ARTICLE AD BOX
இரண்டாண்டுகளுக்கு முன்பு பிரபல இயக்குனர்களான புஷ்கர் - காயத்ரி எழுத்தில் 'சுழல்' வெப் தொடர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது மீண்டும் இந்த இருவர் எழுத்தில் சுழல் - சீசன் 2 (The vortex ) வெப் தொடர் அமேசான் பிரைம் வீடியோ ஒடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
எட்டு எபிசோடுகள் கொண்ட இந்த தொடரை பிரம்மா மற்றும் சர்ஜுன் இணைந்து இயக்கி உள்ளார்கள். போலீஸ்காரராக இருக்கிறார் சக்கரை (கதிர்). இவரது தோழி நந்தினி (ஐஸ்வர்யா ராஜேஷ்) ஒரு கொலை செய்து விட்டு சிறையில் இருக்கிறார். இவரை காப்பாற்ற முயல்கிறார் சக்கரை. காப்பாற்ற முயலும் போது, எட்டு இளம் பெண்கள் ஒரு கொலை வழக்கில் சிக்கி சிறையில் இருப்பதை பார்க்கிறார். இவர்கள் ஏன் கொலை செய்தார்கள் என விசாரணை செய்கிறார்.
இதற்கிடையில் சமூக போராளியாக இருக்கும் வழக்கறிஞர் (லால்) ஒரு பிரச்சனையில் சிக்கும் சிறுமிகள் சிலரை மீட்கிறார். ஒரு நாள் மர்மமான முறையில் கொலை செய்ய படுகிறார். யார் இந்த சிறுமிகள்? எட்டு பெண்களுக்கும் இந்த கொலைக்கும் என்ன தொடர்பு? இந்த சுழலில் சிக்கி கொண்டது யார் என விடை சொல்கிறது சுழல் 2.
சூழல் தொடரின் முதல் பாகத்தில் ஒவ்வொரு எபிசோட் முடிவிலும் ஒரு ட்விஸ்ட் இருக்கும். முக்கிய கதைக்கு இணையாக கிளைகதைகள் இடம் பெற்றிருக்கும். இந்த கிளைக் கதைகள் சுவாரசியமாகவும், ஒரு புள்ளியில் முக்கிய கதையுடன் இணையும். இதை போல் ட்விஸ்ட்களோ அல்லது கிளைக் கதைகளுக்கான முக்கியத்துவமோ இந்த இரண்டாம் சீசனில் இல்லை. திரில்லர் உணர்வும், சுழல் முதல் பாகத்துடன் ஒப்பிடும் போது இந்த இரண்டாம் பாதியில் குறைவாகவே உள்ளது.
எடுத்து கொண்ட கதைக்கும், எழுதிய திரைக்கதைக்கும் ஐந்து எபிசோடுகளே போதுமானது. எட்டு எபிசோடுகள் வரை இருப்பது சற்று அயர்ச்சியை தருகிறது. இந்த கதையை மூன்று மணி நேர திரைப்படமாக எடுத்திருந்தால் கூட இன்னும் ரசித்திருக்கிலாம். இருப்பினும் புஷ்கர் - காயாத்ரி பெண் குழந்தைகள் சந்திக்கும் மோசமான சமூக அவலத்தை பற்றி அழுத்தமாக பதிவு செய்து இருக்கிறார். பெண் குழந்தைகளுக்கு நாட்டார் பெண் தெய்வங்கள் பெயரை வைத்திருப்பது சிறப்பு. இதற்காக இருவரையும் பாராட்டலாம்.
பொதுவாக சாம். CS இசையமைக்கும் படங்களில் இசைக்கும் படம் நகரவதற்கும் தொடர்பே இருக்காது. ஆனால் இந்த தொடரில் இசை கதையுடன் இணைந்து பயணிக்கும் 'அதிசியத்தை' செய்து காட்டி இருக்கிறார் சாம். திருச்செந்தூர் சூரசம்ஹாரம் படமாக்கபட்ட விதம் அருமை. ரிச்சர்ட் கெவினின் ஒளிப்பதிவு சூரசம்ஹார நிகழ்வை நேரில் பார்ப்பது போல் உணர்வை தருகிறது.
தொடரில் நிறைய கதாபாத்திரங்கள் வந்தாலும், லாலின் நடிப்பு தனித்துவமாக இருக்கிறது. வழக்கறிஞராக, அப்பாவாக நடிக்கும் போது தான் உருவத்தில் மட்டும் அல்ல நடிப்பிலும் உயரம் தான் என உணர்த்தி விடுகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் குற்ற உணர்வில் அழுது பொங்கும் போது தனித்துவமாக தெரிகிறார். கதிர் அதிகமாகவும் இல்லாமல் குறைவாகவும் இல்லாமல் அளவோடு நடித்திருக்கிறார்.
இசை, நடிப்பு, ஒளிப்பதிவு , சம கால சமூக பிரச்சனை என அனைத்து அம்சங்களும் இந்த சுழல் 2 தொடரில் சிறப்பாக இடம் பெற்றிருந்தாலும் திரில்லர் கதைக்கான சுவராசியமான திரைக்கதையை அமைக்காததால் ஒரு அவரேஜ் வெப் தொடராக மட்டுமே வந்துள்ளது.