ARTICLE AD BOX
சினிமாவுக்கு தேவை இருக்கிறதோ இல்லையோ பெண்கள் மீதான பாலியல் வன்முறையை கதையாக திரையில் சொல்வது பேஷன் ஆகி விட்டது. பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறையை பின்புலமாக கொண்டு உருவாகியுள்ள படம்தான் தருணம். தேஜாவு படம் மூலம் ஓரளவு கவனம் ஈரத்த அரவிந்த் ஸ்ரீனிவாசனின் இரண்டாவது படமாக வந்துள்ளது.
ஸ்மிருதி வெங்கட்டும், கிஷன் தாஸும் நண்பர்களாக பழகி காதலர்களாக மாறியவர்கள். ஸ்மிருதியின் அப்பார்ட்மெண்ட்டில் வசிக்கும் ஒரு இளைஞர் இளம் பெண்களை தவறாக பார்க்கும், நடந்து கொள்ளும் குணம் கொண்டவர். ஸ்மிருதியிடமும் தவறாக நடந்து கொள்ள முயலும் போது நடக்கும் தாக்குதலில் எதிர்பாராத விதமாக கொல்லப்படுகிறார். கிஷனும், ஸ்மிருதியும் இந்த கொலையை மறைக்க முயல்கிறார்கள். இந்த கொலையை அந்த தருணத்தில் மறைக்க முடிந்ததா? அல்லது கொலை வெளியில் தெரிந்ததா? என்பதுதான் தருணம் படத்தின் கதை.
ஒரு அப்பார்ட் மெண்டில் கொலை, கொலையை மறைக்கும் முயற்சி என பரபப்பாக கதை சென்று இருக்க வேண்டும் அல்லவா? ஆனால் இந்த பரபரப்பு காட்சிகளில் மிஸ் ஆகிறது. கொலை செய்யப்பட்டவரின் தாயார் தன் மகனை தேடி வரும் காட்சி மட்டும் சிறிது பரபரப்பாக உள்ளது. படத்தின் முதல் பாதியில் ஹீரோவின் பலத்தை காட்டும் சண்டை காட்சிகளும், ஹீரோவின் பின் புலத்தை பற்றி விளக்கும் காட்சிகளுமாகவே அமைந்துள்ளது. சீக்கிரம் கதைக்குள் வந்தால் பரவாயில்லை என்று நம்மை யோசிக்க வைக்கிறது.
ஸ்மிருதி வெங்கட் இதற்கு முன் பல படங்களில் நடித்திருந்தாலும், இந்த படம் ஸ்மிருதிக்கு நடிப்பு திறமையை வெளிக்கொணர ஒரு நல்வாய்ப்பாக வந்திருக்கிறது. காதல், கோபம், என அனைத்தையும் சரியான கலவையில் தந்தித்திருக்கிறார். ஹீரோ கிஷனுக்கு இன்னும் நடிப்பில் பல தூரம் பயணிக்க வேண்டும். தர் புகா சிவா பின்னணியில் முன்னணி வகிக்கிறார். லொகேஷன் குறிப்பிட்ட ஒரு சில இடங்களில் மட்டுமே இருந்தாலும், ஒளிப்பதிவு இதற்கு ஏற்றார் போல் சிறப்பாக உள்ளது.
பாலியல் வன்முறை பிரச்சனைகளை மலையாளம் உட்பட வேறு சில மொழிப் படங்களில் வித்தியாசமாக அணுகுகிறார்கள். இதுபோன்ற பிரச்சனைகளை கதையாக கையில் எடுக்கும் நம் தமிழ் சினிமா இயக்குனர்கள் இதை மனதில் கொள்ள வேண்டும். கவனித்தால் நல்லது.