் அடிப்படையில் விருதுநகர் மாவட்ட சைபர் கிரைம் குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 18.05.2024ம் தேதி வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த அமர்நாத்தை பிடிப்பதற்காக, காவல் கண்காணிப்பாளர் கண்ணன் உத்தரவின்பேரில், விருதுநகர் மாவட்ட சைபர் கிரைம் குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அசோகன் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் மீனா, சார்பு ஆய்வாளர் பாரதிராஜா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில், தலைமறைவாக இருந்த அமர்நாத் அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி அருகாமையில் உள்ள தனியார் விடுதியில் இருப்பதாக தனிப்படை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீஸார் அமர்நாத்தை சுற்றிவளைத்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அமர்நாத் விருதுநகர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார். அவர் முறைகேடு செய்த பணம் ரூ.5 கோடியில் இதுவரையில் ரூ.4,58,90,068 மீட்கப்பட்டது.
சிறுவர்களை வைத்து ஆபாச ரீல்ஸ்; `ஐடியா கொடுத்தவர் பணம் கேட்டு மிரட்டல்' -4 பேர் கைது, நடந்தது என்ன?