ARTICLE AD BOX
திரைக்கலைஞர்களின் பெருங்கனவான ஆஸ்கர் விருது விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சமீபத்தில் நடைபெற்றது. அதில் ஷான் பேக்கர் இயக்கிய ’அனோரா’ திரைப்படம், 5 பிரிவுகளில் விருதுகளைக் குவித்து கவனம் பெற்றது.
சிறந்த நடிகையாக, ’அனோரா’ படத்தின் நாயகி மைக்கி மேடிசனுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. இந்த நிலையில், ‘அனோரா’ திரைப்படத்துக்காக சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை வென்ற மைக்கி மேடிஸன், ’விருது வென்றது கனவுபோல் உள்ளது’ என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர், ”ஆஸ்கர் விருது விழா கனவுபோன்ற இரவாக இருந்தது. நான் இன்னும் கனவு நிலையில் மிதந்து கொண்டிருக்கிறேன். விருது வென்றதை முழுமையாக உள்வாங்கிக்கொள்ள இன்னும் கொஞ்சம் காலம் ஆகும்” என்று ஹாலிவுட் ரிப்போர்டர் இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார், சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் இருந்த அனைவரது நடிப்பையும் மிகவும் ரசித்ததாக மேடிசன் கூறியுள்ளார்.
குறிப்பாக, டெமி மூர் மிகச் சிறந்த மனிதர் என்றும், அவரை ஆஸ்கர் விழாவில் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் மேடிசன் கூறியுள்ளார். ’தி சப்ஸ்டன்ஸ்’ படத்தில் நடித்த டெமி மூர் சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை வென்றுவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மைக்கி மேடிசனுக்கு விருது வழங்கப்பட்டதற்கு ஹாலிவுட் ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.