ARTICLE AD BOX
துபாய்,
துபாய் சர்வதேச விமான நிலையம் உலகின் முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இந்த விமான நிலையம் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான பயணிகளும், சுற்றுலா பயணிகளும் சென்று வருகின்றனர்.
வெளிநாட்டைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் துபாய்க்கு வேலைக்காக வந்தார். அவர் இங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்தார். மேலும் அவர் கடந்த 5 ஆண்டுகளாக சொந்த ஊருக்கு செல்லாமல் பணிபுரிந்து வந்தார். இதனால் அவரது குடும்பத்தினர் அவரை ஊருக்கு வரசொல்லி கட்டாயப்படுத்தினார்கள். ஆனாலும் அவர் ஊருக்கு திரும்பாமல் இருந்து வந்தார்.
இதைத்தொடர்ந்து அவரை அழைத்து வர அவரது சகோதரர் துபாய் விமான நிலையத்திற்கு வருவார். ஆனாலும் அவர் விமானத்தில் ஏறாமல் துபாயில் உள்ள வீட்டிற்கு திரும்பி விடுவார். இதேபோல் அவரது சகோதரர் துபாய் விமான நிலையத்திற்கு வருவதும், அவர் விமானத்தில் ஏறி ஊருக்கு திரும்பாமல், துபாயில் உள்ள வீட்டிற்கு திரும்புவதுமாக இருந்துள்ளார். இதனால் அவரது குடும்பத்தினர் மிகவும் கவலை அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து அந்த வாலிபர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு டாக்டர்கள் பரிசோதனை செய்தார். இதில் அவர் ஏரோபோபியா நோயால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டுபிடித்தனர். ஏரோபோபியா என்பது 'பறக்கும் பயம்' என்று அழைக்கப்படுகிறது. இந்த நோயால் உலகில் ஒருசிலர் பாதிக்கப்படுவதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அதாவது அதீத பயத்தினால் ஏற்படுகிறது. அதாவது விமான பயணத்தில் பாதுகாப்பு மற்றும் வசதி இருந்தபோதிலும், பயம் காரணமாக அவர் விமான பயணத்தை தவிர்த்து வந்துள்ளார்.
சமீபத்தில் அந்த வாலிபர் சொந்த ஊர் திரும்ப துபாய் விமான நிலையத்துக்கு வந்தார். அவர் விமான நிலையத்தில் திடீரென பயத்தில் அங்கும், இங்கும் ஓடுவதை விமான நிலைய அதிகாரிகள் கண்டனர்.
தொடர்ந்து விமான நிலைய அதிகாரிகள் அந்த வாலிபரின் நிலைமை குறித்து அறிந்து அவரின் மனநிலையை தேற்றி அமைதிப்படுத்தினர். பின்னா் அவரை விமானத்தில் ஏற்றி சொந்த ஊர் அனுப்பி வைத்தனர்.
இது குறித்து துபாய் விமான நிலையங்களின் முனைய சேவைக்கான அதிகாரி அகமது அப்துல் பகி கூறுகையில், "வாலிபர் பயம் காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக சொந்த ஊருக்கு திரும்பாமல் இருந்துள்ளார். அவருக்கு ஏரோபோபியா எனப்படும் பய நோய் இருப்பது தெரிய வந்தது. அவரிடம் இருக்கும் பயத்தை போக்கும் வகையில் தேவையான ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் விமானத்தில் சொந்த ஊருக்கு செல்ல சம்மதம் தெரிவித்தார். பின்னர் விமான பயணத்துக்கான டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு சொந்த ஊருக்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டார்" என்று அவர் கூறினார்.
சொந்த ஊருக்கு வாலிபரை பத்திரமாக அனுப்பி வைத்த துபாய் விமான நிலைய அதிகாரிக்கு அவரது குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.