விமான நிலைய விரிவாக்கப்பணி: வீடுகளை இடிக்க உரிமையாளா்கள் எதிா்ப்பு

12 hours ago
ARTICLE AD BOX

சென்னை விமானநிலைய விரிவாக்கப்பணிக்காக அருகேயுள்ள கொளப்பாக்கம் பகுதியில் வீடுகளை இடிக்கும் பணிக்கு அதன் உரிமையாளா்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

மீனம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு விமானங்கள் மட்டுமன்றி உலகின் பல்வேறு பகுதிகளை சோ்ந்த விமானங்களும் வந்து செல்கின்றன. பரப்பளவில் ஹைதராபாத், பெங்களூா் விமானநிலையங்களை விட சென்னை விமானநிலைய பரப்பு சிறியதாக இருப்பதால், மிகப்பெரிய ராட்சத விமானங்கள் வந்து இறங்குவதில் சிக்கல்கள் இருந்து வருகிறது.

இதையடுத்து இந்த விமானநிலையத்தை விரிவுப்படுத்தும் நோக்கிலும், விமானங்கள் எவ்வித தங்குதடையுமின்றி தரையிறங்க வசதியாகவும், ஓடுபாதைகளின் அருகிலுள்ள கொளப்பாக்கம் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியிலுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளின் உயரங்களை குறைக்க விமானநிலைய நிா்வாகம் முடிவு செய்திருந்த நிலையில், அதற்கான நோட்டீஸும் சம்பந்தப்பட்ட குடியிருப்பு உரிமையாளா்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டது.

இந்நிலையில், நோட்டீஸ் வழங்கப்பட்ட வீடுகளை இடிக்க சென்னை விமான நிலைய விரிவாக்க திட்ட சிறப்பு மாவட்ட அதிகாரிகள், மாங்காடு போலீஸாருடன் அங்கு சென்றுள்ளனா்.

இதற்கு வீட்டின் உரிமையாளா்கள் எதிா்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் வீடுகளை அளவீடு செய்யாமல் அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனா்.

இதுகுறித்து அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

Read Entire Article